என் மலர்
திருநெல்வேலி
- அரவிந்த் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள சண்முகாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா. இவரது மகன் அரவிந்த் (வயது 21).
மரத்தில் மோதி பலி
இவர் கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வேலைக்கு செல்வதற்காக அரவிந்த் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள தனியார் மாவு மில் அருகே உள்ள சாலையில் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கங்கைகொண்டான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+2
- வண்ண பலூன்கள், ஜெபமாலை வடிவிலான பலூன் பறக்கவிடப்பட்டது.
- ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடக்கமாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் கோவிலை சுற்றியுள்ள ரதவீதி வழியாக எடுத்து வரப்பட்டது.
கொடியேற்றம்
சப்பரம் கோவில் வளாகத்தை வந்தடைந்ததும் பரிசுத்த அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர் பெரியவர்கள் கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தனர்.
இந்த புனித கொடியை ஆயர் ஜெபம் செய்து அர்ச்சித்தார். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் நடைபெற்றது. வண்ண, வண்ண பலூன்கள், ஜெபமாலை வடிவிலான பலூன் பறக்கவிடப்பட்டது.
புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர் செல்வம், குருவானவர்கள் ஜெகதீஷ், பீற்றர் பாஸ்டின், ரூபன், நெல்சன் பால்ராஜ் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆயர் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.
வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாதா காட்சி கொடுத்த மலைக்கெபியில் திருப்பலியும் இரவு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரின் செயலர் ரினோ அடிகளார் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. 8-ம் திருவிழா காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனியும் அதனைத் தொடர்ந்து மாலை ஆராதனையும் நடைபெறுகிறது.
தேர்ப்பவனி
வருகிற 4-ந்தேதி 9-ம்திரு விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிச்சாமி தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத் திருப்பலியும், இரவு 12 மணிக்கு தமிழ் திருப்பலியும் நடைபெறுகிறது.
அதன் பின்னர் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. இப்பவனியில் கேரளா, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபடுவார்கள். வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று ஆதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், மாலை 7 மணிக்கு முதல் சனி வழிபாடும் நடைபெறுகிறது.
கொடியிறக்கம்
ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்கு தந்தை ரோஸ், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழாவையொட்டி நாகர்கோவில், வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பெண் இசக்கியிடம் அவரது மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது
- தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள தெற்கு மீனவன்குளம், நேரு தெருவை சேர்ந்தவர் இசக்கி (வயது 32). தொழிலாளி.
இவர் தனது குடும்ப செலவுக்காக கடந்த ஆண்டு கீழதுவரைகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு மாதம் தோறும் ரூ.2,500 வட்டி செலுத்தி வந்தார். இந்நிலையில் இந்த மாதம் வட்டி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அந்த பெண் இசக்கி வீட்டிற்கு சென்று, அவரது மனைவி எஸ்தர் மரியாவிடம்(25) வட்டி கேட்டு அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி எஸ்தர் மரியா தனது கணவர் இசக்கியிடம் கூறினார்.
இதனைதொடர்ந்து இசக்கி அந்த பெண்ணிடம் இதுபற்றி கேட்டார். அப்போதும் அந்த பெண் இசக்கியிடம் அவரது மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து இசக்கி களக்காடு போலீசிலும் புகார் செய்தார்.
இதற்கிடையே மனைவியை அவதூறாக பேசியதால் இசக்கி மனம் உடைந்தார். நேற்று இரவில் இசக்கி திடீரென விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளது. கடன் தகராறில் பெண், மனைவி குறித்து ஆபாசமாக பேசியதால் மனம் உடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
+2
- நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
- முன்னதாக மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு தேர்தல்
முன்னதாக மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதற்காக மாநகராட்சி கவுன்சிலர்கள் 55 பேரும் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷன ரும், தேர்தல் அதிகாரியுமான சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு மேல்முறை யீட்டு குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மனு தாக்கல் நடைபெற்றது.
வேட்பாளர்கள் அறிவிப்பு
ஏற்கனவே நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பா ளர் தி.மு.க மைதீன்கான், வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தார்.
அதன்படி தச்சை மண்ட லத்துக்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கந்தன், கீதா ஆகியோரும், நெல்லை மண்டலத்தில் கவுன்சிலர்கள் உலகநாதன், ராஜேஸ்வரி ஆகியோரும், பாளை மண்டலத்தில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, பாலம்மாள், மேலப்பாளையம் மண்டலத்தில் கவுன்சிலர்கள் முகைதீன் அப்துல் காதர், ஆமீனா பீவி ஆகியோர் என 9 பேர் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டிருந்தனர்.
