என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.
    • காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் கோவில்வழி அருகேயுள்ள அமராவதிபாளையத்தில் ஒவ்வொரு வாரம் திங்கள்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது.காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை சந்தை நடந்தது. பெருந்தொழுவு சாலையில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, வாகனங்கள் இடையூறாக நிற்பதாக தொடர் புகார்கள் வந்ததையடுத்து, சந்தை நடக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

    காலை 7 மணிக்கு சந்தை நுழைவு வாயில் திறக்கப்படும். மாடுகளுடன் வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மதியம் 12 மணிக்கு சந்தை நிறைவு பெறும். சந்தை அருகே இரண்டு ஏக்கர் மைதானத்தில் விரிவான பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டு மைதானம் திறக்கப்பட்டது.

    • இரண்டு மாதங்களாக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
    • மணிகண்டபிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    கரூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் பயிற்சிக்காக கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

    அப்போது அதே மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வரும் வால்பாறையை சேர்ந்த மணிகண்டபிரபு (21) என்பவர் நர்சிங் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த மாணவி திருமுருகன்பூண்டி போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து லேப் டெக்னீசியன் மணிகண்டபிரபுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
    • தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி .ஆர் .குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில கழக துணை செயலாளர் அக்பர், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் பொன் இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் திருப்பூர் மாவட்ட தேமுதிக.வை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி அளவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால் தள்ளாடி வருகிறது.

    அதிலும் கூடுதலாக வர்த்தக நிறுவனங்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலான பீக் ஹவர் என சொல்லப்படும் இந்த நேரங்களில் மேலும் அபரிமிதமான கட்டணத்தை உயர்த்தி தொழில் துறையினரையும் தொழிலாளர்களையும் வேதனை அடைய செய்திருக்கிறது.

    இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. ஆகவே தமிழக அரசு இந்த பீக் ஹவர் மின் கட்டண உயர்வு என்பதை வாபஸ் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    தமிழகத்தில் தேர்தல் காலத்தில் திமுக., சார்பில் அனைத்து மகளிருக்கும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆட்சியையும் பிடித்தது .ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு தற்போது விண்ணப்பங்களும் வழங்கி வருகின்றனர்.அதிலும் குளறுபடி நீடிக்கிறது .இதை தமிழக அரசு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளறுபடிகளை களைந்து அனைத்து மகளிருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை ரூ.1000த்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தேமுதிக., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில்கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.
    • கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில்கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். இது குறித்து அரசு போக்குவரத்துகழகம் திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிட், திருப்பூர் மண்டலம் சார்பில் திருப்பூரிலிருந்து ஒவ்வொரு வாரமும் வார இறுதிநாட்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் திருப்பூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மதுரை, தேனி திண்டுக்கல், திருச்சி மற்றும் சேலம் போன்ற ஊர்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடபேருந்துகளுடன் கூடுதலாக 35 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திருப்பூர் மண்டல பொது மேலாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார். 

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும்.
    • துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 11-ந்தேதி ( வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தந்தை பெரியார்நகர் மற்றும் முருகம்பாளையம் மின் பாதைகளில் மின் வினியோகம் தடைபடும்.

    இதனால் முருகம்பாளையம், பாரக்காடு, சூரியநகர்,கோடீஸ்வரா நகர், கருவேலங்காடு, சிவசக்திநகர், தந்தை பெரியார் நகர், ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைபடும் என்று திருப்பூர் மின் செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

    • புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் அருகே திருமலைபாளையத்தில் உள்ள செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக அவினாசி தன்னார்வ அமைப்பினருக்கு புகார் வந்தன. புகாரின் பேரில் தன்னார்வ அமைப்பின் இயக்குனர் தங்கவேல் மற்றும் அலங்கியம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 2 குழந்தை தொழிலாளர்கள் தாராபுரம் அருகே உள்ள திருமலைபாளையம் தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில் அரசனுக்கு புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் போலீசார் 2 குழந்தை தொழிலாளர்களையும் மீட்டனர்.

    இதனை தொடர்ந்து அவர்களை திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு முன்பு ஆஜர்படுத்தி, அவர்களது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த சிறுவர்கள் 2 பேரும் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தாராபுரத்தை அடுத்த திருமலை பாளையம் தனியார் செங்கல் சூளையில் குழந்தை தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது வருவாய்த்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.

    • காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர்.
    • ஆட்டுப்பட்டி அருகே இரும்பு சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தூக்கிச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலைப்பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் கூண்டுகளை வைத்து சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பல்வேறு இடங்களில் சிறுத்தையை பார்த்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து வந்தனர். அந்த இடங்களில் வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலையடிவார பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகள் மாயமாகி வந்தது. மேலும் ஆட்டுப்பட்டி அருகே இரும்பு சங்கிலியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாய்களையும் சிறுத்தை தூக்கிச்சென்று பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்குள் வனத்துறை விரைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என ஊதியூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

    சிறுத்தை ஊதியூர் வனப்பகுதியில் தினசரி வந்து போகும் இடங்கள், தண்ணீர் குடிக்க வரும் இடங்கள், கூண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் சிறுத்தையின் கால்தடங்கள் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் 10 நாட்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது அதிலும் சிறுத்தை குறித்த காட்சிகளும் கிடைக்கவில்லை.

