என் மலர்
திருப்பூர்
- நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
- பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மண்டல தலைவர் கோவிந்தராஜ், உதவி ஆணையாளர் வினோத், துணை ஆணையாளர்கள் செல்வநாயகம், கண்ணன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் சாலைப்பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள். 4-வது குடிநீர் திட்டப்பணிகள் குழாய் பதிப்பு பணிகள் நெடுஞ்சாலைத்துறையின் பிரதான சாலையில் நடைபெற வேண்டியுள்ளது. அதுபோல் குழாய் பதிப்பு பணிகள் முடிந்த சாலையை செப்பனிடும் பணி நடைபெறாமல் உள்ளது. இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைந்து செய்து காலதாமதம் இல்லாமல் விரைந்து செய்து முடிப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது. சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைப்பு, குடிநீர் குழாய் பதிக்க சாலையில் குழிதோண்டும் பணி ஆகியவற்றை மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பணிகளை செய்வதில் தாமதப்படுத்தக்கூடாது என்று மேயர், ஆணையாளர் அறிவுறுத்தினார்கள்.
- பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து,
- தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் இருந்து கழிவு நீர், வார்டு எண்.8-க்கு உட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாக வந்து, பின்னர் பச்சாபாளையம் குட்டையை அடையும் வகையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அடிக்கடி கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பட்டேல் வீதியில் வரும் கழிவு நீரை கருப்புராயன் கோவில் வீதி வழியாக செல்லாமல், பட்டேல் வீதி வழியாகவே செல்லும் வகையில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ரூ.4 லட்சம் மதிப்பில் இப்பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இதற்கு நகராட்சி தலைவர் கவிதா மணி தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார். நகர் மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். இதில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராசுகுட்டி, திமுக .,விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஜெகதீஷ், ஒப்பந்ததாரர்கள் வெள்ளியங்கிரி, கார்த்திகேயன், தி.மு.க. வட்டச் செயலாளர் ரத்தினசாமி மற்றும் கயாஸ் அகமது, விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுத்தை நடமாட்டத்தை டிரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் (பொன்னூதி மாமலை) வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் சிறுத்தை ஒன்று வழி தவறி மலைப்பகுதிக்குள் வந்தது. கடந்த 8 மாதங்களாக மலையில் பதுங்கியிருந்து அடிவாரப் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இந்த சிறுத்தையை பிடிப்பதில் வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மலையில் புள்ளிமான், கடமான், குரங்குகள், மயில்கள், கீரிகள், உடும்புகள், எறும்புத்தின்னி, முள் எலி, முள்ளம் பன்றி, முயல்கள், பாம்புகள் அதிகம் உள்ளன. மேலும் காங்கயம் வட்டாரத்தில் பிடிக்கப்படும் அரிய வகை விலங்குகள், பறவைகளை இந்த மலையில் வனத்துறையினர் விடுவதும் வழக்கம்.
சிறுத்தை நடமாட்டத்தை டிரோன் கேமராக்கள் மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. அந்த சிறுத்தை சுமார் 7 முதல் 10 வயதுடையதாக இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் சிறுத்தையை கண்காணிக்க ஊதியூர் மலையடிவாரப் பகுதியில் விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள பகுதியில் கேமராக்களை வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர். இருப்பினும் இரவு நேரங்களில் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர்.
இதுவரை சுமார் 4 ஆடுகள், 2 கன்று குட்டிகள், 1 நாய் ஆகியவற்றை சிறுத்தை வேட்டையாடி உள்ளதாகவும் 2 கன்று குட்டியை தாக்கி காயங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் வனத்துறையினர் சார்பில் கூறப்படுகிறது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டும் கடந்த 8 மாதங்களாக பிடிக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க மனிதனை தாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அவ்வாறு ஒரு சம்பவம் அரங்கேறுவதற்குள் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் வனத்துறையினருக்கு உத்தரவிட்டு கூடிய விரைவில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். ஒரு வேளை சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்கவில்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு காங்கயம் இந்து முன்னணி இயக்கத்தினர் உடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் பல்லடம் அருகே கள்ளிப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தை அடுத்த தண்ணீர் பந்தல் பகுதியில் நேற்று காலை சிறுத்தை ஒன்று சாலையை கடந்து சென்றதாக ஒருவர் தகவல் தெரிவித்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது. இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் அங்கு வந்தனர். போலீசார் மற்றும் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறிய பகுதியான கள்ளிப்பாளையம், தண்ணீர் பந்தல், புத்தெரிச்சல், வலையபாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இருப்பதாக தெரியாததால் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஊதியூர் மலைப்பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தை இங்கு வந்து இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
- வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார்.
- கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கொண்டரசம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவரது உறவினர் பிரகாஷ் (வயது 30). இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் பணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார்.
மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் தனது உறவினரான தமிழரசன் கறிக்கடையில் பகுதி நேரமாக கறி வெட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலையில் இருந்து கறிவெட்டி கொண்டிருந்தார். அப்போது காலை சுமார் 9.30 மணி அளவில் உடுமலையில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அங்குள்ள தமிழரசன் கறிக்கடைக்குள் புகுந்து நின்றது.
