என் மலர்
திருப்பூர்
- 18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
- ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதன்படி பல்லடம் காந்தி ரோடு, தண்டாயுதபாணி கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜையும் வழிபாடும் நடைபெற்றது. இதில் சந்தனம்,பால், தயிர், தேன், உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். இதேபோல பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில்,பொன்காளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமார சுவாமி மலை கோவில், உள்ளிட்ட கோவில்களில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
- நகர்மன்றம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும்.
- திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் தீர்மானத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் 11 பேர் எதிர்த்துள்ளோம்.
பல்லடம்:
பல்லடம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி (6 வது வார்டு), பாலகிருஷ்ணன்(1 வார்டு),ராஜசேகரன்(2 வார்டு), சவுந்தர்ராஜன்(4 வார்டு), ருக்மணி சேகர்(16 வார்டு),விஜயலட்சுமி பழனிச்சாமி(15 வார்டு),பாமிதா கயாஸ்(9 வார்டு), சுகன்யா ஜெகதீஷ்(8 வார்டு), ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முத்துசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- நகர்மன்ற மாதாந்திர கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டும் .ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் பல்லடம் நகர்மன்ற கூட்டம் நடைபெறவில்லை.தொடர்ந்து 3 மாதங்களாகியும் நகர்மன்ற கூட்டம் நடைபெறாமல் உள்ளது. நகர்மன்ற கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
18 வார்டுகளிலும் நகர்மன்றம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களையும் அழைக்க வேண்டும். பல்லடத்தில் அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்கு மற்றும் தூய்மை பணிகள் மந்தமாக உள்ளது. குடிநீர் விநியோகம் மற்றும் பொது பிரச்சனைகளில் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் தீர்மானத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் 11 பேர் எதிர்த்துள்ளோம். எனவே அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அவ்வாறு தோற்கடிக்கப்பட்ட தீர்மானத்தை, ஏன் தீர்மான நோட்டில் எழுதவில்லை. மேலும் அந்த தீர்மானம் எந்த காரணத்தினால் தோல்வியுற்றது என்று தீர்மான நோட்டில் பதிவு செய்ய வேண்டும் என்பது விதி உள்ளது.
அதை கடைபிடிக்கவில்லை. திடக்கழிவு மேலாண்மை பணி டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மீண்டும் அந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடலாமா, அல்லது ஏற்கனவே உள்ளவாறு நகராட்சி நிர்வாகமே பணியை மேற்கொள்ளுமா என்பது தெரியப்படுத்தவும். நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவர் பயன்படுத்தும் வாகனங்கள் அதற்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்த வேண்டும்.
அலுவலகத்தின் நுழைவு வாயிலில் நிறுத்துவதால் உடல் ஊனமுற்றோருக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளது.நகராட்சி தலைவர் அலுவலகத்தில் இல்லாத போது தலைவரின் அறையை பூட்டி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
- தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது. இதில் விசைத்தறிகளுக்கும் மின் கட்டண உயர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே விசைத்தறி ஜவுளி தொழில் நலிவடைந்து உள்ளதால் இந்த மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி விசைத்தறியாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த மார்ச் மாதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.
ஆனால் விசைத்தறியாளர்கள் குறைக்கப்பட்ட விசைத்தறி மின் கட்டணத்தை 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும்,மின் கட்டணம் கட்டாமல் உள்ள நிலுவை தொகைக்கு அபராதம் விதிக்கக் கூடாது. நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை தவணை முறையில் சட்ட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரை தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு செயலாளர் வேலுசாமி, பல்லடம் பாலாஜி, முத்துகுமார், மங்கலம் கோபால், கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பல்லடம் வேலுச்சாமி, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறியதாவது:-கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துள்ளோம். குறைக்கப்பட்ட மின் கட்டணம் 1.9.2022 முதல் அமல்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக கணினியில் ஒரு சில தினங்களில் மாற்றம் செய்யப்படும் என்றும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என்றார்.
- அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
- ரோடு ஓரங்களில் கொட்டப்படுவதற்காக மண் எடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவ்வழியே சென்ற பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது முறையான அனுமதி இன்றி மண் எடுப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர், பல்லடம் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த கிராம நிர்வாக அலுவலர் மண் எடுத்தவர்களிடம் விசாரணை செய்த போது, ரோடு ஓரங்களில் கொட்டப்படுவதற்காக மண் எடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய அனுமதி பெற்று எடுக்க வேண்டும் என அந்த வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மணிப்பூர் குற்றவாளிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- திருப்பூர் மாவட்ட பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
திருப்பூர்:
மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, திருப்பூர் மாவட்ட பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் வக்கீல்கள் பங்கேற்று மணிப்பூர் கலவரத்தில் பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் , அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மணிப்பூர் குற்றவாளிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
- தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
- மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
குடிமங்கலம்:
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு விளையும் தக்காளியை உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு, தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் சரிந்ததால் தக்காளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.
