என் மலர்
திருநெல்வேலி
- மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விட்டனர்.
- கேள்விகளுக்கு வனத்துறை அதிகாரிகள் மழுப்பலான பதில்களை ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதி களுக்கு அரசு பஸ்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் உறவி னர்கள் செல்ல வனத்துறை யினர் அனுமதி மறுத்த நிலையில், கடந்த மே மாதம் 26 -ந் தேதி மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறியும் உரிமை சட்டம்
இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியை சேர்ந்த வக்கீல் ராபர்ட் சந்திரகுமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுப்பு, வனத்துறையினர் வாகனம் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என சுமார் 32 கேள்விகள் கேட்டுள்ளார்.
இந்த கேள்விகளுக்கு வனத்துறை சார்பில் யூகத்தின் அடிப்படையில் கேள்வி உள்ளது என மழுப்பலான பதில்களை வனத்துறை அதிகாரிகள் அந்த ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.
மேலும் இதேபோல் போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பிய தகவல் அறியும் உரிமை சட்ட பதில் மனுவில், போக்குவரத்து கழகம் சார்பாக தெரிவிக்கையில், நெல்லை மண்டலத்தில் இருந்து மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ஏதும் மறுக்கப்படவில்லை.
மேலும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் பயணிகள் யாரும் கட்டா யப்படுத்தி இறக்கப்படு வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே அம்பை வனச் சரகத்தில் உள்ள அதிகாரி களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கண்ணன்-தேவிக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
- கண்ணன் பல்வேறு இடங்களில் தேடியும் தேவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
களக்காடை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவி (வயது 28). இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 28-ந் தேதி வீட்டை விட்டு சென்ற தேவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் பல்வேறு இடங்களில் தேடியும் தேவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான தேவியை தேடி வருகின்றனர்.
- குறைந்தபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவில் நிலம் இருத்தல் அவசியம் ஆகும்.
- கிசான் அட்டையை பயன்படுத்தி வங்கிகளில் எந்த அடகும் இன்றி ரூ. 1 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது.
அம்பை:
அம்பை வேளாண்மை உதவி இயக்குநர் கற்பக ராஜ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிசான் கடன்அட்டை
வேளாண்மைத்துறை சார்பாக அம்பை வட்டா ரத்தில் கிசான் கடன் அட்டைகள் பெற முகாம்கள் இன்று முதல் நடத்தப்பட உள்ளது. விவசாயிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கிசான் கடன் அட்டைகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
வங்கிகளை விவசாயிகள் அணுகும் சிரமங்களை குறைப்பதற்காக கிசான் கடன் அட்டைக்கான விண்ணப்ப படிவங்கள், ஆவணங்கள் விவசாயிகளிடம் இருந்து பெற்று வேளாண்மைதுறை மூலம் அந்தந்த வங்கி களுக்கு அனுப்பப் படுகிறது. இதற்கான முகாம்கள் அம்பை, அயன் சிங்கம்பட்டி மற்றும் விக்கிரமசிங்கபுரம் ஆகிய வேளாண்மை விரிவாக்க மையங்களில் அமைக்கப் பட்டு இன்று முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் அட்டை
விவசாயிகள் தங்கள் நில உடமை ஆவணங் களுடன் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், புகைப்படம் ஆகிய வற்றுடன் தங்கள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி உரிய விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் அளவில் நிலம் இருத்தல் அவசியம் ஆகும்.
கிசான் கடன் அட்டையை பயன்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எந்த அடகும் இன்றி ரூ. 1 லட்சம் வரை கடன் பெறும் வசதி உள்ளது. விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிருக்குத் தேவையான இடுபொருட்களை வாங்கிக் கொள்வதற்கும் கிசான் கடன் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம்.
விவசாயிகள் கடன் பெற தகுதி உள்ளவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் கிசான் கடன் அட்டை அந்தந்த வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே விண்ணப் பங்கள் சமர்ப்பித்து கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் இம்முகாமில் மீண்டும் விண்ணப்பம் செய்யலாம்.
இதுவரை விண்ணப் பிக்காத விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம். எனவே விவசாயிகள் இம்முகாமைப் பயன்படுத்தி கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்கள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
- கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 29-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கழைக் கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.விழாவுக்கு தமிழக கவர்னரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கினார்.
இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 13,236 ஆண்களும், 30 ஆயிரத்து 625 பெண்கள் என மொத்தம் 43,861 பேர் பட்டம் பெற தகுதியான வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இவர்களில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங் களில் முதலாம் இடம் பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என 1053 நபர்க ளுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
விழாவில் கவர்னர் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். அந்த வகையில் திருச்செந்தூரில் உள்ள கோவிந்தம்மாள் கல்லூரி யில் இளங்கலை கணிதம் படித்த திவ்யா என்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
ஆத்தூரை சேர்ந்த மாணவி திவ்யா தற்போது தற்போது ஆதித்தனார் கல்லூரியில் 2-ம் ஆண்டு முதுகலை கணிதம் படித்து வருகிறார். இவர் இளங்கலை கணித பாடப்பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மாணவியின் தந்தை லட்சுமணன் என்பவர் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் கணக்கராக பணியாற்றி வருகிறார்.
இதேபோல் கோவிந்தம்மாள் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிப்பில் மாணவி பாத்திமா சஹாரா தங்கப் பதக்கமும், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பில் மாணவி ஜெயரூபி தங்கப்பதக்கமும் கவர்னரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டனர்.
இதே போல் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 5 பேர் டாக்டர் பட்டமும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் படித்த 3 பேரும் டாக்டர் பட்டம் பெற்றனர்.
மேலும் காயல்பட்டினம் மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து 2 பதக்கங்களை பெற்றார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், நயினார் நாகேந்திரன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பல்கலைக் கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி முத்துகுமாரை கைது செய்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.
- அவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை சந்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 35). நகை தொழிலாளி. இவர் சமூக வலைதளங்களில் முதலமைச்சர் படத்தை அவதூறாக சித்தரித்து கருத்துக்களை பதிவிட்டு உள்ளதாக அவர் மீது திசையன்விளை நகர தி.மு.க. செயலாளர் ஜாண் கென்னடி போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயலெட்சுமி முத்துகுமாரை கைது செய்து சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரை சைபர்கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரு வாலிபர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்டார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காட்டில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பலர் களக்காட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதுபோல களக்காட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரண்டு வந்த பொதுமக்களும் அணி, அணியாக வந்து, காமராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினர். விழாவின் போது இளைஞர்கள் மேள தாளங்களுடன் ஆட்டம் போட்டவாறு களக்காடு அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. திடீரென ஒரு வாலிபர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்டார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞரை பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளார். போலீசை கண்ட இளைஞர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த இளைஞர் போலீசாரை தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதற்கிடையே பஸ்சின் மீது ஏறி வாலிபர் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பஸ்சின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர் மாவடி ராமச்சந்திரா புரத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சிவலிங்கம் (வயது25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- புனித நீராடிய பக்தர்கள் பாபநாசநாதரை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
- இந்த மாதம் 2 அமாவாசை வருவதால் பெரும்பாலானோர் குழப்பத்தில் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.
சிங்கை:
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நெல்லை மாவட்டத்திலும் இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர்நிலைகளில் காலையிலேயே குவிந்து விடுவார்கள். அவர்கள் வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்து விட்டு புனித நீராடுவார்கள்.
இந்த ஆண்டும் இன்று ஆடி அமாவாசையையொட்டி நெல்லையில் பாபநாசம் படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். எள்ளும், நீரும் இறைத்து வழிபட்டு புனித நீராடி கோவிலில் சுவாமி பாபநாச நாதரை தரிசனம் செய்து விட்டு சென்றனர். சிலர் குடும்பத்தினருடன் கார்களில் வந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு போக்கு வரத்தை சரி செய்தனர். கார்கள் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியில் நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் பழைய கோவில் ரோட்டில் நிறுத்தி பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்ட னர். அம்பை காசிநாத சுவாமி கோவில் படித்துறை, ஆஞ்சநேயர் கோவில் படித்துறை, ரெயில்வே பாலம் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரை, சின்ன சங்கரன்கோவில் ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்தே திரளானவர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
நெல்லை டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, சிந்துபூந்துறை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறை, ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் ஒரு சிலரே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் நாளான இன்றும், கடைசி நாளான வருகிற ஆகஸ்டு 17-ந்தேதி என இந்த மாதத்தில் 2 அமாவாசை வருவதால் பெரும்பாலானோர் குழப்பத்தில் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.
மேலும் இந்த மாதத்தில் 2-வது வரும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்தால் நல்லது என பெரும்பாலான ஜோதிடர்கள் தெரிவித்து இருப்பதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஒரு சிலரே தர்ப்பணம் கொடுத்ததை காணமுடிந்தது.
- 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை ரெயிலில் டீ விற்று வருவதாக குருநாதன் மனுவில் கூறியுள்ளார்.
- அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
நெல்லை:
நெல்லை டவுன் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குருநாதன். இவர் இன்று தனது மனைவி, மகள் மற்றும் கைக்குழந்தையுடன் வந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 12 ஆண்டுகளாக நெல்லை- செங்கோட்டை செல்லும் ரெயிலில் கேன் மூலம் குறைந்த விலையில் டீ விற்று வருகிறேன். இதனை நம்பியே எனது குடுத்பத்தின் வாழ்வாதாரம் உள்ளது. இந்நிலையில் அம்பை ரெயில் நிலையத்தில் கேன்டீன் நடத்தி வரும் ஒருவர் என்னை குறைந்த விலையில் டீ விற்க கூடாது எனவும், இதனால் அவருக்கு வியாபாரம் பாதிக்கப்படுவதாக கூறி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனது வாழ்வாதரம் கருதி இதுகுறித்து நடவடிக்கை எடுத்து எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண கிளை செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
- இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளது.
நெல்லை:
பாளை தெற்கு பகுதியில் உள்ள மாற்று கட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி பாளையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா தலைமை தாங்கினார். பாளை பகுதி மாணவர் அணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன் இதற்கான ஏற்படுகளை செய்து இருந்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசா ராஜா பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு சாதாரண கிளைச் செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இன்று பொதுச்செயலாளராக தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி உள்ளார். அ.தி.மு.க.வில் மட்டும் தான் இப்படி நடக்கும்.
அ.தி.மு.க. மக்கள் பணி செய்கின்ற இயக்கம். உண்மையான இயக்கம். அ.தி.மு.க.வுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி காணப்படுவதை பார்க்கி ன்றேன். இளைஞர்கள் அ.தி.மு.க.விற்கு வருவதை வரவேற்கிறேன்.
தாலிக்கு தங்கம், விலையில்லா சைக்கிள், விலையில்லா மடிக்கணினி, விலையில்லா கல்வி உப கரணங்கள் , அம்மா உணவகங்கள், அம்மா உப்பு, குடிநீர் என நல்ல திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி தந்தது அ.தி.மு.க. தான். ஜெயலலிதா வழியில் வந்த பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக், நீட் தேர்வில் அரசு பள்ளியில் படிக்கின்ற எழை எளிய மாணவ- மாணவிகள் மருத்துவராக வேண்டும் என்று 7.5 சதவீத உள்ஒதுக்கிடு வழங்கினார்.
இதன்மூலம் எழை- எளிய மக்கள் குழந்தைகளின் கனவை நிறைவேற்றி வருடத்திற்கு 500-க்கும் மேற்பட்டோர் எந்தவித செலவும் இல்லாமல் மாணவ- மாணவிகள் மருத்துவ படிப்பு பெற வழி செய்தார்.
இன்று விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்வு உள்ளது. உங்களுக்கெல்லாம் தெரியும் தக்காளி, இஞ்சி, பூண்டு, வெங்காயம். பருப்பு, எண்ணெய் போன்ற மளிகை பொருட்களின் விலை எல்லாம் விஷம் போல் ஏறி உள்ளது. இந்த அரசுக்கு ஏன் வாக்களித்தோம் என்பதை மக்கள் நன்கு புரிந்து உள்ளார்கள்.
நீங்கள் கட்சியில் இணைந்து பணியாற்றி நல்ல ஒரு பதவிக்கு வருகின்ற வாய்ப்பை பெற வேண்டும். உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செய லாளர் மகபூப்ஜான், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சண்முககுமார், மற்றும் முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், வக்கீல் ஜெயபாலன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தச்சை மாதவன், பாளை பகுதி நிர்வாகிகள் அவைத்தலைவர் லெட்சுமணன் முத்துலட்சுமி கற்பகவள்ளி, தாஜுதின், ஆனந்தி, சரவணன், ஆனந்தராஜ், வட்ட செயலாளர்கள் முத்துகுமார், ராசி காதர் மஸ்தன் , ராமர் லட்சுமிநாராயன், அருள் ஜெய்சிங், புதிய முத்து , தச்சை மேற்கு பகுதி துணை செயலாளர் பழநிசுப்பையா, பொருளாளர் கோல்ட் கண்ணன், கிழக்கு பகுதி துணை செயலாளர் சத்யா முருகன் மற்றும் பரமன், நெல்லை மானா, பாளை மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
- பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- மகா தீபாராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை:
தேவர்களின் இரவு பொழுதாக கருதப்படும் தட்சணாயன புண்ணிய காலம் இன்று தொடங்குகிறது. இதேபோல ஆடிமாத பிறப்பும் இன்று தொடங்கும் நிலையில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான பாளையில் அமைந்திருக்கும் அழகிய மன்னார் ராஜ கோபால சுவாமி கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி கோ பூஜை மற்றும் சிறப்பு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது.
