என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது.
    • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    பல்லடம்:

    பல்லடம் பனப்பாளையம் பகுதியில், பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருபவர் ராமராஜ் (வயது 43). நேற்று உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மனைவி மகாலட்சுமியுடன் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று மாலை பூட்டிய இரும்பு கடைக்குள் இருந்து சத்தம் கேட்டதால், அருகே உள்ள கடைக்காரர் ஒருவர் சென்று பார்த்தபோது மர்ம ஆசாமிகள் 2 பேர் கடைக்குள் இருந்தது தெரிய வந்தது.மேலும் பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அக்கம்-பக்கம் உள்ளவர்களை அவர் உதவிக்கு அழைத்தார். இதற்குள் ஒருவன் ஓடிவிட மற்றொருவன் பொதுமக்களிடம் மாட்டிக் கொண்டான். அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவனை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவன் திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பள்ளி வளர்ச்சி குறித்து பயிற்றுநர்கள் பாபு, ஆனந்தஜோதி ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.
    • சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வட்டார வள மையத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. மேற்பார்வையாளர் அங்கையர்கன்னி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி மற்றும் 17 வார்டு உறுப்பினர்கள், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு குறித்து பயிற்றுநர்கள் சாரதா,மாரியப்பன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.மேலும் பள்ளி வளர்ச்சி குறித்து பயிற்றுநர்கள் பாபு, ஆனந்தஜோதி ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

    • ஹவுசிங் யூனிட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார்.
    • விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    ஊத்துக்குளி:

    திருப்பூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் விபச்சாரம் நடப்பதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்தார்.இதன்பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது சேலம் கெங்கவள்ளி தாலுகா, காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் சத்யா ( எ) சேர்மக்கனி (வயது 31), ஊத்துக்குளி ஹவுஸிங் யூனிட், டாலர் சிட்டி 2-வது வீதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் குமார் (எ) செந்தில்குமார் ( 41), நாகப்பட்டினம் மாவட்டம், பிரிஞ்சிமூளை, காடைதந்தி, லெனின் தெருவை சேர்ந்த சுந்தரையா மகன் அகிலன் ( 23) மற்றும் நாகேந்திரன்கோபு மகன் விஸ்வந்த் ( 23) ஆகியோர் பெண்களை வைத்து விபச்சாரம் செய்ததாக தெரிய வந்தது.

    விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த போலீசார் 5 புரோக்கர்களாக செயல்பட்ட 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாண்டி ( 40), நாச்சிபாளையத்தை சேர்ந்த சுரேந்தர் ( 45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சமூக வலைதளம் மூலம் சிவசங்கர் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • குடிப்பழக்கத்தால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    பல்லடம்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரது மகள் நந்தினி( வயது 16). 8 ம் வகுப்பு வரை படித்து விட்டு, அதன் பின்னர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நந்தினி வீட்டில் இருந்து காணாமல் போனார்.அவர் காணாமல் போனது குறித்து காளையார் கோவில் காவல் நிலையத்தில், அவரது தந்தை சிவப்பிரகாசம் புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். போலீசாரது விசாரணையில் நந்தினியும், சிவசங்கரும் திருமணம் செய்து கொண்டு, பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. ஓட்டுனராக வேலை பார்க்கும் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த குடிப்பழக்கத்தால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தகராறு முற்றியதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசங்கரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிவசங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • இந்த அழைப்பு மையம் அனைத்து வேலைநாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.
    • தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    திருப்பூர்:

    தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் வாழ்வாதாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எழும் கேள்விகள், சந்தேகங்கள் மற்றும் தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக 155330 என்ற தொலைபேசி எண் சேவை மையம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு மையம் அனைத்து வேலைநாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை செயல்படும்.

    தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் தொலைபேசிஅல்லது செல்போன் மூலமாக இந்த அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு திட்ட விவரங்களை எந்தவித கட்டணமும் இன்றி பெற முடியும். குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், வங்கி கடன் உதவி பெறுதல், சுழல்நிதி பெறுதல், பயிற்சிகள், கணக்கு பராமரிப்பு, வாழ்வாதாரம் தொடர்பான திட்ட விவரங்கள், சுயஉதவிக்குழுக்கள் மூலம் குழுவாக தொழில் தொடங்குதல், உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல், பெறுதல் ஆகியவை குறித்தும் விளக்கம் பெறலாம்.

    18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மேற்கொள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலமாக வழங்கப்படும் பயிற்சிகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம். பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு பெற விரும்பும் கிராமப்புற இளைஞர்கள், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறுகிய கால பயிற்சிகள், பயிற்சி மையங்கள், தகுதிகள், பயிற்சியின்போது வழங்கப்படும் வசதிகள் குறித்தும் தகவல் பெறலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க படிவங்களை ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட 1 லட்சத்து 55 ஆயிரம் கையெழுத்து இயக்க படிவங்களை மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் வழங்கினார். மேலும் அதிக அளவில் கையெழுத்து பெற்ற சாமுண்டிபுரம் பகுதி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், தனிப்பட்ட முறையில் அதிக கையெழுத்து பெற்ற 13-வது வார்டு செயலாளர் மற்றும் அனைத்து பகுதி செயலாளர்களுக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி என்கிற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞரணி செயலாளர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து அர்ஜூனராஜ் நிருபர்களிடம் கூறும்போது " பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும், சனாதானத்தை தாங்கி பிடிக்கின்ற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறும் வகையிலும் நாங்கள் ஓய மாட்டோம். மத்தியில் பிரதமர் உள்பட பா.ஜ.க. அரசு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    • விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.
    • கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார்.

    உடுமலை:

    உடுமலை கோட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயிகள் மற்றும் நிலமற்ற தொழிலாளர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கிறது.

    அதில் பெரும் சவாலாக இருப்பது தொற்று நோய்களாகும்.அவற்றில் இலம்பி தோல் அலற்சி நோய் என்று அழைக்கக்கூடிய பெரியம்மை நோயை உடுமலை கோட்டத்தில் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அறிவுரையின்படி பெரியம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 8- ந் தேதி முதல் தொடங்கி உள்ளது. கல்லாபுரம் ஊராட்சி வேல் நகரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை உதவி இயக்குனர் வே.ஜெயராமன் நேரில் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் கூறுகையில்,

    ஒவ்வொரு குக்கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவர் குழுவினரால் முகாம் அமைத்து பெரியம்மை நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற உள்ளது.கால்நடை வளர்ப்போர் முகாமினை பயன்படுத்தி கால்நடைகளை பெரியம்மை நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    பெரியமை நோய் வைரஸ் கிருமியினால் பரவும் நோயாகும்.இந்த நோய் கொசுக்கள்,உண்ணிகள், ஈக்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு மாட்டிலிருந்து மற்றொரு மாட்டிற்கு பரவக் கூடியதாகும். அதைத் தடுத்து கால்நடைகளை பாதுகாக்க தடுப்பூசியே சிறந்த வழியாகும்.

    உடுமலை கோட்டத்தில் ஜல்லிபட்டி, மடத்துக்குளம், குடிமங்கலம்,துங்காவி ஆகிய 4 பகுதிகளில் முகாம்கள் நடத்த ஏதுவாக 57 ஆயிரம் டோஸ் மருந்துகள் இறப்பு வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • ரூ.9.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • பொங்கலூர் ஒன்றிய குழுதலைவர் வக்கீல்.எஸ். குமார் முன்னிலை வகித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி, சக்தி நகர் மற்றும் ஐயப்பா நகர் பகுதியில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.பொங்கலூர் ஒன்றிய குழுதலைவர் வக்கீல்.எஸ். குமார் முன்னிலை வகித்தார்.

    ஊராட்சி நிதியின் மூலம் ரூ.9.72 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே பணிகள் நிறைவு பெற்ற பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே பொது கழிப்பிடம், அம்மாபாளையம் பகுதியில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, நாராயணநாயக்கன் புதூர் பகுதியில் மேல்நிலை தொட்டி ஆகியவையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    • பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்
    • பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி கிளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் சிசிடிவி., கேமரா உபகரணங்கள் பற்றிய இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்வோர் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 உடன் 14ந்தேதி( திங்கள் கிழமை) வங்கி கிளையில் நடைபெறும் நேர்காணனில் கலந்து கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.

    பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமன்றி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். மேலும் தொடர்புக்கு 9952518441, 8610533436, 9489043923 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன்.
    • விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி சிக்கண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான்முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்துஅவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.

    போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் என போதைப்பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றனர்.

    தொடர்ந்து, போதைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

    • மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை.
    • தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகளில் சுமார் 56,000 மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 36, ஒப்பந்த அடிப்படையில் 181 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பை கழிவுகளை தனித்தனியாக பிரித்து வாங்குவதற்கு தூய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாள்தோறும் 18 வார்டுகளில் வீதி வீதியாக சென்று வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், பல கட்டங்களாக போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் பல்லடம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி, பல்லடம் பேருந்து நிலையத்தில் இன்று காலை அனைவரும் ஒன்றாக கூடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.

    இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-

    மாத சம்பளம் 4 அல்லது 5ந்தேதிக்குள் வந்து கொண்டிருந்தது. தற்போது 11ந் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை. இதனால் செலவுக்கு பணம் இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம். ஏற்கனவே குறைந்த சம்பளத்தில் பணியாற்றி வருகிறோம். இந்த நிலையில் கொடுக்கும் சம்பளத்தையும் சரியாக தருவதில்லை. எனவே இதனை கண்டித்து வேலைநிறுத்தம் செய்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு 18-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சசிரேகா ரமேஷ்,14 வது வார்டு உறுப்பினர் ஈஸ்வரி செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு அளித்தனர். தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பல்லடம் நகராட்சி பகுதியில் பல இடங்களில் குப்பைகள் மலைபோல் தேங்கின.

    தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 145 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தினசரி கூலியாக ரூ.440 வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ.540, கோயம்புத்தூரில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி ரூ. 570 வழங்கப்படுகிறது. அதுபோல் கூலி வழங்க வேண்டும். கூலியை சரியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை தாராபுரம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள நகராட்சிகள் கூடுதல் அதிகாரியிடம் புகார் அளிப்பதற்காக வாகனங்களில் சென்றனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தத்தால் தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. 

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன.
    • சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    நாட்டின் 76-வது சுதந்திர தினம் வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியேற்றி நாட்டு மக்களின் இணைப்பை மேலும் வலுவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய கொடிகள் தயாரிப்பு பணிகள் மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பனியன் நகரமான திருப்பூரில் உள்ள நிறுவனங்களில் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த கொடி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தற்போது 76வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து பொதுமக்கள் தேசிய கொடிகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சில நிறுவனங்களில் மட்டும் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன.

    வட மாநிலங்களில் இருந்து காகிதம் மற்றும் பாலியஸ்டர் துணி கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இருப்பினும் காட்டன் துணி கொடிகள் உற்பத்தி திருப்பூர்-கோவையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வரப்பெற்று திருப்பூர், கோவை நிறுவனங்களில் உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. ஆர்டர்கள் கொடுத்தவர்களுக்கு தேசிய கொடிகளை தயாரித்து கொடுக்க தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஆர்டர்களின் பேரில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடிகள் உடனுக்குடன் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தேசிய கொடிகள் இன்னும் 2 நாட்களில் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதுவரை 20 லட்சம் கொடிகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

    திருப்பூர் பழைய பேருந்துநிலையத்தை சேர்ந்த கொடி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    நாங்கள் 30 ஆண்டு காலமாக கொடி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். கட்சிக்கொடி, தேசியக்கொடி, பதாகைகள், பேட்ஜ், தொப்பி, டீசர்ட் மற்றும் சின்னம் பொறித்த மப்ளர் உள்ளிட்டவைகளை தயாரித்து வழங்குகிறோம். கடந்த ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனால் கடந்த ஆண்டு தேசியக்கொடிக்கான ஆர்டர்கள் பல மடங்கு வந்தது. எப்போதும் பிரதானமாக நாங்கள் இதனை செய்வோம். ஆனால் எங்களுக்கு பல லட்சம் எண்ணிக்கையில் கடந்த ஆண்டுதான் ஆர்டர்கள் வந்தன. இதனால் பின்னலாடை நிறுவனங்களும் கொடி உற்பத்தியில் ஈடுபட்டன. அனைவரும் தன்னெழுச்சியாக தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர் வழங்கினர். அது போல் இந்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் இந்த ஆண்டும் ஆர்டர்கள் வந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டை விட குறைவுதான். பெரும்பாலான பொதுமக்கள் கடந்த ஆண்டே தேசிய கொடிகளை வாங்கினர். 3 நாட்கள் ஏற்றிய பிறகு அதனை அவிழ்த்து பத்திரமாக வீட்டில் வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்றி விட்டு அதனை அவிழ்த்து வீட்டில் பத்திரமாக வைத்தனர்.

    சிலர் வீடுகளில் கழற்றாமல் அப்படியே விட்டனர். இதனால் அவர்கள் தேசிய கொடிகளை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது போல் தேசிய கொடிகள் அழுக்கு படிந்து இருக்கக்கூடாது என்பதால் இந்த ஆண்டு பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் இருந்து புதிய கொடிகளுக்கான ஆர்டர்கள் வந்துள்ளன. அவற்றை தயாரித்து கொடுத்து வருகிறோம். 16க்கு 20, 12க்கு 18, 18க்கு 27 இன்ச் நீளம் ஆகிய அளவுகளில் தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகிறது. அரசு விதிமுறையின்படி ஒவ்வொருவர் விரும்பும் அளவுகளில் ரூ.20 முதல் ரூ.200 வரை கொடிகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

    திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் சிலர் கூறும்போது, கொரோனா தொற்றின்போது, முகக்கவசம் உள்ளிட்டவை செய்வதற்கு ஆர்டர் குவிந்தது போல் கடந்த ஆண்டு 75-வது சுதந்திர தினம் மூலம் தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் குவிந்தன. பல பின்னலாடை நிறுவனங்கள் 30 லட்சம் வரை தேசியகொடிகள் தயாரிக்க ஆர்டர் பெற்று தயாரித்து அனுப்பப்பட்டன.

    பெரும்பாலான பொதுமக்கள் கடந்த ஆண்டே தேசிய கொடிகள் வாங்கி விட்டதால் இந்த ஆண்டு குறைந்த அளவிலேயே தேசிய கொடிகள் தயாரிக்க ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன என்றார். பனியன் நிறுவனங்கள் மட்டுமின்றி தபால் நிலையங்கள், மகளிர் சுய உதவிக்குழுவின் விற்பனை மையங்கள் மற்றும் கடைகள், சாலையோர கடைகள் என பல இடங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடந்து வருவதால் திருப்பூரில் தேசிய கொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

    ×