என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பச்சையாறு அணையில் இருந்து 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் பூலாங்குளமும், மேலவடகரையில் பம்பன்குளமும் உள்ளன. இந்த குளங்களின் மூலம் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த குளங்களுக்கு மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் சென்றது. ஆனால் பச்சையாறு அணை கட்டப்பட்ட போது கால்வாய் அணைக்குள் சென்று விட்டது. அதன் பின்பு பச்சையாறு அணையில் இருந்து மடத்துக் கால்வாய் மூலம் 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குளங்களுக்கு தண்ணீர் வரும் மடத்துக் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    இதையடுத்து 2 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் பெய்து வரும் கனமழையினால் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் பம்பன்குளமும், பூலாங்குளமும் இன்னும் நிரம்பவில்லை. பராமரிப்பு இல்லாததால், மடத்து கால்வாயில் வரும் தண்ணீர் தடைபட்டு குளங்களுக்கு வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குளங்கள் நிரம்பாததால் குளங்கள் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மடத்து கால்வாயை பராமரித்து, 2 குளங்களுக்கும் போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • துர்நாற்றத்துடன் வெளியாகும் கழிவுநீர் நீண்ட தூரம் வரை சாலையில் செல்கிறது.
    • கழிவுநீர் குறித்து 4 ஆண்டுகளாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை டவுனில் முக்கிய பகுதிகளில் ஒன்றாக மேல மாடவீதி விளங்கி வருகிறது. இங்கு ஒரு சந்தியில் இருந்து துர்நாற்றத்துடன் வெளியாகும் கழிவுநீர் நீண்ட தூரம் வரை சாலையில் செல்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்கின்ற இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுவதற்கு காரணமாகின்றது. மேலும் நேதாஜி போஸ் மார்க்கெட் மற்றும் நெல்லையப்பர் கோவிலுக்கு பிரதான பின் வாசல் வழியாக செல்பவர்களும் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.

    இந்த கழிவு நீரில் வாகனத்தில் வேகமாக செல்பவர்களி னால் நடந்து செல்பவர்களின் ஆடைகள் அசுத்தமாகின்றது என பல்வேறு தரப்பினரும் புகார் கூறி வந்தனர். இது குறித்து நெல்லை மாவட்ட பொதுஜன பொது நலச்சங்க தலைவர் அயூப் கூறுகையில், இந்த கழிவுநீர் குறித்து 4 ஆண்டுகளாக மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிரந்தர தீர்வுக்கு ஏற்பாடு செய்யாமல் அலட்சியம் செய்யப்படுகிறது. எனவே பொதுநலன் கருதி மீண்டும் கழிவு நீர் ஓடுவதை தடுத்திட நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    • புதூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர்.
    • முகைதீன்,வசந்தகுமார் ஆகியோர் முருகனிடம் கஞ்சா வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் புதூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் களக்காடு நடுத்தெருவை சேர்ந்த முகைதீன் (25), கடம்போடுவாழ்வை சேர்ந்த வசந்தகுமார் (20) என்பதும், இவர்கள் களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த முருகன் (60) என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 4,650 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பருவமழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குண்டு-குழிகளில் மழைநீர் தேங்கி சகதிமயமாக காட்சி அளிக்கிறது.
    • பழுதடைந்துள்ள சாலைகள் நாகர்கோவில்-தென்காசி பிரதான சாலை ஆகும்.

    களக்காடு:

    களக்காடு பழைய பஸ் நிலைய பகுதியில் காமராஜர் சிலையில் இருந்து, அண்ணாசிலை வரும் வழியிலும், சேரன்மகாதேவி சாலையில் உள்ள தியேட்டர் அருகிலும், பெட்ரோல் பங்க் அருகிலும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டு-குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்களாகவும் சிதறி கிடக்கிறது.

    தற்போது இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சாலையில் உள்ள குண்டு-குழிகளில் மழைநீர் தேங்கி சகதிமயமாக காட்சி அளிக்கிறது. இதில் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது. பல்லாங்குழி போல் காட்சி அளிக்கும் சாலைகளால் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். பழுதடைந்துள்ள சாலைகள் நாகர்கோவில்-தென்காசி பிரதான சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.

    • 3 பேர் சக்தியை வெட்டிவிட்டு ஓடும் காட்சி பதிவாகி உள்ளது.
    • போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் வயல் தெருவில் வசித்து வருபவர் சக்தி(வயது 37). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    நெல்லை டவுன் ஆர்ச்சில் இருந்து மவுண்ட் ரோட்டுக்கு செல்லும் சாலையில் இவருக்கு சொந்தமான இடம் உள்ளது. தனது குழந்தையை பள்ளியில் இறக்கிவிட்டு, அந்த இடத்திற்கு இன்று காலை மொபட்டில் சக்தி சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்தியை சரமாரியாக வெட்டியது. இதில் கைகள் துண்டான நிலையில் சக்தி சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சக்தியை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அவரது குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சக்திக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தெரியவந்தது. இதனால் அங்குள்ள காய்கறி கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது 3 பேர் சக்தியை வெட்டிவிட்டு ஓடும் காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.

    • சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 116.80 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 77 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி 77.75 அடியாகவும் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று மழை குறைந்தது. இன்றும் காலை முதலே வெயில் அடிக்க தொடங்கியது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மலையையொட்டி அமைந்துள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 102 அடியை கடந்த நிலையில் இன்று காலை மேலும் 1 அடி உயர்ந்து 103.70 அடியானது.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 116.80 அடியாக உள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 71.85 அடியாக உள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் வெயில் அடித்தது. மழை பெய்யவில்லை.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாத நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் சற்று அதிகரித்துள்ளது. 85 அடி கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 77 அடியாகவும், 84 அடி கொண்ட ராமநதி 77.75 அடியாகவும் உள்ளது. குண்டாறு, கருப்பாநதி அணைகள் நிரம்பி பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று முன்தினம் வரை பெய்த மழையால் குற்றாலம் அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் போதிய மழை இல்லாததால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளது. இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டியது. அதில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அதில் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.
    • வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (வயது 50). இவர் நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். மேலும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக உள்ளார்.

    இன்று காலையில் வழக்கம் போல் வானுமாமலை மற்றும் அவரது மனைவி 9 மணியளவில் கடையை திறந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை கடையை நோக்கி வீசியுள்ளனர்.

    அந்த வெடிகுண்டு வெடிக்கவில்லை. தொடர்ந்து இரண்டாவது குண்டை எடுத்து வீசும் போது கடையில் முன்பு விழுந்து வெடித்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது குண்டை கீழே போட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாங்குநேரி போலீஸ் டி.எஸ்.பி. அசோக் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிக்காமல் உள்ள நாட்டு வெடிகுண்டை, வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    • இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
    • போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இவருக்கும் களக்காடு அருகே உள்ள மூங்கிலடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் கடந்த 1 மாதமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று மாணவி களக்காட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்து சுரேசை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது சுரேஷ் வீட்டிற்கு வெளியே வந்து நிற்கும் படி கூறியுள்ளார். இதற்கு மாணவி மறுத்துள்ளார்.

    இதையடுத்து சுரேஷ் நீ வெளியே வராவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் அச்சமடைந்த மாணவி உறவினர் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    பின்னர் சுரேஷ் மாணவியை மூங்கிலடி வயல் காட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை களக்காட்டில் விட்டு, விட்டு சென்று விட்டார்.

    இதுபற்றி மாணவி நாங்குநேரி மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுரேஷ் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    • சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்படும் இந்த திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.
    • திம்மராஜபுரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனை, ராதா புரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க பொருளாளர் வீனஸ் வீர அரசு தலைமையில் திசையன்விளை சுற்றுவட்டார விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து உபரி நீரை வறட்சி பகுதியான ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கு வெள்ளநீர் வடிகால் கால்வாய் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அமைக்கப்படும் இந்த திட்டம் முடியும் தருவாயில் உள்ளது.

    தற்போது திம்மராஜ புரத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் நடைமுறைப் படுத்தப்படாமல் உள்ளது. இந்த பாலத்தை நடைமுறைப்படுத்தினால் மட்டும்தான் இந்த திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.

    கால்வாயில் வரும் முழு தண்ணீரையும் அப்போது தான் வறட்சி பகுதிகளுக்கு சென்று சேர்க்க முடியும். எனவே திம்மராஜபுரம் பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    • நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • மேலப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி துணை கமிஷனர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

    மேலும் மாநகர பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரியும் மாடுகள் பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

    • கடந்த 2017-ம் ஆண்டு இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தார்.
    • சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றிலும் இணை கோவில்கள் உள்ளன.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    தீக்குளித்து பலி

    நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்ட மாக இருந்தபோது நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசி தர்மம் பஞ்சாயத்து எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கந்து வட்டி கொடுமை தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தார்.

    அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென இசக்கிமுத்து தனது குடும்பத்தினருடன் தீக்குளித்தார். இந்த சம்பவத்தில் இசக்கி முத்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்து விட்டனர்.

    சகோதரர் மனு

    இது தொடர்பாக அவரது சகோதரர் கோபி அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக கோபி இன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது சகோதரர் குடும்பத்தினர் தீக்குளித்து இறந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2022-ம் ஆண்டு சரிவர நடக்காத காரணத்தினால் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தோம். அதன்படி 6 வார காலத்திற்குள் வழக்கை முடிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் இதுவரை வழக்கு விசாரணை என்பது மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பாக போலீ சாரிடம் கேட்ட போது, வழக்கின் 4-வது குற்றவா ளியாக சேர்க்கப்பட்டுள்ள கார்த்திக் என்பவர் வெளிநாடு சென்று விட்டார். அவரை கண்டு பிடிக்க முடிய வில்லை என்று கூறி அலட்சியமாக பதில் கூறுகின்றனர். இதனால் வழக்கை முடிப்ப தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    எனவே தலைமறை வாக உள்ள 4-வது குற்ற வாளியை விரைந்து கண்டு பிடித்து இந்த வழக்கை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    சாலை வசதி

    அம்பை அருகே உள்ள சின்ன சங்கரன்கோவில் பாடகலிங்க சுவாமி பக்தர்கள் மற்றும் உழவார பணி குழுவினர் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்பை வட்டம் மலையன்குளம் கிராமத்தில் பாடகலிங்க சுவாமி கோவில் உள்ளது. சுமார் 95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோவிலை சுற்றிலும் இணை கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மாதம்தோறும் பல்வேறு பூஜைகள் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழா காலங்களில் அம்பை கல்லிடைக்குறிச்சியில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலுக்கு சரியான சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
    • விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் கிருஷ்ணகுமார் ஆய்வு செய்தார்.

    அம்பை:

    அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

    அவ்வாறு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வை யிட்டார். குறிப்பாக ஆலடியூர்-2 கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழை யினால் சாய்ந்த நெல் வயல்களை பார்வையிட்டார்.

    அங்கு இருந்த விவசாயிகளிடம் பாதிப்பு குறித்த விபரங்கள் கேட்டறிந்தார். உடன் அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார், வேளாண்மை துணை வேளாண்மை அலுவலர் திவான் பக்கீர் முகைதீன், உதவி வேளாண்மை அலுவ லர் சாமிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமலைக்குமார், இசக்கி முத்து, கிராம உதவியாளர் ரபீக் மற்றும் அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர். வேளாண் மைத்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களை பாதிப்பு குறித்து விவசாயிகள் வாரி யாக கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் அவர் விக்கிரமசிங்க புரத்தில் உள்ள துணை வேளா ண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து விதைகள் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி அம்பாசமுத்திரத்தில் உள்ள சில்லரை உரவிற்பனை கடையினை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உரங்கள் விற்பனை மற்றும் இருப் பினை ஆய்வு செய்தார். இருப்பு வித்தியாசம் இருந்த உரக்கடைக்கு விற்பனை தடை விதிக்கப் பட்டது.

    ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலு வலர் ஷாஹித் முகையதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×