இதனையொட்டி காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு ராஜ கோபால சுவாமி விஸ்வரூப தரிசன மும், அதனை தொடர்ந்து கருடன் சன்னதி முன்பு கோபூஜையும் நடைபெற்றது. பசு மற்றும் கன்றுக்கு புதிய வஸ்தி ரங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொ டர்ந்து லட்சுமி அஷ்டோத்திர சிறப்பு பூஜை களும், குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட பக்தர்களும் பசுவிற்கு அகத்திக்கீரை- பழ வகைகளை வழங்கி வழிபாடு செய்தனர்.
- பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார்.
- பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற கோட்டம் பெருமாள்புரம் பிரிவு அலுவலகத்தில் மின் வினி யோகத்தில் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி பாதுகாப்பு வகுப்பு இன்று காலை நடைபெற்றது.
அதில் பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவது பற்றி உதவி செயற்பொறியாளர் சின்னசாமி எடுத்துரைத்தார். அப்போது அவர் பேசுகையில், மின் பாதைகளில் பணிபுரியும் பொழுது மின் விநியோகத்தை நிறுத்தி நில இணைப்பு செய்து அதன் பின்பு பணி புரிவது அவசியம். காற்று திறப்பான்களை திறக்கும் பொழுதும், மூடும் போதும் கையுறையை உபயோகப்படுத்த வேண்டும். பெருமாள் புரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று சூறை காற்றாக வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக மின் பாதைகளுக்கு அருகில் செல்லும் மரக் கிளைகளை மின்னோட்டத்தை நிறுத்தி அப்புறப்படுத்தி மின் தடங்கல் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டும்.
மின்கம்பங்களிலும், மின்மாற்றிகளிலும் பணிபுரியும்போது எக்காரணம் கொண்டும் செல்போனில் பேசக்கூடாது. அப்படி பேசினால் அதனால் சிந்தனை சிதறல் ஏற்படும். தங்கள் பகுதி மின் நுகர்வோர்களிடம் அந்தந்த பகுதி பணியாளர்கள் தொலைபேசி எண்களையும், மின்னகம் தொலைபேசி எண் 94987 94987 ஆகியவற்றை வழங்கிட உத்தரவிட்டார். இந்த பாதுகாப்பு வகுப்பில் பெருமாள்புரம் பிரிவுக்கு உட்பட்ட அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
- நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.
- 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள்
இதில் கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார்.
சங்கர் நகர் அருகே நாரணம்மாள்புரம் வ.உ.சி. நகரை சேர்ந்த திருமா அழகு என்பவர் தலைமையில் வந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தாழையூத்து பகுதியை சேர்ந்த ஒரு நபர் சாதி ரீதியான மோதல்களுக்கு வழி வகுப்பதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
சுடுகாட்டுக்கு தனிப்பட்டா
அம்பை தாலுகா செட்டி மேடு மற்றும் மேல ஏர்மாள் புரத்தைச் சேர்ந்த ஏராள மான பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிமேடு மற்றும் மேல ஏர்மாள்புரத்தில் நாடார் சமுதாய மக்கள் சுமார் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நாங்கள் இங்கு உள்ள சுடுகாட்டை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றோம்.
தற்போது இந்த இடம் புறம்போக்கு என்று கூறி தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றனர். தற்போது அந்த இடத்தில் நன்மை கூடம் சீரமைப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் அம்பை தாசில்தார் சுமதி சில நாட்களுக்கு முன்பு அங்கு வந்து கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்.
இது தொடர்பாக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் தனி நபர்களுக்கு அந்த இடத்தை பட்டா போட முயற்சி நடப்பதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் கலெக்டர் கவனத்தில் எடுத்து சுடுகாட் டிற்கு உரிய அந்த இடத்தை அரசு பதிவேட்டில் ஏற்றி தனி பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
பா.ஜனதா மனு
பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலானது நின்ற சீர் நெடுமாறன் என்ற மன்னரின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. பழமையான இந்த கோவிலுக்கு 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் இருக்க வேண்டும்.
சிவாலயம் மற்றும் விஷ்ணு ஆலயம் எல்லாம் ஆகம விதிகளின்படி 3 மாட வீதிகளும், 4 ரத வீதிகளும் அமையும் படி நிர்மானிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
ஆனால் நெல்லையப்பர் கோவிலில் 2 மாட வீதிகளான தெற்கு மாட வீதியும், மேல மாட வீதியும் தான் உள்ளது. வடக்கு மாடவீதியை காணவில்லை. எனவே வடக்கு மாட வீதியை கண்டுபிடித்து வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.






