கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி- உதவி ஆணையர் தகவல்

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன.
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி- உதவி ஆணையர் தகவல்
Published on

நெல்லை:

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திறன் மேம்பாட்டு பயிற்சி

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மூன்று மாத கால திறன் பயிற்சியை நடத்த உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்து இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

மத்திய அரசு சான்றிதழ்

இதேபோல் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தமிழ்நாடு கட்டுமான கழகம் மற்றும் எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையமும் சேர்ந்து நடத்த உள்ளன. பயிற்சி காலம் 7 நாட்கள் ஆகும். தையூரில் அமையவுள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் பயிற்சி நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள் தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகிய பயிற்சி வழங்கப்படும் தொழில்களாகும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினமும் ரூ.800 வழங்கப்படும்.

தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அண்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com