இதனால் போட்டி இருக்காது, அனைத்து கவுன்சிலர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
3 பேர் சுயேட்சையாக போட்டி
இந்நிலையில் திடீர் திருப்பமாக தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் ஜெகநாதன், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், 42-வது வார்டு உறுப்பினர் பொன் மாணிக்கம் ஆகிய 3 பேரும் சுயேட்சையாக போட்டி யிடுவதாக கூறி மனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி யில் 55 கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
அவர்களுக்காக வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்கு சீட்டிலும் 12 கவுன்சிலர்களின் பெயர்கள் இருந்தது. அதில் 9 கவுன்சிலர்களை அவர்கள் தேர்வு செய்து ஓட்டு போட்டியில் போட்டனர்.
தொடர்ந்து வாக்கு என்னும் பணி நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட 6 பேர் வெற்றி பெற்றனர். அதே நேரம் மத்திய மாவட்ட தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, பாலம்மாள், ஆமீனாள் பீவி ஆகிய 3 பேரும் தோல்வி அடைந்தனர்.
அவர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட ஜெகநாதன், ரவீந்தர், பொன் மாணிக்கம் ஆகிய 3 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டம்
இதைத்தொடர்ந்து மாநகராட்சி மைய மண்டபத்தில் கூட்டம் நடந்தது. மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து அவர் டவுன் ஆர்ச்சில் இருந்து குறுக்குத் துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் வைக்கப்படு வதாக தீர்மானத்தை வாசித்தார்.
அப்போது கவுன்சிலர் சங்கர் எழுந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மேலும் பல கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் சரவணன் அறிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேச தொடங்கினர்.
பெண் கவுன்சிலர்கள் போராட்டம்
அப்போது நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி பேசும் போது, தனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்து வருவதாக தெரி வித்தார். அவருக்கு ஆதர வாக கோகுல வாணி உள்ளிட்ட பெண் கவுன்சி லர்கள் கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி மைய மண்ட பத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது கவுன்சிலர்கள் ரவீந்தர், மாரியப்பன் உள்ளிட்ட வர்கள் பேசும் போது, மேயரின் செயல் பாட்டால் தான் தற்போது வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலில் போட்டி ஏற்பட்டது. இல்லையென்றால் 9 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப் போம் என கூறி கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு கூச்சல்- குழப்பம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப் படுவதாக தெரிவித்து மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதை கேட்ட கவுன்சி லர்கள் மேயர் கூட்டத்திற்கு வரவேண்டும், அவரிடம் எங்களது வார்டு பகுதிகளின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற வேண்டும் என கூறினர். அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
- சில வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது.
நெல்லை:
சில வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தக்காளி, இஞ்சி விலை உயர்வு
அதே நேரத்தில் தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் கிணற்றில் இருக்கும் நீரின் அளவை பொறுத்து குறைவாக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்னர்.
வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மானூர், அழகியபாண்டியபுரம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கொத்தமல்லி இலை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும்.
ஆனால் மழை இல்லாததால் போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு சில காய்கறிகளின் விலை ரூ.100 முதல் ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் வகையில் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலையை கட்டுப்படுத்த ரூ.60 என்ற விலையில் ரேசன் கடைகளில் அரசு விற்பனை செய்த நிலையில் தக்காளி விலை வெளி சந்தைகளில் சற்று குறைய தொடங்கியது.
மீண்டும் உயர்வு
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அவற்றின் விலை உயர தொடங்கி உள்ளது. இன்று நெல்லை மாவட்ட உழவர்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.116-க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் ரூ.64, சின்ன வெங்காயம் ரூ.72, அவரைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.32, வெண்டை ரூ.28 என்ற விலையில் விற்பனையானது.
அதே நேரத்தில் இன்று பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் தரத்திற்கேற்ப விற்பனையாகிறது. பீன்ஸ் ஒருகிலோ ரூ.100-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ.70-க்கும், இஞ்சி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சற்று குறைந்ததால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நெல்லை:
நெல்லை கோபாலசமுத்திரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலுவலகம் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் 500 துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிராம உதயம் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் அப்துல் கலாமின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகளை வழங்கினார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வழக்கறிஞர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஸ்வரி வரவேற்று பேசினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர்கள் முருகன், பால சுப்பிரமணியன், கார்த்திக், சசிகலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் அப்துல்கலாம் பற்றி கருத்துரை வழங்கினர்.
கிராம உதயம் தனி அலுவலர் கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் துணிப் பைகள் வழங்கப்பட்டன.
- தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், தடுக்கும் முறைகள் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி மருத்துவ அலுவலர்கள் பேசினர்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியில் இளம் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கல்லூரியின் தேசிய அகத்தர மதிப்பிட்டு குழு சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மேஜர் ராஜன் தலைமையில் நடைபெற்றது.
திசையன்விளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திலகேஷ் வர்மா மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் ஏற்படும் விதம், தடுக்கும் முறைகள் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது பற்றி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், ராஜராஜேஸ்வரி, இளம் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளர்கள் பிருந்தா, கிரிஜா மற்றும் கல்லூரியின் அகத்தர மதிப்பிட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.
- நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காரணமாக வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய தமிழர்களில் தொழில் தொடங்கிட ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிப்ப தற்காக அவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் குறு தொழில்கள் செய்திட அதிக பட்சமாக ரூ. 2½ லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும் எனவும் இததற்காக ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனை தொடர்ந்து எம்.இ.ஜி.பி. என்ற திட்டத்தினை உருவாக்கி செயல்படுத்தும் விதமாக ரூ. 5 கோடியே 97 லட்சத்து 35 ஆயிரத்தை ஒதுக்கி இத்திட்டத்தை மாவட்ட தொழில்மையம், அயலகத்தமிழர் நல ஆணை யரகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டு உள்ளது.
இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோரின் வயது, பொது பிரிவினருக்கு 18 முதல் 45-க்குள்ளும், பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது 18 முதல் 55-க்குள்ளும் இருக்க வேண்டும்.
மேலும் கல்வி தகுதியாக குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சியோடு வேலை வாய்ப்பு விசாவுடன் 2 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்து 1-1-2020 அல்லது அதற்கு பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவராக இருத்தல் வேண்டும்.
உற்பத்தி துறையை பொருத்தமட்டில் அதிகப்பட்ச திட்டச் செலவு ரூ. 15 லட்சத்திற்குள்ளும், சேவை மற்றும் வணிகத்துறை பொறுத்தமட்டில் அதிகபட்ச திட்டச் செலவு ரூ. 5 லட்சத்திற்கு ள்ளும் இருத்தல் வேண்டும்.
தொழில் முனைவோரின் முதலீடு பொதுப்பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம், சிறப்பு பிரிவினருக்கு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் இருத்தல் வேண்டும். அரசின் மானியத்தொகையாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை வழங்கப்படும்.
இந்த திட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தில் விண்ணப்பிப்போர் நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடவுச்சீட்டு, விசா நகல், கல்விச்சான்று, இருப்பிடச்சான்று, சாதிச் சான்று, மாற்றுத்திறனாளி களுக்கான சான்று மற்றும் திட்ட விபரங்களுடன் சமாப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு நெல்லை மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அலுவலக நாட்களில் சந்தித்து விபரம் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி மரிய ஜெபஸ்டின்.
- தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மரியஜெபஸ்டினை வழிமறித்து தாக்கினார்
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி மரிய ஜெபஸ்டின் (வயது51). இவரது சகோதரர் எவரெஸ்ட் அதே ஊரைச் சேர்ந்த ராபின் என்பவரது தாயாரிடம் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் ராபினுக்கும், எவரெஸ்டுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மரியஜெபஸ்டின் தோட்டத்திற்கு சென்ற நேரத்தில் ராபின் அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவி ஜெனிட்டா மேரியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த மரியஜெபஸ்டினை வழிமறித்து தாக்கினார். தொடர்ந்த கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராபினை தேடி வருகின்றனர்.
- நெல்லை மாநகர பகுதி மக்கள் தொகை பெருக்கம், வணிக வளாகங்கள், வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
- இதனை சரி செய்யும் விதமாக மாநகர பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகள் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு மக்கள் தொகை பெருக்கம், வணிக வளாகங்கள், வாகனங்களின் போக்குவரத்து அதிகரிப்பு காரணமாக பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது.
இதனை சரி செய்யும் விதமாக மாநகர பகுதியில் போக்குவரத்து அதிகம் உள்ள சாலையான டவுன்-குற்றாலம் சாலை, எஸ்.என். ஹைரோடு, வண்ணார்பேட்டை புறவழிச்சாலை, மத்திய சிறை வழியாக செல்லும் திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட சாலை களை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக பழைய பேட்டை சோதனை சாவடியில் இருந்து டவுன் தொண்டர் சன்னதி வரையிலும் ஒடுக்கமாகவும், சேதமடைந்தும் காணப்பட்ட சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நெடுஞ் சாலைத்துறை தற்போது பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கண்டியப்பேரி முக்கு முதல் தொண்டர் சன்னதி வரை யிலும் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு விட்டது.
தொடர்ந்து கண்டியப்பேரி வளைவு பகுதியில் உள்ள பழைய பாலம் சிறிய அளவில் இருப்பதால் அந்த பகுதியில் விபத்துக்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதனை யும் அகலப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அந்த பாலம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு புதிதாக காலம் கட்டும் பணி அங்கு நடைபெற்று வரு கிறது.
