search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடரும் சாரல் மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் 70 அடியாக நீடிப்பு
    X

    நெல்லை மாவட்டத்தில் மலை பகுதியில் பெய்த மழையால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. கோடையில் வறண்டு காட்சியளித்த அந்த அணை இன்று 70 அடி தண்ணீருடன் ரம்மியமாக காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.

    தொடரும் சாரல் மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் 70 அடியாக நீடிப்பு

    • பாபநாசம் அணையில் கடந்த மாதம் தொடக்கத்தில் 20 அடிக்கும் கீழாக தண்ணீர் சென்றது.
    • அணைக்கு வினாடிக்கு 1057 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிங்கை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறிப்பிட்டத்தக்க அளவு பெய்யாமல் போய்விட்டது. ஆனாலும் அவ்வப்போது பெய்யும் திடீர் மழையால் குடிநீர் பற்றாக்குறை அபாயத்தில் இருந்து இந்த 2 மாவட்ட மக்களும் தப்பி விட்டனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் கடந்த மாதம் தொடக்கத்தில் 20 அடிக்கும் கீழாக தண்ணீர் சென்றது. தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டால் அணை நீர்இருப்பு உயர்ந்து நிரம்பிவிடும் என்று நம்பியிருந்த விவசாயிகளுக்கு மழை மிகவும் ஏமாற்றம் அளித்துவிட்டது.

    எனினும் தற்போது ஓரளவுக்கு பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டிவிட்டது. இதனால் கார் பருவ சாகுபடி க்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 70.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1057 கனஅடி நீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 704.75 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

    நேற்று முதல் அணை பகுதிகளில் மழை பெய்ய வில்லை. அதே நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 83.29 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 44.15 அடியாகவும் உள்ளது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. அடவிநயினார் மற்றும் குண்டாறு அணை பகுதிகளில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினாரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆய்குடியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    Next Story
    ×