search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomatoes Price"

    • சில வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது.

    நெல்லை:

    சில வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயம் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    தக்காளி, இஞ்சி விலை உயர்வு

    அதே நேரத்தில் தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் கிணற்றில் இருக்கும் நீரின் அளவை பொறுத்து குறைவாக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்னர்.

    வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மானூர், அழகியபாண்டியபுரம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கொத்தமல்லி இலை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்து மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும்.

    ஆனால் மழை இல்லாததால் போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு சில காய்கறிகளின் விலை ரூ.100 முதல் ரூ.180 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, மிளகாய், பீன்ஸ் உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை விண்ணை முட்டும் வகையில் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலையை கட்டுப்படுத்த ரூ.60 என்ற விலையில் ரேசன் கடைகளில் அரசு விற்பனை செய்த நிலையில் தக்காளி விலை வெளி சந்தைகளில் சற்று குறைய தொடங்கியது.

    மீண்டும் உயர்வு

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அவற்றின் விலை உயர தொடங்கி உள்ளது. இன்று நெல்லை மாவட்ட உழவர்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.116-க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் ரூ.64, சின்ன வெங்காயம் ரூ.72, அவரைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.32, வெண்டை ரூ.28 என்ற விலையில் விற்பனையானது.

    அதே நேரத்தில் இன்று பாளை மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.80 முதல் ரூ.100 வரையிலும் தரத்திற்கேற்ப விற்பனையாகிறது. பீன்ஸ் ஒருகிலோ ரூ.100-க்கும், கேரட் ஒரு கிலோ ரூ.70-க்கும், இஞ்சி ரூ.300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை சற்று குறைந்ததால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ×