search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nainar Balaji"

    • மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற பாஜக எம்எல்ஏ மகன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
    • இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பா.ஜனதாவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார். இவரது மூத்த மகன் நயினார் பாலாஜி.

    இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான சென்னை விருகம்பாக்கம் அருகே ஆற்காட்டில் உள்ள சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.3 ஏக்கர் நிலத்தை ரூ.46 கோடிக்கு பேரம் பேசி அதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி மோசடியாக ஒப்பந்த பத்திரம் போட்டதாகவும், அதற்கு முன்தொகையாக ரூ.2.50 கோடி கொடுத்ததாகவும் அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருந்தது.

    அவர்களது புகாரில், ஆற்காட்டில் தற்போது சர்ச்சைக்குரிய இடம் குலாப்தாஸ் நாராயணன் என்பவரது பேரன் ஜெயேந்திர ஓராவுக்கு சொந்தமானது என்று கூறி அவரிடம் இருந்து இளையராஜா என்பவர் அந்த இடத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி பத்திரம் கிரயம் முடித்துள்ளார். பின்னர் அந்த இடத்தை அவரிடம் இருந்து வாங்க முடிவு செய்து நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் அவரது மகன் நயினார் பாலாஜி ஆகியோர் இணைந்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் போலியாக ஒப்பந்த பதிவு செய்துள்ளனர்.

    இதில் குலாப்தாஸ் நாராயணன் என்பவர் கடந்த 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் வைத்து இறந்துவிட்டார் என்று கூறி அதற்கான இறப்பு சான்றிதழை இளையராஜாவும், நயினார் பாலாஜியும் காட்டுகின்றனர். ஆனால் அவர் சென்னையில் கடந்த 1944-ம் ஆண்டு இறந்ததாக சென்னை மாநகராட்சி இணையதளத்தில் இறப்பு சான்றிதழ் ஆதாரம் இருக்கிறது. எனவே இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும். மோசடியாக ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயன்ற நயினார் பாலாஜி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை கவனத்தில் எடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி, இதுகுறித்து 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி மோசடி நிரூபணமாகும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் முழுமையான விசாரணைக்கு பின்னர், இந்திய தண்டனை சட்டம் 463, 470 ஆகியவற்றின்படி இந்த பத்திரப்பதிவு மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதனை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இதையடுத்து நெல்லை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வின் மகன் நயினார் பாலாஜி பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    ×