search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெற்குகள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • வண்ண பலூன்கள், ஜெபமாலை வடிவிலான பலூன் பறக்கவிடப்பட்டது.
    • ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலயத்தின் 138-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடக்கமாக புனித மிக்கேல் அதிதூதர் சப்பரம் கோவிலை சுற்றியுள்ள ரதவீதி வழியாக எடுத்து வரப்பட்டது.

    கொடியேற்றம்

    சப்பரம் கோவில் வளாகத்தை வந்தடைந்ததும் பரிசுத்த அதிசய பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் ஊர் பெரியவர்கள் கோவில் உள்ளிருந்து எடுத்து வந்தனர்.

    இந்த புனித கொடியை ஆயர் ஜெபம் செய்து அர்ச்சித்தார். பின்னர் தர்மகர்த்தா கொடியேற்றினார். இதனைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் நடைபெற்றது. வண்ண, வண்ண பலூன்கள், ஜெபமாலை வடிவிலான பலூன் பறக்கவிடப்பட்டது.

    புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் பன்னீர் செல்வம், குருவானவர்கள் ஜெகதீஷ், பீற்றர் பாஸ்டின், ரூபன், நெல்சன் பால்ராஜ் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஆயர் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திரியாத்திரை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    வருகிற 2-ந் தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாதா காட்சி கொடுத்த மலைக்கெபியில் திருப்பலியும் இரவு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயரின் செயலர் ரினோ அடிகளார் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடைபெறுகிறது. 8-ம் திருவிழா காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறுகின்ற திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு ஆயர் தலைமையில் நற்கருணைப்பவனியும் அதனைத் தொடர்ந்து மாலை ஆராதனையும் நடைபெறுகிறது.

    தேர்ப்பவனி

    வருகிற 4-ந்தேதி 9-ம்திரு விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குருவானவர் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிச்சாமி தலைமையில் சிறப்பு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மலையாளத் திருப்பலியும், இரவு 12 மணிக்கு தமிழ் திருப்பலியும் நடைபெறுகிறது.

    அதன் பின்னர் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெறுகிறது. இப்பவனியில் கேரளா, மராட்டியம் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபடுவார்கள். வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று ஆதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும், மாலை 7 மணிக்கு முதல் சனி வழிபாடும் நடைபெறுகிறது.

    கொடியிறக்கம்

    ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் தலைமையில் பங்கு தந்தை ஜெரால்டு எஸ். ரவி, உதவி பங்கு தந்தை ரோஸ், பங்கு மக்கள் செய்துள்ளனர். திருவிழாவையொட்டி நாகர்கோவில், வள்ளியூர், திசையன்விளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×