search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணத்தை குறைக்க கோரி திருப்பூரில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
    X
    கோப்புபடம்

    மின் கட்டணத்தை குறைக்க கோரி திருப்பூரில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்

    • பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
    • தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி .ஆர் .குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில கழக துணை செயலாளர் அக்பர், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் பொன் இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் திருப்பூர் மாவட்ட தேமுதிக.வை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி அளவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால் தள்ளாடி வருகிறது.

    அதிலும் கூடுதலாக வர்த்தக நிறுவனங்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலான பீக் ஹவர் என சொல்லப்படும் இந்த நேரங்களில் மேலும் அபரிமிதமான கட்டணத்தை உயர்த்தி தொழில் துறையினரையும் தொழிலாளர்களையும் வேதனை அடைய செய்திருக்கிறது.

    இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. ஆகவே தமிழக அரசு இந்த பீக் ஹவர் மின் கட்டண உயர்வு என்பதை வாபஸ் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    தமிழகத்தில் தேர்தல் காலத்தில் திமுக., சார்பில் அனைத்து மகளிருக்கும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆட்சியையும் பிடித்தது .ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு தற்போது விண்ணப்பங்களும் வழங்கி வருகின்றனர்.அதிலும் குளறுபடி நீடிக்கிறது .இதை தமிழக அரசு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளறுபடிகளை களைந்து அனைத்து மகளிருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை ரூ.1000த்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தேமுதிக., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×