என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே 2 கல்லூரி மாணவர்கள் பலி: விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது வழக்கு
- மானூர் அடுத்துள்ள வடக்கு வாகைக்குளம் பகுதியை சேர்ந்த ஜெயராம் (வயது 18), உச்சிமாகாளி (18). இவர்கள் 2 பேரும் மானூர் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர்.
- அழகியபாண்டியபுரம் ஆற்றுப்பாலம் பகுதியில் சென்ற போது எதிரே வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
நெல்லை:
நெல்லை அருகே மானூர் அடுத்துள்ள வடக்கு வாகைக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் மகன் ஜெயராம் (வயது 18), சங்கரலிங்கம் மகன் உச்சிமாகாளி (18). இவர்கள் 2 பேரும் மானூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.
வேன் மோதி பலி
நேற்று வழக்கம் போல் 2 பேரும் கல்லூரிக்கு சென்றனர். மாலையில் கல்லூரி முடிந்ததும் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்கள் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரம் ஆற்றுப்பாலம் பகுதியில் சென்ற போது எதிரே ஊத்துமலையில் இருந்து நெல்லை நோக்கி வந்த வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயராம், உச்சி மாகாளி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்தில் வேனின் முன்பகுதி சேதமடைந்ததுடன், கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. இதில் டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக மானூர் போலீசார் வேனை ஓட்டி வந்தது பாளை கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடியை சேர்ந்த முத்துராஜன் (வயது30) என்பவர் மீது வழக்குழுபதிவு செய்துள்ளனர்.
அவர் விபத்தில் காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






