என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • நொய்யல் ஆற்றின் குறுக்கில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது.
    • வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. கொங்கு சோழர் காலத்தில் இங்கு நொய்யல் ஆற்றில் பாயும் நீரை தடுத்து இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை நிரந்தரமாகவும் நல்ல முறையிலும் பயன்பட வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியான நல்லம்மாள் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது ஐதீகம். அவ்வகையில் அணையின் மையப்பகுதியில் அச்சிறுமிக்கு கோவில் அமைத்து நல்லம்மன் என்ற பெயரில் அப்பகுதியினர் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு வழிபாடு நடத்தும் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும், மற்றொரு பிரிவினர் கார்த்திகை மாதம் தீபத் திருநாளுக்கு அடுத்த நாளும் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அவ்வகையில் வருகிற 27-ந்தேதி, கார்த்திகை பவுர்ணமி அன்று நல்லம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக கோவில் வளாகம் முழுவதும் முழுமையாக வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி நடக்கிறது. மேலும் கார்த்திகை பவுர்ணமி அன்று இரவு முதல் விடிய விடிய வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.
    • இதுவரை 11 வார சம்பளம் வழங்கப்பட்டு விட்டது

    திருப்பூர்: 

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்பட கிராம ஊராட்சிகள் வாயிலாக 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் முட்புதர், செடி கொடிகளை அகற்றுவது, குளம், குட்டையோரம் மரக்கன்று நடுவது, நர்சரி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு மண் வேலைகள் இத்திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரந்தோறும் புதன்கிழமை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 16 வாரமாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. இதனால் 100 நாள் திட்ட பணியாளர்கள் விரக்தியில் இருந்தனர். இந்நிலையில் படிப்படியாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 11 வார சம்பளம் வழங்கப்பட்டு விட்டது என கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை தொடங்கி உள்ளது.

    திருப்பூர்:

    10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் விபரங்களை, வருகிற 30-ந்தேதிக்குள் சரிபார்க்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    சமீபத்தில் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. தேர்வு நடக்கும் நாள் குறித்த விபரம் தெரிய வந்துள்ள நிலையில், தேர்வுக்கான முதல்கட்ட ஆயத்த பணிகளை தேர்வுத்துறை தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக எமிஸ் தளத்தில் தேர்வர் பெயர், பிறந்த தேதி, போட்டோ உள்ளிட்ட 14 தகவல்களை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர் விவரங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய பிறகு திருத்தங்கள் கோரி தேர்வுத்துறைக்கு விண்ணப்பம் அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

    எனவே ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் உடனடியாக திருத்தம் மேற்கொண்டு நவம்பர் 30-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வுத்துறை இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், தேர்வுத்துறை இயக்குனரகத்தின் அறிவுறுத்தல்கள் குறித்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது. பெயர் பட்டியலின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சிடப்படும் என்பதால் தலைமை ஆசிரியர் நேரடி கவனத்தில் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படு கிறது.
    • கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும்.

    உடுமலை:

    மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை சீற்றத்தினால் பயிர்கள் பாதித்து விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடு செய்யும் வகையில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் வட்டாரத்தில், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படு கிறது.

    நடப்பு ராபி பருவத்தில் நடவு முதல் அறுவடை வரையிலான நிலைப்பயிர்களில் ஏற்படும் வறட்சி ,வெள்ளம், பூச்சி நோய்த்தாக்குதல், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல், சூறாவளி, இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புக்கு இத்திட்டத்தின் கீழ் காப்பீடு பெறலாம். துங்காவி குறுவட்டத்தில் தக்காளி, வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், மடத்துக்குளம் குறுவட்டத்தில் தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் வருகிற 2024 பிப்ரவரி 28 வரை இத்திட்டத்தில் சேரலாம்.

    மடத்துக்குளம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம் பயிர்க்காப்பீடு செய்ய வருகிற 2024 ஜனவரி 31 கடைசி நாளாகும். காப்பீட்டு திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள், 95 சதவீதம் தொகையும், விவசாயிகள் பங்களிப்பு தொகை 5 சதவீதம் ஆகும். வெங்காயம் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,228, தக்காளி ரூ. 1,495- பிரீமியம் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்து முழுமையான பாதிப்பு ஏற்பட்டால், வெங்காயம் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 44 ஆயிரத்து 550 ரூபாயும், தக்காளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 29 ஆயிரத்து 500 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இ - சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ளலாம். பங்களிப்பு கட்டணத்தை செலுத்தியதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்டால் 72 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி 18001035490 என்ற எண்ணில் தெரிவிக்க வேண்டும்.