இதில் கறி வெட்டிக்கொண்டிருந்த பிரகாஷ் மீது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரகாஷ் பரிதாமாக இறந்தார். மேலும் கடைக்கு கறி வாங்க வந்த 2 பேர் மற்றும் கார் டிரைவர் செல்வராஜ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர்களை தாராபுரம் அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை 9-ந்தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தாராபுரம்:
தாராபுரம் மின் வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட வடுகபட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 9ந் தேதி இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதனால் வடுகபட்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மூக்குத்தரிச்சான்பாளையம், குமாரபாளையம், சுள்ளப்பெரிக்கா பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத்துறை, வரப்பட்டி, வடுகபட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டணம் அது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக வந்த கோழிப்பண்ணைத்தொழில் தற்போது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணைத்தொழில் 2 வகையானது .முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழிவகை. பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.
இந்தநிலையில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் அசைவ உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால் கறிக்கோழி நுகர்வு குறைந்து தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை125 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 96 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல், ரூ. 100 வரை செலவாகும் நிலையில் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதையடுத்து கறிக்கோழி பண்ணையாளர்கள் சுமார் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மழை குறைவு, ஆட்கள் பற்றாக்குறை போன்றவற்றால் விவசாயம் செய்யமுடியாத நிலையில் மாற்றுத்தொழிலாக கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்துவருகிறோம் . இதில் நாங்கள் மட்டும் பயன்பெறவில்லை.nபண்ணை தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள், சோளம், ராகி பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலா ளர்கள் என நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். கடந்த சில வாரங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்வு, மற்றும் தீவன தட்டுப்பாடு, நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. கறிக்கோழி உற்பத்தி செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.90 முதல் ரூ.100 வரை செலவாகும் நிலையில் புரட்டாசி மாத நுகர்வு குறைவு, விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் கறிக்கோழி உற்பத்தியை சுமார் 25 சதவீதம் வரை குறைத்துள்ளோம். நுகர்வு அதிகரிக்கும்போது வழக்கமான அளவிற்கு கறிக்கோழி உற்பத்தி செய்யப்படும்.
கோழித் தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மக்காச்சோளம் கிலோ ரூ.17க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.24க்கு விற்பனையாகிறது. தமிழகத்தில் மக்காச்சோள விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம். இதனால் விலையும் அதிகம்,போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. உதாரணமாக பீகாரில் இருந்து மக்காச்சோளம் கொண்டுவர ஒரு கிலோவிற்கு ரூ. 4 செலவாகிறது. பல்லடத்தில் ரெயில் நிலையம் இல்லாததால், திருப்பூர் ரெயில் நிலையத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளை பல்லடம் கொண்டு வர டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவாகிறது. இதனைத் தவிர்க்க மத்திய அரசு பல்லடம் வழியாக ரெயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனென்றால் பல்லடத்திலிருந்து கறிக்கோழி, கறிக்கோழி தீவனங்கள், காடா ஜவுளிகள், பனியன்கள், விவசாய பொருட்கள் என ஏராளமான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலும் சாலை வழி போக்குவரத்தை நம்பியே உள்ளதால், கால நேரமும், போக்குவரத்து செலவும் அதிகமாகிறது. எனவே பல்லடத்தில் ரெயில் நிலையம் அமையுமானால், இன்னும் ஏற்றுமதியில் சாதிக்கலாம். இதற்கிடையே கடந்த மாதத்தில் ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ.50 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன்,லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கோழி மருந்துகள் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மின்கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தமிழக அரசு விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது போல் விவசாய தொழிலான கோழிப்பண்ணைகளுக்கும் இலவச மின்சாரம் வழங்க முன் வர வேண்டும்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலும் தென்னை, மற்றும் வெங்காயம்,தக்காளி போன்ற காய்கறிகள் ஆகியவற்றையே உற்பத்தி செய்கிறார்கள். இதனால் ஒரு சில நேரங்களில் லாபம் கிடைத்தாலும் பெரும்பாலும் விவசாயிகள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். இவர்கள் மக்காச்சோள விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏனென்றால் மாதம் தோறும் கறிக்கோழி தொழிலுக்கு சுமார் 2 லட்சம் டன் மக்காச்சோளம் தேவைப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் டன் மட்டுமே மக்காச்சோளம் கிடைக்கிறது. இதனால் கர்நாடகா, ஆந்திரா பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்கின்றோம். இதனால் எங்களுக்கு போக்குவரத்து செலவு மற்றும் விலை அதிகரிக்கிறது. 1 ஏக்கர் நெல் பயிரிடும் தண்ணீரில் 10 ஏக்கர் மக்காச்சோளம் பயிரிடலாம். எனவே தமிழ்நாட்டில் மக்காச்சோள விவசாயத்தை பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்காச்சோளத்தை பயிரிடும் விவசாயிகளிடமிருந்து அவற்றை நேரடியாக பெற்று கொள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையவில்லை.
- சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர்.
