என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி தற்கொலை வழக்கில் கணவர் கைது
    X

    கோப்புபடம்

    சிறுமி தற்கொலை வழக்கில் கணவர் கைது

    • சமூக வலைதளம் மூலம் சிவசங்கர் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • குடிப்பழக்கத்தால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    பல்லடம்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவரது மகள் நந்தினி( வயது 16). 8 ம் வகுப்பு வரை படித்து விட்டு, அதன் பின்னர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளம் மூலம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கர் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நந்தினி வீட்டில் இருந்து காணாமல் போனார்.அவர் காணாமல் போனது குறித்து காளையார் கோவில் காவல் நிலையத்தில், அவரது தந்தை சிவப்பிரகாசம் புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர். போலீசாரது விசாரணையில் நந்தினியும், சிவசங்கரும் திருமணம் செய்து கொண்டு, பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. ஓட்டுனராக வேலை பார்க்கும் சங்கருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்த குடிப்பழக்கத்தால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தகராறு முற்றியதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நந்தினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசங்கரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிவசங்கரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×