என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோவில் உள்ளது. இங்கு சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவு படுத்துவதை தவறு என உணர்த்தும் திருத்தலமாகும். இங்கு ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஆடித்தபசுவை முன்னிட்டு இன்று கொடியோற்று விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் உள்ளிட்டவை செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க கொடியற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு மகா தீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் அம்பை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சி களான சங்கரநாராயணர் காட்சி தரிசனம் மற்றும் சங்கரலிங்க சுவாமி சுவாமி அம்பாளுக்கு இடப வாகன காட்சி தரிசனம் வருகிற 31 -ந் தேதி மாலை நடைபெற இருக்கிறது. மேலும் மறுநாள் இரவு தெப்ப திருவிழாவும் நடைபெற இருக்கிறது.

    • மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.
    • குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இதில் 32.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடம் அமைந்திருக்கிறது. இங்கு மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

    வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தின் போது இங்கு காற்றின் வேகத்தால் திடீரென தீ பற்றி மளமளவென எரிவதும், அதனை தீயணைப்புத் துறையினர் வந்து அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 3 லாரிகளில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . நள்ளிரவு வரை நடந்த இந்த பணியினை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென பரவியது. இதனால் ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது. குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலையில் இருந்து பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதற்கிடையே குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் சுமார் 5 கிலோ மீட்டர் பரப்பளவு வரை விரிந்து இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற நிலைக்கு பொதுமக்கள் தொடர்ந்து தள்ளப்பட்டு வருகின்றனர் என்றும், சிலர் வேண்டுமென்றே குப்பை கிடங்கிற்கு தீ வைத்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    நேற்றும், இன்றும் எரியும் குப்பை கிடங்கு தீயின் காரணமாக வெளியேறும் புகை மூட்டத்தினால் குப்பை கிடங்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாற்று இடங்களுக்கு தற்காலிகமாக சென்றுள்ளனர்.

    தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் கலந்து கொண்ட சில அ.தி.மு.க. நிர்வாகிகள் கழுத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை அணிந்து பங்கேற்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் கீழ் பகுதியில் இன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    காய்கறி மாலை

    இதில் கலந்து கொண்ட சில அ.தி.மு.க. நிர்வாகிகள் கழுத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை அணிந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே. சீனி வாசன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, செவல் முத்துசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரை குளம் பால்துரை, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துப் பாண்டி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், ஒன்றிய செய லாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராம சுப்பிர மணியன், கே.பி.கே. செல்வ ராஜ், அந்தோணி அமலராஜா, பகுதி செய லாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், ஜெனி, வக்கீல் ஜெயபாலன், நெல்லை மாவட்ட ஆவின் பாலக தலைவர் கட்டளை அன்பு, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், பகுதி துணைச்செயலாளர் மாரிசன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட பொருளாளர் காளிதாஸ் பாண்டியன், பகுதி அவைத்தலைவர் ஆறுமுகம், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனிமுகமது சேட், விவசாய அணி கனித்துரை மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீவை சின்ன துரை, டால் சரவணன், தச்சை மாதவன், நத்தம் வெள்ளபாண்டி, பக்கீர் மைதீன், ஆபீஸ் மணி, பூக்கடை சப்பானி முத்து, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 படித்து வரும் மூன்றடைப்பை சேர்ந்த ஒரு மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார்.
    • காயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பை அடுத்த கோவைகுளத்தை சேர்ந்த 16 வயது மாணவர் மருதகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    கடந்த 18-ந் தேதி அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மூன்றடைப்பை சேர்ந்த ஒரு மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். இதை பார்த்த கோவைகுளம் மாணவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை கிண்டலடித்து அவதூறாக பேசியுள்ளார். இதையறிந்த மூன்றடைப்பு மாணவர், நேற்று பள்ளிக்கு வந்த கோவைகுளத்தை சேர்ந்த மாணவரிடம் என்னை ஏன் அவதூறாக பேசினாய்? என கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு 2 பேருக்கும் இடையே கைகலப்பு உருவானது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்கள் விலக்கி விட்டனர். பின்னர் நேற்று மாலையில் கோவைகுளம் மாணவர் மருதகுளத்தில் உள்ள மிட்டாய் கடை அருகே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மூன்றடைப்பு மாணவர் கையில் வைத்திருந்த சிறிய கத்தியால் கோவைகுளம் மாணவரை குத்திவிட்டு தப்பியோடினார்.

    இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பியோடிய மூன்றடைப்பு மாணவரை தேடி வருகின்றனர்.

