என் மலர்
தூத்துக்குடி
- நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது.
- அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த முடிவு.
தூத்துக்குடியில் முதல்முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
முள்ளக்காடு கிராமத்தில் ₹904 கோடியில் இதனை செயல்படுத்த சிப்காட் டெண்டர் கோரியுள்ளது.
நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளது எனவும் அரசு, தனியார் பங்களிப்பின் அடிப்படையில் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சனையை சமாளிக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
- அறநிலையத்துறை அலுவலர்கள் 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பஸ்களில் சென்றனர்.
- சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிற 10-ந் தேதி ஊர் திரும்புகின்றனர்.
திருச்செந்தூர்:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணமாக தங்கும் இடம், உணவு வசதியுடன் 60 முதல் 70 வயதுக்குட்ட பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தற்போது 3-ம் கட்டமாக இன்று திருச்செந்தூரில் இருந்து ஆன்மிக பயணம் தொடங்கியது. இந்த பயணத்தில் மதுரை, சிவகங்கை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மண்டலங்களை சேர்ந்த 202 பக்தர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் 40 பேர் என மொத்தம் 242 பேர் 5 பஸ்களில் சென்றனர்.
இதை முன்னிட்டு நேற்று மாலை ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவிலில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் வைத்து கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இன்று காலையில் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள இடத்தில் இருந்து ஆன்மீக பயணம் புறப்பட்டது. ஆன்மிக பயணத்தை திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், அறங்காவலர்கள் கணேசன், செந்தில்முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட அறங்காவலர் வாள்சுடலை, நகராட்சி கவுன்சிலர்கள் அந்தோணிரூமன், சுதாகர், சோமசுந்தரி, கிருஷ்ணவேணி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்மிக பயணமானது இன்று காலை திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு பழமுதிற்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, திருத்தணி மற்றும் பழனி ஆகிய படை வீடுகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிற 10-ந் தேதி ஊர் திரும்புகின்றனர்.
- மரக்கன்றுகள் தேவைக்கு 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி:
ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 4,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (02-06-2024) தூத்துக்குடியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் முதல் மரக்கன்றை விவசாயிக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிகத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்றார். அவர் முதல் மரக்கன்றை கூட்டாம்புளி கிராமத்தை சேர்ந்த ஜனார்த்தனன் வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.
இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4,17,000 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்த வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.
மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- 2014 ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம்.
- 2027-க்குள் 3வது இடத்தை அடைந்து விடுவோம் என்பது, பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி. நிச்சயம் நாம் அதை அடைவோம்.
தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,
2014 ஆம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 2027-க்குள் 3வது இடத்தை அடைந்து விடுவோம் என்பது, பிரதமர் மோடி கொடுத்துள்ள கேரண்டி. நிச்சயம் நாம் அதை அடைவோம். தமிழகத்தில் பாஜக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலிபரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழக காவல்துறையினர் இரண்டு நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கேள்வி கேட்ட வாலிபர் மீதும், அவரது தாய் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
Thoothukudi, Tamil Nadu: Union Minister and BJP candidate from Nilgiris, L Murugan says, "India's economy, which was at 10th position in 2014, has improved in the last 10 years and now we have reached 5th position...BJP will win double-digit seats in Tamil Nadu..." pic.twitter.com/xHVTgDp6aG
— ANI (@ANI) June 1, 2024
- மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும்.
தூத்துக்குடி:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை மந்திரி எல்.முருகன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கான ஆதரவு அலை வீசுகிறது. நாட்டில் நடை பெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பொறுப்பேற்பார்.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும். விவேகானந்தர் தியானம் செய்த குமரி முனையில் பிரதமர் தியானம் செய்து கொண்டிருக்கிறார்.
மேட்டுப்பாளையம் பகுதியில் கழிவுநீர் ஓடையை சுத்திகரிப்பது குறித்து காங்கிரஸ் கவுன்சிலரிடம் கேள்வி எழுப்பிய வாலி பரை அவதூறாக பேசி தாக்கி உள்ளனர். அந்த சம்பவத்திற்கு தமிழக காவல் துறையினர் 2 நாட்களாகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக கேள்வி கேட்ட இளைஞர் மீதும், தாய் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
சமூகவலைதளத்தில் ஏதாவது தகவல் வெளியிட்டால் அதிகாலை 2 மணிக்கு கைது செய்யும் காவல்துறை இந்த சம்பவத்தில் இன்னும் கைது செய்யாமல் உள்ளனர்.
2014-ம் ஆண்டு 10-வது இடத்தில் இருந்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் அடைந்து தற்போது 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். 2027-க்குள் 3-வது இடத்தை அடைந்து விடுவோம் என பிரதமர் மோடி கேரண்டி கொடுத்துள்ளார். அதனை நாம் நிச்சயம் அடைவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
- ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியன் பட்டணம் கடற்கரைக்கு செல்லும் பாதை வழியாக இலங்கைக்கு வாகனம் மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக மாவட்ட `கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதய ராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லோடு வேனில் 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டைகள் பீடி இலைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
போலீசார் வாகனத்தை சோதனையிட முயன்றதும் வாகனத்தில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். இதை யடுத்து பீடி இலைகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த 'கியூ' பிரிவு போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, வெள்ள மடத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் (வயது 63) என்பவரை மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதேபோல் நேற்று அதிகாலை தூத்துக்குடி தருவைகுளம் கடற்கரையில் ரூ. 40 லட்சம் மதிப்பில் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வேம்பார் கடற்கரையில் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.இதன்படி ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள பீடி இலை கடத்தல்களை `கியூ' பிரிவு போலீசார் தடுத்து கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
- கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.
- கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மாறி உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269 ஆகும். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்து உள்ளனர்.
இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு, ஊரை காலி செய்து வெளியூருக்கு சென்று குடியேறிவிட்டனர். ஆனால் கந்தசாமி (வயது 75) என்பவர் மட்டும் தொடர்ந்து அங்கேயே வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக கந்தசாமி தனியாக வசித்து வந்தார்.
மீனாட்சிபுரம் ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும். ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்த கந்தசாமி கடந்த 26-ந்தேதி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து கந்தசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவரது இறப்பு, இந்த ஊரை பூர்வீகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது என்று மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறி உள்ளனர். அந்த கிராமத்தில் வாழ்ந்த கடைசி மனிதரான கந்தசாமியும் மரணமடைந்துவிட்டதால் மனிதர்கள் யாரும் வசிக்காத இடமாக மீனாட்சிபுரம் மாறி உள்ளது.
- வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
- போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தியதும் கடத்துவதற்காக வேனில் வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே தருவைகுளம் கடற்கரை வழியாக பீடி இலை மூடைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜகுமார், இசக்கிமுத்து, காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை தருவைகுளம் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தருவைகுளம் கடற்கரைக்கு செல்லும் உப்பளப்பாதையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் லோடு ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அதில், இலங்கைக்கு கடத்துவதற்காக லோடு வேனில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 62 மூட்டை பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினர்.
போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தியதும் கடத்துவதற்காக வேனில் வந்த நபர்கள் தப்பி ஓடி விட்டனர். கைப்பற்றப்பட்ட பீடி இலை இலைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். தொடர்ந்து தூத்துக்குடி கியூ பிரிவு போலீசார் தப்பி ஓடியவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று காலையில் தனது வீடு அருகே மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டினார்.
- திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே உள்ள சீர்காட்சி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 60). இவர் இன்று காலையில் தனது வீடு அருகே மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது சுமார் 1½ அடி ஆழத்தில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை தென்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
- நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகள் வழியாக இலங்கைக்கு அவ்வப்போது படகுமூலம் பீடி இலைகள், மஞ்சள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்க மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடற்கரை வழியாக படகுமூலம் பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக தூத்துக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர்கள் ராமர், இருதயராஜ குமார், இசக்கிமுத்து, காவலர் பழனிபாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு வேம்பார் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அக்கறை என்ற பகுதியில் உள்ள கடற்கரையில் நாட்டுப் படகுமூலம் மர்ம நபர்கள் கடத்தலில் ஈடுபடுவதை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர், பிடிபட்ட நபர்கள் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ எடை கொண்ட 84 மூட்டை பீடி இலைகளை இலங்கைக்கு கடத்துவதாக முயன்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து எஸ் நிரோன் என்ற நாட்டுப் படகு மற்றும் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி, சுனாமி காலனியை சேர்ந்த கெனிஸ்டன்(வயது29), ராம்தாஸ்நகர் பொன்சிஸ் ராஜா(37), சிலுவைபட்டி பனிமயகார்வின்(19), கருப்பசாமிநகர் மாதவன்(21) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பீரோவில் தங்க மோதிரங்கள், தங்க நகைகள் என சுமார் 30 பவுன் இருந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் மணி.
இவர் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி மல்லிகா. இவர் கழுகுமலை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கோவையில் படித்து வருகிறார். தற்போது கோடைவிடுமுறை என்பதால் மணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன், கோவையில் படிக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் மணி வீட்டில் பணிபுரிக்கூடிய பணிப்பெண் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து அவர் மணிக்கும், நாலட்டின்புதூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. பீரோவில் தங்க மோதிரங்கள், தங்க நகைகள் என சுமார் 30 பவுன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் மணி மற்றும் அவரது மனைவி வந்த பிறகு தான் எவ்வளவு நகைகள் திருட்டு போய் உள்ளது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் மணி வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பதால், அப்பகுதியில் இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- சி.பா. ஆதித்தனாரின் நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 43-வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலையில் திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சி.பா.ஆதித்தனார் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர். சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜி ஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் தனலட்சுமி (பொறுப்பு), டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குறிச்செல்வி, டாக்டர் சிவந்தி அகடாமி ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் ரெஜூலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு வணிகர் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் காமராசு நாடார் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில கூடுதல் செயலாளர் டாக்டர் யாபேஸ், மாநில இணைச் செயலாளர்கள் செல்வகுமார், இசக்கி முத்து, ஆகியோர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட வணிகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்கம், காயல்பட்டினம் நாடார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் பஜார் வியாபாரிகள் சங்கம், திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சி.பா. ஆதித்தனாரின் 43-வது நினைவு நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு காயாமொழி ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ராகவ ஆதித்தன், பாலசுப்பிரமணி ஆதித்தன், தங்கேச ஆதித்தன், அசோக் ஆதித்தன், ராதாகிருஷ்ண ஆதித்தன், வரதராஜா ஆதித்தன், கார்த்திகேய ஆதித்தன், முருகன் ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராஜேந்திர ஆதித்தன், அச்சுத ஆதித்தன், குமரேச ஆதித்தன், சிவபால ஆதித்தன், பாலமுருகன் ஆதித்தன், குமரகுருபரர் ஆதித்தன், எஸ்.எஸ் ஆதித்தன், பகவதி ஆதித்தன், சண்முகானந்த ஆதித்தன்,ராமானந்த ஆதித்தன், ஜெயந்திர ஆதித்தன், அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






