என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.
    • மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.

    இதில் மிதவை கப்பல் கடலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்பதற்காக இலங்கை கொழும்புவில் இருந்து ஓரியன் என்ற மீட்பு கப்பல் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மிதவை கப்பலை மீட்பதற்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் தற்போது அதன் மூலம் மீட்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.

    இதற்கிடையே மேலும் ஒரு இழுவை கப்பலை கொழும்புவில் இருந்து கொண்டு வர ஏற்பாடுகள் நடந்த நிலையில் தற்போது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தரை தட்டிய மிதவை கப்பல் பாறைப்பகுதியில் சிக்கியுள்ளதால் அதில் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. அந்த சேதத்தை சரி செய்த பின்பு தான் மிதவைப் கப்பலை மீட்க முடியும் என்பதால் அதிகாரிகள் அதுவரை மீட்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

    அதே நேரத்தில் ராட்சத கிரேன்கள் மூலமாக மிதவை கப்பலில் உள்ள நீராவி உற்பத்தி கலனை மீட்க முடியுமா எனவும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.
    • மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நெல்லை:

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டும் சதுர்த்தி விழாவையொட்டி ரசாயன கலப்பு கொண்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க ஐகோர்ட்டும், பசுமை தீர்ப்பாயமும் தடை விதித்துள்ளது.

    இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு கூடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் பாளை சீவலப்பேரி ரோடு கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் செய்து வரும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான விநாயகர் சிலைகள் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி, அங்கு தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்வதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

    இதைத்தொடர்ந்து தகரம் வைத்து அந்த கூடத்தை அடைத்து அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதற்கு நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். வழிபடுவதற்காக செய்யப்பட்ட சிலைகளை விற்பனைக்கு வழங்காமல் தடுத்து, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை ஏற்படுத்தும் விதமாக உள்நோக்கத்தோடு தமிழக அரசு செயல்படுவதாக அவர்கள் புகார் கூறினர்.

    மேலும் தயாரித்து வைத்துள்ள சிலைகளை விற்பனைக்கு வழங்க கோரி நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் இன்று வண்ணார்பேட்டை மேம்பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகளுடன் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவேசம், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, நாகராஜன், முன்னாள் மேயர் புவனேஸ்வரி, மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையொட்டி அங்கு பாளை உதவி கமிஷனர் பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தொடர்ந்து பா.ஜ.க.வினர் சாலை மறியலுக்கு முயற்சி செய்தனர். அப்போது அவர்களிடம் உதவி கமிஷனர் மற்றும் பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை மறியலுக்கு அனுமதி கிடையாது, மீறி மறியலுக்கு முயன்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அப்போது அவர்களிடம் மாவட்ட தலைவர் தயாசங்கர் கூறுகையில், இந்த ஆண்டு 180 சிலைகள் தயாரிக்கப்பட்டு கிருபா நகர் கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளுக்கு நாங்கள் முன்பணமும் கொடுத்துவிட்டோம். எனவே இந்த ஆண்டு மட்டும் அந்த சிலைகளை எங்களுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுப்படி கரைக்காவிட்டாலும் பரவாயில்லை, ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கு மட்டுமாவது அனுமதி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து அவர்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் பேசி இறுதி முடிவை அறிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இறுதி முடிவு தெரியும்வரை இங்கிருந்து கலைந்து செல்லமாட்டோம் என்று கூறி பாரதிய ஜனதா கட்சியினர் அங்கேயே அமர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
    • போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு சென்ற அந்த சிறுமி வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் அந்த மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மாணவியை கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தது தெரிய வந்தது.

    சம்பவத்தன்று வந்த சிறுவன், மாணவியை கடத்தி சென்றுள்ளார். பின்னர் திருச்செந்தூருக்கு சென்று அங்கு கோவிலில் வைத்து மாணவியை வற்புறுத்தி கட்டாய திருமணம் செய்ததும் தெரிய வந்தது.

    அதன் பின்னர் தஞ்சாவூருக்கு அந்த மாணவியை அழைத்து சென்று வாடகைக்கு வீடு எடுத்து 2 பேரும் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று சிறுவனை நெல்லைக்கு அழைத்து வந்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.

    • இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
    • திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும்.

    நெல்லை:

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இல்லத்தரசிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-



     


    சுதா (நெல்லை புதுப்பேட்டை)

    நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை எனது வங்கி கணக்கில் நேற்றே வந்து சேர்ந்துவிட்டது. இதற்கான குறுந்தகவல் எனது போனுக்கு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த தொகை எனது மகன்களின் டியூசன் கட்டணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வாங்கி கொள்வேன். அரசுக்கு மிக்க நன்றி.