    ஒருவேளை சிறுத்தை வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் அல்லது மலையின் உச்சிக்கு சென்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்எனினும் சிறுத்தை இன்னமும் ஊதியூர் மலைப்பகுதியில்தான் பதுங்கி உள்ளதா அல்லது வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து விட்டதா என கண்டுபிடிக்க வனத்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை குறித்த உறுதியான தகவலை அளிக்க வேண்டும் என ஊதியூர் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் அபின் சாகுபடியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையை தடுக்கும் வகையில் கலவரமாக மாறி வன்முறை தொடர்கிறது.
    • கோலாகல சீனிவாசனுக்கு சிந்தனையாளர் பிரிவு சார்பில் நினைவுபரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    பா.ஜனதா கட்சி சிந்தனையாளர் பிரிவு சார்பாக பொதுசிவில் சட்டம், மணிப்பூர் விவகாரம் உண்மை நிலவரம் என்ன? என்பது குறித்த சிந்தனை கருத்தரங்கம் திருப்பூர் -காங்கயம் ரோட்டில் உள்ள காயத்ரி மகாலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை தாங்கினார்.

    சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் குப்புராஜ் முன்னிலை வகித்தார். மூத்த பத்திரிகையாளர் கோலாகல சீனிவாசன் பங்கேற்று பேசும்போது, திருமணம், திருமண பதிவு, வயது, திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசு, தத்தெடுப்பு, காப்பாளர், சொத்துரிமை இவை அனைத்து சமயத்தினருக்கும் பொதுவான விதிமுறைகளை கொண்டதே பொதுசிவில் சட்டமாகும்.

    மணிப்பூர் மாநிலத்தில் அபின் சாகுபடியை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கையை தடுக்கும் வகையில் கலவரமாக மாறி வன்முறை தொடர்கிறது. இந்த சம்பவத்துக்கு பிறகு காவல்துறையில் கூட இனப்பிரிவு ஏற்பட்டு இருக்கிறது.

    வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுறுவலை தடுக்க பா.ஜனதா அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தாது என்றார். பின்னர் கோலாகல சீனிவாசனுக்கு சிந்தனையாளர் பிரிவு சார்பில் நினைவுபரிசாக செங்கோல் வழங்கப்பட்டது.

    • கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா்.
    • திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

    திருப்பூா்:

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணா்வு தொடா்பான சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தாவரவியல் துறை சாா்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்துக்கு,கல்லூரி முதல்வா் ஆா்.எழிலி தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் ஆா்.குருசாமி வரவேற்புரையாற்றினாா்.

    இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சவூதி அரேபியா தபுக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் முகமது அலிசயத், கடல் சாா்ந்த இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது என்ற தலைப்பில் பேசினாா்.இந்தக் கருத்தரங்கில், தாவரவியல் துறை செயலாளா் அபிநயா, கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர்.
    • சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (25) ஆகியோர் வந்தனர். அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிக்கிறீர்கள் என்று கேட்டனர். மேலும் சிறுமியின் காதலனை சரமாரி தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் சிறுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றனர். காளி வேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக செல்லும்போது திடீரென 3 பேரும், சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன், பல்லடம்- கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காளி வேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது, ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்தீபன் ஆகியோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர். சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வழக்கமான சேலைகள் போல் இல்லாமல் பல்வேறு வடிவங்கள் சேலையில் இடம் பெறுவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.
    • கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது.

    உடுமலை:

    தமிழகத்தின் பாரம்பரியமான தொழில்களில், கைத்தறியால் நெய்யப்படும் நெகமம் கைத்தறி சேலையும் ஒன்று. புவிசார் குறியீடு பெற்று, தனித் தன்மையுடனும், தரத்தின் மூலமும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது கைத்தறி சேலை. அதேசமயம், கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகமான பேட்டு பார்டருடன் கூடிய சேலையை, முறைகேடாக விசைத்தறியால் உற்பத்தி செய்து விற்பனை செய்வதால் தனித் தன்மையை இழந்து நிற்கிறது கைத்தறி சேலைகள்.

    நெகமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக கைத்தறி நெசவு மூலம் கைத்தறி சேலை உற்பத்தி செய்து வருகின்றனர். வழக்கமான சேலைகள் போல் இல்லாமல் பல்வேறு வடிவங்கள் சேலையில் இடம் பெறுவதால் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது.

