என் மலர்
உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் அரசு பஸ்சின் மீது ஏறி ஆட்டம் போட்ட வாலிபர்
- ஒரு வாலிபர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்டார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
- களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காட்டில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் உள்ளிட்ட பலர் களக்காட்டில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இதுபோல களக்காட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரண்டு வந்த பொதுமக்களும் அணி, அணியாக வந்து, காமராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கினர். விழாவின் போது இளைஞர்கள் மேள தாளங்களுடன் ஆட்டம் போட்டவாறு களக்காடு அண்ணாசிலை பஸ் நிறுத்தத்தில் ஊர்வலமாக சென்றனர்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. திடீரென ஒரு வாலிபர் பஸ்சின் மேற்கூரை மீது ஏறி ஆட்டம் போட்டார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இளைஞரை பஸ்சை விட்டு கீழே இறங்குமாறு கூறியுள்ளார். போலீசை கண்ட இளைஞர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது போலீசார் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த இளைஞர் போலீசாரை தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதற்கிடையே பஸ்சின் மீது ஏறி வாலிபர் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பஸ்சின் மீது ஏறி ஆட்டம் போட்ட இளைஞர் மாவடி ராமச்சந்திரா புரத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சிவலிங்கம் (வயது25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.






