search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்
    X

    நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்ட காட்சி.

    இன்று ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள்

    • புனித நீராடிய பக்தர்கள் பாபநாசநாதரை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
    • இந்த மாதம் 2 அமாவாசை வருவதால் பெரும்பாலானோர் குழப்பத்தில் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.

    சிங்கை:

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்தால் அவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நெல்லை மாவட்டத்திலும் இந்த நாட்களில் பொதுமக்கள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நீர்நிலைகளில் காலையிலேயே குவிந்து விடுவார்கள். அவர்கள் வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பின்னர் அந்த பிண்டத்தை தாமிரபரணி ஆற்றில் கரைத்து விட்டு புனித நீராடுவார்கள்.

    இந்த ஆண்டும் இன்று ஆடி அமாவாசையையொட்டி நெல்லையில் பாபநாசம் படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். எள்ளும், நீரும் இறைத்து வழிபட்டு புனித நீராடி கோவிலில் சுவாமி பாபநாச நாதரை தரிசனம் செய்து விட்டு சென்றனர். சிலர் குடும்பத்தினருடன் கார்களில் வந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் கோவில் பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு போக்கு வரத்தை சரி செய்தனர். கார்கள் விக்கிரமசிங்கபுரம் டாணா பகுதியில் நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் பழைய கோவில் ரோட்டில் நிறுத்தி பொதுமக்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்ட னர். அம்பை காசிநாத சுவாமி கோவில் படித்துறை, ஆஞ்சநேயர் கோவில் படித்துறை, ரெயில்வே பாலம் அருகில் தாமிரபரணி ஆற்றங்கரை, சின்ன சங்கரன்கோவில் ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்தே திரளானவர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    நெல்லை டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில் படித்துறை, சிந்துபூந்துறை வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறை, ஜடாயு தீர்த்தம் ஆகிய இடங்களில் ஒரு சிலரே தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இந்த ஆண்டு ஆடி மாதம் முதல் நாளான இன்றும், கடைசி நாளான வருகிற ஆகஸ்டு 17-ந்தேதி என இந்த மாதத்தில் 2 அமாவாசை வருவதால் பெரும்பாலானோர் குழப்பத்தில் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.

    மேலும் இந்த மாதத்தில் 2-வது வரும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுத்தால் நல்லது என பெரும்பாலான ஜோதிடர்கள் தெரிவித்து இருப்பதால் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் ஒரு சிலரே தர்ப்பணம் கொடுத்ததை காணமுடிந்தது.

    Next Story
    ×