அவினாசி:
அவினாசிஒன்றியம் இராமியம்பாளையம், குமாரபாளையம் , புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உடுமலைபேட்டை கிளையில் சூப்பர் நேந்திரன் என்ற ரக வாழைக்கன்றுகளை வாங்கி நடவு செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையவில்லை. இதனால் வாழை விவசாயிகளுக்கு ரூ.3 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவினாசி தாசில்தார் மோகன், தோட்டக்கலை துறை அலுவலர் அனுசியா ,உதவி அலுவலர்கள் சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகன் தலைமையில் இரு தரப்பினருக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமாசங்கரி, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அவினாசிசுற்றுவட்டார விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 13 மாதங்களில் அறுவடை செய்யும் ரகமாக சூப்பர் நேந்திரன் வாழைக்கன்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டியும் வாழைத்தாரில் சரிவர காய்பிடிக்காமல் முற்றிலும் பிஞ்சாகவே உள்ளது. இதனால் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.
- திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
- வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
மூலனூர்:
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.09 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 465 விவசாயிகள் தங்களுடைய 5,152 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 1,628 குவிண்டால்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ.6,450 முதல் ரூ.7,392 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.6,800. கடந்த வார சராசரி விலை ரூ.6,900. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.09 கோடி.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் வேணுகோபாலு முன்னிலை வகித்தார் .
- அறங்காவலர்கள் முத்துக்குமார் ,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் பிரின்ஸ்பால் முரளிதரன் நன்றி கூறினார் .
தாராபுரம்:
தாராபுரம் வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தகவல் அறியும் உரிமை சட்ட வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு முகாமை தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக்கில் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் வேணுகோபாலு முன்னிலை வகித்தார் .கல்லூரி விரிவுரையாளர் ராஜேஷ் கண்ணா வரவேற்றார். சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் தகவல் உரிமை சட்டத்தில் உள்ள சிறப்புகள் குறித்தும், காலக்கெடு,மேல்முறையீடு போன்றவற்றை விரிவாக தாராபுரம் சப்-ஜட்ஜ் தர்ம பிரபு எடுத்துக்கூறி பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மாஜிஸ்திரேட் பாபு மோட்டார் வாகன சட்டம் குறித்து பேசியதுடன் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் பெற்றோர்களுக்கு தண்டனை வழங்க ப்படும் என்பதால் முறையாக லைசென்ஸ் பெற்ற பிறகு ஓட்ட வேண்டும் என்று பேசினார்.
தாராபுரம் தீயணைப்பு அலுவலர் ஜெயச்சந்திரன் பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து எவ்வாறு தற்காத்து கொள்ள வேண்டும் என்று தீயணைப்புகுழுவினர் மூலம் செயல் விளக்கம் அளித்தார். கல்லூரி செயலாளர் விஷ்ணு செந்தூரன் ,அறங்காவலர்கள் முத்துக்குமார் ,சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் பிரின்ஸ்பால் முரளிதரன் நன்றி கூறினார் .
- இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
- பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒன்றியம் சார்பாக 0-18 வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடைபெற இருக்கும் இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. இப்பேரணி என்.ஜி.ஜி.ஓ காலனியில் அமைந்துள்ள அரசு பொண்ணு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நடைபெற்றது இந்த பேரணியில் மாற்றுத்திறன் மாணவ மாணவர்களுக்கு உண்டான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்,ஆசிரிய- ஆசிரியைகள்,பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள்.
- கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள்.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனி, கே.எம்.சி. பப்ளிக் ஸ்கூல் எதிரில் உள்ள தெருவில் மத்திய அரசு நிதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள். ஆனால் கால்வாய் அமைக்க வில்லை. அடுத்த 200 அடிக்கு மேல் குழியும் தோண்டவில்லை. கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள். அதன் தரம் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளே இல்லாத பக்கம் கால்வாய் நேர்கோட்டில் இல்லாமல் வளைந்தும், நெளிந்தும் போடப்பட்டுள்ளது. இது அமைத்ததன் நோக்கமே புரியாமல் அந்த தெருவில் உள்ள மக்கள் புலம்பி தவிக்கிறார்கள். வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறம் குறைந்த வீடுகளே உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து பாதி பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைத்ததால் நிதி முறைகேடு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவே இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். மேலும் திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவலை திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பொது செயலாளர் பா.குமார் தெரிவித்துள்ளார்.
- தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும்.
- இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் அவினாசி ரோடு அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கான இலவச தொழில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இவ்வகுப்பானது வருகிற 9-ந்தேதி (திங்ட்கிழமை) முதல் தொடங்க உள்ளது. இதில் ஏ.சி. மற்றும் பிரிட்ஜ் சம்பந்தப்பட்ட பயிற்சிகள் தொடர்ந்து 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை. பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடைகள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். இதில் குறைந்த காலியிடங்களே உள்ளது. எனவே பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பேன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-4 ஆகியவற்றுடன் நேரில் வரவும். அல்லது http://tinyurl.com/4z2 என்ற ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிந்த பின் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். எனவே மேலும் இதுபற்றி தெரிந்து கொள்ள 9952518441, 8610533436, 9489043923 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.