    மேலும் கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத்துறை வருவாய்த்துறை மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கூட்டாய்வு மேற்கொண்டு பயிர்ச்சேத மதிப்பீட்டு அறிக்கை அளித்த பின்னர் இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 63821 29721 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.
    • யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை-மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்தநிலையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வனப்பகுதியில் சாரல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியும் பசுமைக்கு திரும்பியுள்ளது. ஆனால் ஆறுகளில் நிலையான நீர்வரத்து இல்லாததால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து அமராவதி அணை பகுதியில் முகாமிட்டு வருகின்றன.

    மேலும் யானைகள் குட்டிகளுடன் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. எனவே யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

    யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் புதிய நடைமுறை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும்
    • 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    அடுக்குமாடி குடியிருப்புகளை பதியும்போது கட்டிடம் மற்றும் அடிநிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாகப் பதிவு செய்யும் புதிய நடைமுறை வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி ரூ.50 லட்சம் வரை உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை தற்போதுள்ள 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வையை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ரூ.20 லட்சம் வரையிலான புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோர் விற்பனை கிரைய ஆவணம் பதிய முத்திரைத் தீர்வை 4 சதவீதம், பதிவுக் கட்டணம் 2 சதவீதம் செலுத்தினால் போதும். இந்த தகவலை பதிவுத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

    • ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
    • வாரச்சந்தையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் ராஜேந்திரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

    குடிமங்கலம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படுகின்ற தண்ணீரில் முறைகேடு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். ஒரு சில ஊராட்சிகள் முறைகேடாக தண்ணீரை எடுத்து வருகின்றன. உடுமலை வாரச்சந்தையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் ராஜேந்திரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சந்தை வளாகத்தில் நடைபெற்று வருகின்ற கட்டிடங்கள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதி வழியாக செல்கின்ற பி.ஏ.பி. கால்வாய் கரையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    உடுமலை-பழனி சாலையில் உள்ள அண்ணா குடியிருப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. வேகத்தடுப்புகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணிக்கடவு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் பாதை பராமரிப்புக்காக தென்னை மரத்தின் ஓலைகளை அடிக்கடி வெட்டுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. உடுமலை நில அளவை துறை செயல்படாத துறையாகவே உள்ளது. உடுமலை பகுதியில் நில மோசடி அதிக அளவில் உள்ளது. எனவே ஆங்காங்கே உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மீது தனி கவனம் செலுத்துவதுடன் நில மோசடியை தடுக்க வேண்டும். துங்காவி அருகே கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளால் சாலையோரத்தில் உள்ள மல்பெரி செடிகள் தூசி படிந்து வளர்ச்சி பாதித்தும், பட்டுப்புழுக்கள் செத்தும் விடுகிறது.

    குடிமங்கலம் பகுதியில் மாட்டுச்சந்தை, ஆட்டுச் சந்தை அமைத்து தர வேண்டும்.தேங்காய் பருப்பு கொள்முதலை அதிகரிக்க வேண்டும். குடிமங்கலம் பகுதியில் காட்டுப் பன்றிகள் வாழை, மக்காச்சோளம், பட்டு பூச்சி செடி உள்ளிட்டவற்றை நாசம் செய்து வருகிறது. அவற்றை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சேரிமலை- பெதப்பம்பட்டி ரோட்டில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலை குறுகிப்போனது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் சுந்தரம் (உடுமலை), பானுமதி (மடத்துக்குளம்), கார்த்திகேயன் (குடிமைப்பொருள்) உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பவானிசாகர் அணை தண்ணீர் திறப்பு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும்
    • ஜனவரி மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து நீர் விடப்படுமா என்ற அச்சம் நிலவி வந்தது.

    முத்தூர் :

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு பவானிசாகர் அணை தண்ணீர் திறப்பு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு அரசு அயலக புலம்பெயர் தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள கீழ்பவானி கால்வாய் பாசனத்தில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரில் முதல் முறை மற்றும் 2-வது முறை என்று திட்டம் உள்ளது. இதன்படி அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 15- ந் தேதி விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கும், ஜனவரி 5- ந் தேதி எள், நிலக்கடலை, சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகிய எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் ஆகும். இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் விடப்பட்ட போது பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால் 2-வது முறைக்கு விவசாயிகள் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வதற்கு வழக்கம் போல் ஜனவரி மாதம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து நீர் விடப்படுமா என்ற அச்சம் நிலவி வந்தது.