இதனால் அந்த பகுதி வழியாக சிறிய ரக வாக னங்கள் மட்டும் செல்வதற்கு தற்காலிக சாலை அமைக்கப் பட்டுள்ளது. அதே நேரத்தில் நெல்லையில் இருந்து தென்காசி மார்க்கமாக செல்லும் பஸ்கள் காட்சி மண்டபத்தில் இருந்து கோடீஸ்வரன் நகர், புதுப்பேட்டை பஸ் நிறுத்தம் வழியாக சென்று பழைய பேட்டை சோதனை சாவடி வழியாக தென்காசி நான்கு வழி சாலையில் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
கடந்த 10 நாட்களாக இந்த வழியாக பஸ்கள் இயங்கி வரும் நிலையில் எந்த விதமான அரசு அறிவிப்பும் இன்றி கூடுதல் கட்டணமாக ரூ.3 வசூல் செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக தென்காசியில் இருந்து நெல்லைக்கு வரும் அரசு பஸ்களிலும் கூடுதல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தென்காசியில் இருந்து நெல்லைக்கு ரூ.32 கட்டண மாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.35 வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து கண்டக்டரிடம் பயணிகள் கேட்கும் போது, அவர்கள் போக்கு வரத்து கழக உத்தரவு என்று கூறிவிட்டு டிக்கெட்டை வசூல் செய்து விடுகின்றனர். இது தொடர்பாக சில பயணிகள் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி தென்காசி செல்லும் பஸ்களில் நடக்கிறது.
ஆனாலும் பஸ்கள் வழக்கமான பாதையை பயன்படுத்தாமல், மாற்றுப்பாதையில் சுற்றி செல்வதால் டீசல் செலவை ஈடுகட்டும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இதனால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
- முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
- தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு கும்பல் மண்ணுளி பாம்பை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக களக்காடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்பேரில் வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் களக்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் ஒரு காரில் சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் வனத்துறையினரிடம் சிக்கியவர்கள் குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள கல்குளத்தை சேர்ந்த தனீஸ்(வயது 27), கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சன்னி(59), களக்காடு அருகே கீழக்கருவேலங்குளம் கரையிருப்பை சேர்ந்த முத்துசாமி(43), ஆழ்வார்குறிச்சி தொண்டர் தெருவை சேர்ந்த முருகேசன்(45), கீழப்பத்தை பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஹரி என்ற ஐயப்பன்(41), கேரளா மாநிலம் எர்ணா குளம் அருகே ஹைகாட்டு காராவை சேர்ந்த அர்சத்(55) என்பதும் தெரியவந்தது.
மேலும் தனீஸ் என்பவர் தன்னிடம் மண்ணுளி பாம்பு விற்பனைக்கு இருப்பதாக சன்னி, அர்சத் ஆகியோரை களக்காட்டிற்கு வரவழைத்ததும், அவர் வைத்திருந்த மண்ணுளி பாம்பிற்கு ரூ.10 லட்சம் வரை பேரம் பேசியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து தனீஸ், சன்னி, அர்சத், முத்துசாமி, முருகேசன், ஐயப்பன், அர்சத் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
மேலும் கீழக்கரு வேலங்குளத்தில் முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 6 பேரும் நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக அந்த கும்பலிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன், லேப்டாப் ஆகியவை கைப்பற்றப்பட்டது. அதில் தனீசின் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான மண்ணுளி பாம்புகளின் புகைப்படங்கள் இருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் தனீஷ் மற்றும் அர்சத் ஆகியோருக்கு வெளிமாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தனீசின் செல்போனை ஆய்வு செய்து, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக களக்காடு புதுத்தெருவை சேர்ந்த அந்தோணி முத்து(41) உள்பட சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அவரை கைது செய்தால் மேலும் பல உண்மைகள் வெளி வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பாபநாசம் அணையில் கடந்த மாதம் தொடக்கத்தில் 20 அடிக்கும் கீழாக தண்ணீர் சென்றது.
- அணைக்கு வினாடிக்கு 1057 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
சிங்கை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிட்டத்தக்க அளவு பெய்யாமல் போய்விட்டது. ஆனாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழையால் குடிநீர் பற்றாக்குறை அபாயத்தில் இருந்து இந்த 2 மாவட்ட மக்களும் தப்பி விட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் கடந்த மாதம் தொடக்கத்தில் 20 அடிக்கும் கீழாக தண்ணீர் சென்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் அணை நீர்இருப்பு உயர்ந்து நிரம்பிவிடும் என்று நம்பியிருந்த விவசாயிகளுக்கு மழை மிகவும் ஏமாற்றம் அளித்துவிட்டது.
எனினும் தற்போது ஓரளவுக்கு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டிவிட்டது. இதனால் கார் பருவ சாகுபடி க்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 70.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1057 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 704.75 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
நேற்று முதல் அணை பகுதிகளில் மழை பெய்ய வில்லை. அதே நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.29 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.15 அடியாகவும் உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. அடவிநயினார் மற்றும் குண்டாறு அணை பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினாரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆய்குடியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.