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
    • மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி அமைந்துள்ள அணை பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சேர்வலாறு அணை பகுதியில் அதிகபட்சமாக 9 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்தது. பாபநாசம் அணையில் தற்போது 71.05 அடியும், சேர்வலாறில் 82.74 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    அணைகளுக்கு தற்போது 672 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணை களில் இருந்து கார் பருவ சாகுபடிக்காக வினாடிக்கு 658 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கோடை மேலழகியான் மற்றும் நதியுண்ணி, கோடகன் கால்வாய் பாசன விவசாயிகள் நெல் பயிடும் பணியை உற்சாகமாக தொடங்கி உள்ளனர். முக்கூடல் சுற்று வட்டார பகுதிகளில் தாமிர பரணி ஆற்றை ஒட்டிய பகுதி களில் நெல் நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனை ஒட்டி அமைந்துள்ள தென்காசி, ஆய்குடி உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு இதமான காற்று வீசி வருகிறது.

    ஒரு சில இடங்களில் அவ்வப்போது சாரல் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தென்காசியில் அதிகபட்சமாக 6 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளை பொறுத்தவரை கருப்பாநதி, குண்டாறு அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கடனா மற்றும் ராமநதி அணைகளில் தலா 2 மில்லிமீட்டரும், அடவி நயினாரில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    அதேபோல் குண்டாறு அணையில் நிரம்பி வழியும் நீரிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று குளித்து மகிழ்கின்றனர்.

    • பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.
    • மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி 6-வது வார்டு கவுன்சிலரும், கல்வி குழு தலைவருமான பவுல்ராஜ் நெல்லை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில், பாளை சமாதானபுரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி செல்லும் சாலையில் எம்.கே.பி. நகர் சந்திப்பு மற்றும் ராம் பாப்புலர் சந்திப்பு பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

    அதேபோல் மழைக்காலத்தில் வெள்ள நீர் நிரம்பி வீடுகளுக்குள் செல்வதை தடுக்க மணிக்கூண்டு அருகில் கூடுதலாக புதிய பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி, நிர்வாகி சுனில் குமார் உட்பட பலர் உள்ளனர்.

    • மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் என்பவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா (வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
    • ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    களக்காடு:

    நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அரசனார்குளத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருக்கும், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்த ஜெயசுதா(வயது 39) என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது ஜெயசுதாவுக்கு 15 பவுன் தங்க நகைகளும், ரூ.50 ஆயிரம் ரொக்க பணமும் அவரது பெற்றோர் வழங்கினர். மேலும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கினர்.

    திருமணத்திற்கு பின் லெட்சுமணன் தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ஜெய சுதாவின் 10 பவுன் நகைகளை பெற்று அடமானம் வைத்துள்ளார். அதுபோல அவரது சகோதரர் அய்யப்ப னுக்கு, ஜெயசுதாவின் 5 பவுன் நகைகளை கொடுத்துள்ளார்.

    இதுபற்றி ஜெயசுதா தட்டிக்கேட்டதால் அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன் பின் லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன் ஆகியோர் சேர்ந்து ரூ.1.50 லட்சம் தந்துவிடுவதாகவும், விவாகரத்து மனுவில் கையெழுத்து போடும்படியும் மிரட்டி கையெழுத்தை பெற்று நாங்குநேரி கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே விவாகரத்து வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயசுதாவிற்கு தெரியாமல் லெட்சுமணன் தெற்கு வாகைகுளத்தை சேர்ந்த தங்கசெல்வம் என்பவரை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதனை அறிந்த ஜெயசுதா நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து லெட்சுமணன், அவரது சகோதரர்கள் ராமர், பஞ்சவர்ணம், அய்யப்பன், உறவினர் தங்க செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர்கள் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
    • இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக அரசின் 'கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்' வருகிற செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

    நெல்லை மாவட்டம்

    இதனை ஒட்டி இன்று முதல் ரேஷன் அட்டைதாரர் களுக்கு வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகம் செய்ய தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதற்கான பணிகளை வருவாய் மற்றும் கூட்டுறவுத்துறை பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்தில் இன்று ஊரக பகுதியில் மொத்தம் உள்ள 528 ரேஷன் கடைகளில் இன்று முதல் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடைகளில் வினியோகம்

    மாவட்டத்தை பொறுத்த வரை வீடு வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட வில்லை. பஞ்சாயத்து அலுவலகங்கள் முன்பும், ரேஷன் கடைகள் முன்பும் பொது மக்களை வர வழைத்து டோக்கன் விநியோ கிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பாளை கே.டி.சி. நகரில் ரேஷன் கடை முன்பு டோக்கன் விநியோகிக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    5 லட்சம் விண்ணப்பங்கள்

    நெல்லை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை விண்ணப் பிப்பதற்காக 5 லட்சம் விண்ணப்பங்கள் வந்து ள்ளது. இவை அனைத்தும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு முழுமையாக நிரப்பப்பட்டு வருகிற 24-ம் தேதி சிறப்பு முகாம் நடத்தி அதன் மூலம் தகுதியான வர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடை பெறும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    நகர்புறத்தில் 1-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
    • ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன.