    இங்கு தயாரிக்கப்படும் சேலைகள் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள்,வெளிநாடுகள் வரை அனுப்பி வைக்கப்பட்டன. கொரோனா ஊரடங்கு, நூல்விலை ஏற்றம், விற்பனை சரிவு என அடுத்தடுத்த நெருக்கடிகளால் தற்போது கைத்தறி சேலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்களை காக்க வேண்டும் என்ற நோக்கில் 11 ஜவுளி ரகங்களை கைத்தறி மூலம் மட்டுமே நெய்ய வேண்டும் என்று கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டம் வரையறுத்துள்ளது.

    தமிழ்நாடு கைத்தறி ஆணையர் மூலம் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி,துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி,போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமக்காளம், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் உள்ளிட்ட 11 ரகங்களை கைத்தறியில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் பேட்டு பார்டருடன் கூடிய சேலை கைத்தறிக்கென ஒதுக்கப்பட்டுள்ளதால் இவற்றை விசைத்தறி மூலம் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். விதிமுறை மீறி இந்த ரகங்களை உற்பத்தி செய்தாலோ, கடைகளில் விற்பனை செய்தாலோ 6 மாதம் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் சட்டம் வகை செய்துள்ளது.

    எனினும் நடைமுறையில் இந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப் படுவதில்லை என்பதால் விசைத்தறியில் பேட்டு பார்டருடன் கூடிய சேலை உற்பத்தி செய்யப்பட்டு கைத்தறி சேலை என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்துகின்றனர் கைத்தறி நெசவாளர்கள்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறும்போது, கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய பேட்டு பார்டருடன் கூடிய சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்வது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடைபெறுகிறது. பல இடங்களில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி நடக்கிறது. அதிகாரிகளுக்கு தெரியாமல் இது நடைபெற வாய்ப்பில்லை.

    பெயரளவுக்கு ஆய்வு நடத்தி, ஆண்டுக்கு ஒரு சிலர் மீது மட்டும் வழக்குப் பதிவு, குறைந்த அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால் விசைத்தறியில் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதை நிரந்தரமாக தடுக்க முடியாத நிலை தொடர்கிறது. பாரம்பரியம் மிக்க கைத்தறி ரகங்களை பாதுகாக்க வேண்டுமானால் விசைத்தறி சேலை உற்பத்தியைத் தடுக்க அதிகாரிகள், தீவிரமாக செயல்பட வேண்டும். அபராதத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி சேலைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனர்.

    கைத்தறி நெசவாளி நந்தகுமார் கூறும்போது,மூலப்பொருட்கள் விலையேற்றம், கைத்தறி சேலைகள் தேக்கம் ஆகியவற்றால் கைத்தறி நெசவுத்தொழில் தற்போது கடுமையாக நலிவடைந்துள்ளது. இந்நிலையில், விசைத்தறியாளர்கள் கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்வதால் கைத்தறித்தொழில் முற்றிலும் அழியும் நிலைக்கு செல்கிறது.

    நெசவாளர்கள் பலர் தறி நெய்வதை விட்டுவிட்டு கட்டிட வேலைக்கு செல்கின்றனர். பெண்கள் காய்கறி விற்பனை செய்கின்றனர். இதேநிலை நீடித்தால் கைத்தறி தொழில் அழிந்து விடும். சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்டது நெகமம் சேலைகள். 'வெள்ளாவியில் வைத்தாலும் வெளுக்காத சேலை நெகமம் சேலை' என்ற சொலவடையே இந்த சேலையின் தரத்தை காட்டுகிறது. கைத்தறி நெசவு என்பது பாரம்பரியமான தொழில். இது அழிந்தால், மீண்டும் கொண்டுவர முடியாது.

    கைத்தறியின் அழகு தனித்துவமானது. அதுவே நமது அடையாளம். கைத்தறி அழிந்தால் நமது சொந்த பாரம்பரியத்துடன் உள்ள தொடர்புகளை இழக்க நேரிடும். பாரம்பரிய கைவினை கலைஞர்களின்திறன்கள் வரும் தலைமுறைகளுக்கு கடத்தப்பட வேண்டும். கைத்தறித் தொழில் அழிந்தால் நாம் மிகவும் மதிப்புமிக்க ஒன்றை இழப்போம். எனவே தயவு செய்து கைத்தறித்தொழிலை காப்பாற்றுங்கள் என்றார்.

    • பச்சைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 வழங்க வேண்டும்.
    • அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட வேண்டும்.

    பல்லடம்:

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேங்காய்க்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் நேற்று 8-வது நாளாக கொடுவாயில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

    அப்போது கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட வேண்டும். பச்சைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 வழங்க வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் கோகுல் ரவி தலைமை தாங்கினார். கொடுவாய் நகர தலைவர் தமிழரசு, ஓடக்கல்பாளையம் ஈஸ்வரமூர்த்தி, கொடுவாய் நகரச் செயலாளர் லோகநாதன், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அ.தி.மு.க சார்பில் வேலன்தங்கவேல், கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநில துணைத்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, காங்கேயம் வட்டார தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, பொங்கலூர் ஒன்றிய பொருளாளர் துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×