    ஆனால் தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் குறிப்பாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிக அளவில் வரக்கூடிய நீலகிரி மாவட்ட வன பகுதிகளில் கடந்த 2 வார காலமாக நல்ல மழை பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 77 அடியை தாண்டி உள்ளது. இந்த நிலையில் கீழ்பவானி பாசன விவசாயிகளின் அச்சத்தை போக்கும் வகையில் அடுத்த வேளாண்மை சாகுபடிக்கு திட்டமிடல், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இப்பகுதிகளில் தொடங்கப்பட்ட நஞ்சை சம்பா நெல் பயிர் ஆரம்பத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் நெல் நாற்று நடவு தள்ளிப்போன காரணம் ஆகியவற்றினால் நீர் தேவையை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி 5-ந் தேதி உறுதியாக பவானிசாகர் அணையில் இருந்து 2-வது முறை கீழ்பவானி பாசன எண்ணெய் வித்து பயிர் சாகுபடிக்கு உரிய தண்ணீர் திறப்பு தேதியை உடனடியாக அறிவிக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.
    • சின்ன வெங்காய நாற்றுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர்.

    குண்டடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் சுற்று வட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.

    இது குறித்து ஒரு விவசாயி கூறியதாவது:- தற்போது பெய்துள்ள மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். 1 கிலோ விதை ரூ.5ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது.

    இந்த பயிர்கள் 40 முதல் 45 நாட்களில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் திருப்பூா் மாவட்டம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்தும் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீா் வந்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனா். அந்த வகையில் தற்போது சின்ன வெங்காயத்தின் தேவை அதிகம் இருப்பதாலும், போதிய விலை கிடைப்பதாலும் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அதன்படி தேனி, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பல்லடம் பொங்கலூர், பூளவாடி, உடுமலை உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர். இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது
    • உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில், திறமையான மனிதவளத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல இடங்களில் இந்த மையம் அமைக்கப்பட்டு ஆடை உற்பத்தி, தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இவை தொழில்துறைக்கு அதிக உற்பத்தி மேலாண்மை மற்றும் மேற்பார்வை திறனை வழங்குகிறது. தொழில் துறையினருக்கு உற்பத்தியை அதிகரிக்க மட்டுமில்லாமல் திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் பயிற்சி வழங்கப்படுகிறது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சிலுடன் இணைந்து திருப்பூர் மண்டலத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சியை வழங்கி வருகிறது. சிறப்பு தையல் எந்திர ஆபரேட்டர், மெர்ச்சண்டைசிங் பயிற்சி வகுப்புகள் திருப்பூரில் ஆயிரம் பேருக்கு வழங்க உள்ளனர். இந்த பயிற்சி திட்டத்தின் தொடக்கவிழா வருகிற 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக கலையரங்கத்தில் நடக்கிறது. இதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்குகிறார். ஆயத்த ஆடை மேட் அப்ஸ் மற்றும் வீட்டு அலங்காரத்துறை திறன் கவுன்சில் தலைவர் சக்திவேல், கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் முதல் குழுவில் படிக்க தேர்வான பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

    • செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.
    • குழந்தைகளை தனியே அனுப்ப முடிவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனையும் புகார் தெரிவிக்கின்றனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பிலிபாளையம், செந்தூரன் காலனி, அம்மா பூங்கா, உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன.

    மேலும் அங்குள்ள இறைச்சி கடைகளில் வீசப்படும் மாமிசங்களை தின்றுவிட்டு தெருவில் சண்டையிடுகின்றன. அத்துடன் வீடுகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை இழுத்துச் செல்வதாகவும், தனியே நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்களை விரட்டுவதாகவும்,

    மேலும் இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குரைப்பதால் சரியாக தூங்க முடிவதில்லை என்றும், குழந்தைகளை தனியே அனுப்ப முடிவதில்லை என்றும் பொதுமக்கள் வேதனையும் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்களை பரிதவிக்க விடும் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்குதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81- ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. இதற்கிடையே திருமணம் போன்ற விஷேச நாட்களில் இந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை 60 ஆயிரத்தை எட்டுகிறது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) சுப முகூர்த்த நாள் என்பதால் கார் உள்ளிட்ட வாகனங்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்த வண்ணம் சென்றது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. இதற்கிடையே போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் -ஒழுங்கு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். அப்படி இருந்தும் அதிகமான வாகன போக்குவரத்தால் பல்லடம் நகரை கடந்து செல்வதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேலானது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    ×