வழக்கமாக ஏப்ரல்- மே மாதங்களில் நடவு செய்து, ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்த விலையில் கிலோ 180 ரூபாய் வரை விற்றது.
இந்நிலையில் தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது இயல்பை விட கூடுதல் பரப்பளவில் தக்காளி சாகுபடியாகி வருகிறது. மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகப்பட்சமாக ஒரு பெட்டி 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய் வரை விலை நிலவியது.
- சாகுபடியில் அதிக பலன்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
- பருவமழை துவங்கியதும், நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக உள்ளது. விவசாயத்தை பொறுத்தமட்டில் நெல், காய்கறி சாகுபடி, பழ சாகுபடி முக்கியமாக மேற்கொள்ளப்படுகிறது.இதில் மா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை வட்டாரத்தில் ஜல்லிபட்டி, லிங்கம்மாவூர், குமாரபாளையம், தேவனூர்புதூர், மானுப்பட்டி, மொடக்குப்பட்டி, உடுக்கம்பாளையம் உட்பட பகுதிகளில் 1,700 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஆறுக்கும் அதிகமான ரகங்கள் பராமரிக்கப்பட்டு, ஆண்டுக்கு இரு சீசன்களில் மாங்காய் அறுவடை செய்யப்படுகிறது.இந்த சாகுபடியில் அதிக பலன்கள் கிடைக்க தோட்டக்கலைத்துறையினர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் மா மரங்களில், ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கவாத்து செய்வதால் பல்வேறு பலன்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அத்துறையினர் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை சீசனுக்கு முன் மா சாகுபடியில் கிளை படர்வு மேலாண்மை, உர நிர்வாகம் ஆகியவற்றை முறையாக பின்பற்ற வேண்டும். பருவமழை துவங்கியதும், நிலப்போர்வையாக பசுந்தாள் உரப்பயிர்களை விதைக்கலாம்.களைகளை முழுவதுமாக கட்டுப்படுத்த இடை உழவு செய்த பின் கொள்ளு, பாசிப்பயறு, தக்கைப்பூண்டு அல்லது மண் வளம் பெருக எளிதில் மட்கும் பயறு இனவகைகளை விதைக்க வேண்டும்.
நோய் தாக்கிய காய்ந்த கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தி கீழே விழுந்துள்ள இலைகளை சேகரித்து, மண் புழு உரக்குழி அல்லது மண்புழு கூடாரத்திலோ மட்க செய்ய வேண்டும்.மரங்களின் வளரும் தருணத்தில் மிக நெருக்கமாக உள்ள மரங்களின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் கவாத்து பணிகளை மேற்கொள்ளலாம்.
ஆரோக்கியமாக உள்ள கிளையை விட்டு விட்டு குறுக்கே நிழல் பகுதியில் வளரும் சிறு கிளைகளையும், கவாத்து செய்ய வேண்டும். மரத்தில் 5 கிளைகள் இருந்தால் 2 முதல் 3 கிளைகள் மட்டும் இருக்குமாறு கவாத்து செய்யலாம்.கவாத்து வாயிலாக மரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கிளை படர்வு மேலாண்மையை விவசாயிகள் பின்பற்றினால், புதுக்கிளைகளில் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது. இவ்வாறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- கடந்த 2021ம் ஆண்டு முதல் திருப்பூரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
- நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் ஜூலை 25-ந்தேதி துவங்கியது.
திருப்பூர்:
கடந்த 2021ம் ஆண்டு முதல் திருப்பூரில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதுவரை 2 பேட்ஜ் மாணவர்கள் (200 பேர்) மருத்துவ படிப்பில் இணைந்து மருத்துவபடிப்பு பயின்று வருகின்றனர்.நடப்பாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., கவுன்சிலிங் ஜூலை 25-ந்தேதி துவங்கியது. அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 7.5 சதவீத ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது.
கவுன்சிலிங்கில் பங்கேற்று திருப்பூர் மருத்துவக் கல்லுாரியை 100பேர் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் நாளை 11-ந்தேதிக்குள் கல்லூரியில் இணைய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் செப்டம்பர் 1-ந் தேதியில் இருந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் என மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவித்துள்ளது.
- தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.
- விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்:
தபால்துறை சார்பில் புதிய இந்தியாவுக்கான டிஜிட்டல் இந்தியா எனும் தலைப்பில் கடிதம் எழுதும் பிரசாரம் மற்றும் போட்டி நடக்கிறது.இப்போட்டியில் 'ஏ4' தாளில், கையால் எழுதப்படும் கடிதம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தாளில் அனுப்புவது ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இன்லாந்து லெட்டரில் அனுப்பும் கடிதம் 500 வார்த்தைகளுக்குள் இருத்தல் வேண்டும்.
