search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ- 5 கிலோமீட்டர் தூரத்திற்கு புகைமண்டலம்: பொதுமக்கள் அவதி
    X

    குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரியும் தீ- 5 கிலோமீட்டர் தூரத்திற்கு புகைமண்டலம்: பொதுமக்கள் அவதி

    • மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.
    • குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

    இதில் 32.5 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடம் அமைந்திருக்கிறது. இங்கு மாநகராட்சி சார்பில் நாள்தோறும் 110 டன் வரை குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது.

    வழக்கமாக தென்மேற்கு பருவக்காற்று காலத்தின் போது இங்கு காற்றின் வேகத்தால் திடீரென தீ பற்றி மளமளவென எரிவதும், அதனை தீயணைப்புத் துறையினர் வந்து அணைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது.

    உடனே அக்கம் பக்கத்தினர் பாளை மற்றும் பேட்டை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் 3 லாரிகளில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் . நள்ளிரவு வரை நடந்த இந்த பணியினை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

    காற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தினால் தீ மளமளவென பரவியது. இதனால் ராமையன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புகை மண்டலமாக காட்சியளிக்க தொடங்கியது. குப்பை கிடங்கு முழுவதும் தீ பரவிய காரணத்தினால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக காலையில் இருந்து பற்றி எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதற்கிடையே குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகை மண்டலம் சுமார் 5 கிலோ மீட்டர் பரப்பளவு வரை விரிந்து இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் இது போன்ற நிலைக்கு பொதுமக்கள் தொடர்ந்து தள்ளப்பட்டு வருகின்றனர் என்றும், சிலர் வேண்டுமென்றே குப்பை கிடங்கிற்கு தீ வைத்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    நேற்றும், இன்றும் எரியும் குப்பை கிடங்கு தீயின் காரணமாக வெளியேறும் புகை மூட்டத்தினால் குப்பை கிடங்கு அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் மாற்று இடங்களுக்கு தற்காலிகமாக சென்றுள்ளனர்.

    தொடர்ந்து இதே நிலை நீடித்து வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம் எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×