    நெல்லை:

    கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திறன் மேம்பாட்டு பயிற்சி

    தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மூன்று மாத கால திறன் பயிற்சியை நடத்த உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்து இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    மத்திய அரசு சான்றிதழ்

    இதேபோல் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன. பயிற்சி காலம் 7 நாட்கள் ஆகும். தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பயிற்சி நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சி வழங்கப்படும் தொழில்களாகும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானூர் அடுத்துள்ள வடக்கு வாகைக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (வயது 18), உச்சிமாகாளி (18). இவர்கள் 2 பேரும் மானூர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர்.
    • அழகியபாண்டியபுரம் ஆற்றுப்பாலம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    நெல்லை:

    நெல்லை அருகே மானூர் அடுத்துள்ள வடக்கு வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் மகன் ஜெயராம் (வயது 18), சங்கரலிங்கம் மகன் உச்சிமாகாளி (18). இவர்கள் 2 பேரும் மானூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

    வேன் மோதி பலி

    நேற்று வழக்கம் போல் 2 பேரும் கல்லூரிக்கு சென்றனர். மாலையில் கல்லூரி முடிந்ததும் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்கள் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் ஆற்றுப்பாலம் பகுதியில் சென்ற போது எதிரே ஊத்துமலையில் இருந்து நெல்லை நோக்கி வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராம், உச்சி மாகாளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்தில் வேனின் முன்பகுதி சேதமடைந்ததுடன், கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. இதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக மானூர் போலீசார் வேனை ஓட்டி வந்தது பாளை கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்த முத்துராஜன் (வயது30) என்பவர் மீது வழக்குழுபதிவு செய்துள்ளனர்.

    அவர் விபத்தில் காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
    • விபத்தை அறிந்ததும் கலெக்டர் கார்த்திகேயன் காரில் இருந்து கீழே இறங்கி வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினார்.

    நெல்லை:

    நாங்குநேரியை அடுத்து உள்ள பரப்பாடியில் இருந்து ஒரு வேனில் 20-க்கும் மேற்பட்டவர்கள், துக்க நிகழ்வு ஒன்றுக்காக பாளை வி.எம்.சத்திரம் அருகே உள்ள ஆரோக்கிய நாதபுரத்திற்கு வந்தனர்.

    பாளை அருகே ரெட்டியார்பட்டி மலை பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வேனின் டயர் வெடித்தது.

    இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. எனவே வேனில் இருந்த பெண்கள் உள்பட அனைவரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையே அந்த வழியாக கலெக்டரின் கார் சென்றது. விபத்தை அறிந்ததும் கலெக்டர் கார்த்திகேயன் காரில் இருந்து கீழே இறங்கி வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினார்.

    உடனடியாக அவரது உத்தரவிற்கிணங்க 5 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. அதில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டீன் ரேவதியிடம் கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக்கொண்டார்.

    • மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற பாஜக எம்எல்ஏ மகன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
    • இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பா.ஜனதாவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் நயினார் பாலாஜி.

    இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சென்னை விருகம்பாக்கம் அருகே ஆற்காட்டில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.3 ஏக்கர் நிலத்தை ரூ.46 கோடிக்கு பேரம் பேசி அதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மோசடியாக ஒப்பந்த பத்திரம் போட்டதாகவும், அதற்கு முன்தொகையாக ரூ.2.50 கோடி கொடுத்ததாகவும் அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தது.

    அவர்களது புகாரில், ஆற்காட்டில் தற்போது சர்ச்சைக்குரிய இடம் குலாப்தாஸ் நாராயணன் என்பவரது பேரன் ஜெயேந்திர ஓராவுக்கு சொந்தமானது என்று கூறி அவரிடம் இருந்து இளையராஜா என்பவர் அந்த இடத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி பத்திரம் கிரயம் முடித்துள்ளார். பின்னர் அந்த இடத்தை அவரிடம் இருந்து வாங்க முடிவு செய்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் இணைந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியாக ஒப்பந்த பதிவு செய்துள்ளனர்.

    இதில் குலாப்தாஸ் நாராயணன் என்பவர் கடந்த 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் வைத்து இறந்துவிட்டார் என்று கூறி அதற்கான இறப்பு சான்றிதழை இளையராஜாவும், நயினார் பாலாஜியும் காட்டுகின்றனர். ஆனால் அவர் சென்னையில் கடந்த 1944-ம் ஆண்டு இறந்ததாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இறப்பு சான்றிதழ் ஆதாரம் இருக்கிறது. எனவே இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும். மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற நயினார் பாலாஜி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை கவனத்தில் எடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, இதுகுறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி மோசடி நிரூபணமாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் முழுமையான விசாரணைக்கு பின்னர், இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி இந்த பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையடுத்து நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் மகன் நயினார் பாலாஜி பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    ×