கடிதங்களை தமிழ், ஆங்கிலம் இந்திய மொழிகளில் எழுதி அனுப்பலாம். போட்டியில் பங்கு பெறுபவர், பெயர், இருப்பிட முகவரியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். 18 வயது நிறைவு பெற்றவர், பெறாதவர் என்பதை அறிய நிச்சயம் வயது சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி: முதன்மை தபால் துறைத் தலைவர், சென்னை 600 002. கடிதங்கள் அக்டோபர் மாதம் 31ந் தேதிக்குள் சென்று சேர வேண்டும். அதன் பின் வரும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தேசிய அளவில் முதல் பரிசு பெறுவோருக்கு ரூ. 50 ஆயிரம், இரண்டாவது பரிசு 25 ஆயிரம், மூன்றாவது பரிசு 10 ஆயிரம். மாநில அளவில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரம், இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசு முறையே 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாய்.மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தை நாடலாம் என திருப்பூர் தலைமை தபால் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.
- 18 ஆண்டுகளில் மிக சொற்பமான ஏரி, குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன.
- இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது வேதனையின் உச்சகட்டம்.
திருப்பூர்:
காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் எஸ்.வி. பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2006 ல் துவங்கப்பட்டது. இத் திட்டம் மூலம் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதால் 100 நாள் வேலை திட்டம் என பெயர் மாறிவிட்டன.
இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் பயன்பெறலாம் .திட்டத்தின் நோக்கம் ஏரி ,குளம் தூர்வாருதல் ,நீர் வழி தடங்கள் புனரமைப்பு ,குட்டைகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் நிலங்களில் பாசன மேம்பாட்டிற்கு பாடுபடுதல் போன்ற பணிகளுக்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டன .ஆனால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் ,லட்சத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிறைந்த நம் தமிழகத்தில் திட்டம் துவங்கப்பட்டு 18 ஆண்டுகளில் மிக சொற்பமான ஏரி, குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு உழைக்காமலேயே ஊதியம் கிடைத்து விடுகிறது என்கிற காரணத்தினால் கிராமப்புற விவசாயிகள் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது வேதனையின் உச்சகட்டம்.
சில நகர்புறங்களில் சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன . இப்படி எதற்குமே பயன்படாமல் மக்களை சோம்பேறி கூட்டமாக மாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் நிதி உதவியோடு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இந்த 100 நாள் வேலை திட்டத்தினை மறு பரிசீலனை செய்து சில திருத்தங்களை கொண்டு வந்து முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்தி தமிழகத்தில் விவசாயம் மேம்பட வழி வகுக்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
- தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.
- 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் ெரயில்வே நிலையத்தில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6ந் தேதி, பிரதமர் மோடி பணிக்கு அடிக்கல் நாட்டினார். முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.
ெரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ஏ.டி.எம்., அருகே துவங்கி ரெயில் நிலையம் முகப்பு பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டு, குழி தோண்டப்பட்டது. பணி நடக்கும் இடத்துக்கு பயணிகள் வருவதை தவிர்க்க, பாதுகாப்பு கருதி முதல் பிளாட்பார்ம் நுழைவு வாயில் தகரம் வைத்து அடைக்கப்பட்டது.
இதற்கு மாற்றாக அருகே வலதுபுறம் சுவர் இடிக்கப்பட்டு தற்காலிகமாக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக பயணிகள் உள்ளே, சென்று வர ெரயில்வே போலீசார் அறிவுறுத்தினர். தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.அதன்பின் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு கட்டுமான பணி துவங்க உள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் பணிகள் நடந்தால் இடையூறு ஏற்படும் என்பதால் முதல் பிளாட்பார்மில் மட்டும் பணி துவங்கியுள்ளது.இரண்டாவது பிளாட்பார்மில் எந்த பணியும் தற்போதைக்கு துவங்கவில்லை. 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணி துவங்க உள்ளதால் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.
- திருப்பூர் திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.
- ரசிகர்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி 108 தேங்காய்களை உடைத்தனர்.
திருப்பூர்:
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. திருப்பூர் திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் குவிந்தனர். திருப்பூர் உஷா திரையரங்கம் முன்பு படத்தை காண குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க கொண்டாடினர். பின்னர் நடிகர் ரஜினியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் கேக் வெட்டியும் கொண்டாடினர்.
அதேபோல சக்தி திரையரங்கின் முன்பு குவிந்த ரசிகர்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி 108 தேங்காய் உடைத்து ரஜினி படத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.