     


    கவிதா (செங்கோட்டை)

    எனது கணவர் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். ரூ.1000 உரிமைத்தொகை எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கணவர் தனி ஆளாக வேலைக்கு சென்று சிரமப்பட்டு வருகிறார். கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இந்த தொகை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த தொகை எனக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தி உள்ளது.



     


    சண்முக சுந்தரி (செங்கோட்டை)

    ரூ.1000 உரிமை தொகைக்காக முன்னோட்டமாக எனது வங்கி கணக்கில் 10 பைசா ஏற்றப்பட்ட குறுந்தகவல் வந்தது. இன்று முதல் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் நேற்றே எனக்கு பணம் ஏறிவிட்டது. எனது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிகிறார். 2 கைக்குழந்தைகளை வைத்து சிரமப்பட்டு வருகிறேன். திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    சாந்தா (நெல்லை சந்திப்பு)


     


    அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இன்று முதல் தொடங்கும் என அறிவித்த நிலையில் நேற்றே எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு விட்டது. நான் இன்று காலையிலேயே அந்த தொகையில் ரூ.300-க்கு எனது போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டேன். இப்போது கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்க போகிறேன். மாதத்தில் 10 நாட்களுக்கு எங்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க இது உதவியாக இருக்கும்.



     


    ஜீவா (ஆலங்குளம்)


     


    பெண்களுக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மாதந்தோறும் சிறு சேமிப்பு தொகையாக இது உள்ளது. மாதந்தோறும் 5-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் பணத்தை பெற வங்கிக்கு அலைவதை தவிர்த்து அதற்கு எளிய வழிமுறை ஏதேனும் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

    செல்வி (கீழப்பாவூர்)



     


    எனது கணவர் ஆட்டோ ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த கலைஞர் மகளிர் உதவித்தொகை கிடைத்ததனால் ஒரு மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் வரையில் தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு இந்த தொகை மிகவும் உதவியாக இருக்கும்.

    முனீஸ்வரி (தூத்துக்குடி திரேஸ்புரம்)


     


    எனக்கு கலைஞரின் உரிமை தொகை கிடைக்க பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வீட்டின் சிறு சிறு அவசர தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும் இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

    மேரி பிரான்சிஸ் (தூத்துக்குடி குரூஸ்புரம்)


     


    மகனின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வரும் எனக்கு கலைஞரின் ரூ.1,000 உரிமை தொகை கிடைக்க பெற்றதால் சுய தேவைகளுக்கு பிறரை எதிர்பார்க்காமல் செலவு செய்ய உதவும் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ராதா (தூத்துக்குடி ஆரோக்கியபுரம்)


     


    இட்லி வியாபாரம் செய்யும் எனக்கு ரூ. 1,000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன். இதன் மூலம் எனது பேத்தியின் படிப்புக்கும், தினசரி செலவிற்கும் உதவி கரமாக இருக்கும்.

    • உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா வர்த்தக மையம் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5,01,877 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

    நெல்லை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.

    நெல்லை மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள வர்த்தக மையம் கூட்டரங்கில் இன்று உரிமைத்தொகை திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, திட்ட இயக்குனர் சுரேஷ், சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், பயிற்சி கலெக்டர் கிஷன் குமார், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் 840 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 5,01,877 அட்டைதாரர்கள் உள்ளனர்.இதில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க 4 லட்சத்து 30 ஆயிரத்து 930 விண்ணப்பங்கள் விநி யோகம் செய்யப்பட்டது. அதில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 345 பேர் நிரப்பி ஒப்படைத்தனர்.

    இதில் சுமார் 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் வங்கி கணக்குகளில் பணம் செலு த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதந்தோறும் நெல்லை மாவட்டத்திற்கு மட்டும் 25 கோடி ரூபாய் செலவாகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோர், விதவைகள் உதவித்தொகை என மாதந்தோறும் 40 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இலவச பஸ் பயணம் மூலமாக மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். மகளிர் குழு மூலமாக ஒரு மாதத்தில் 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. இவ்வாறாக நெல்லை மாவட்டத்தில் மகளிருக்கு மட்டும் குடும்ப செலவாக ரூ.120 கோடியை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சபாநாயகர் அப்பாவு

    விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்துள்ள இந்த திட்டமானது மக்கள் மனதில் ஒரு வருடம், 2 வருடம் அல்ல, வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியை தரும் ஒரு திட்டமாகும். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் போல இந்த உரிமை தொகை திட்டத்திற்காக பெண்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு குறுந்தகவல் வந்ததும் அவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

    முதல்-அமைச்சர் இலவச பஸ் பயணம், ஏழை விவசாயிகளுக்கு இலவச பம்பு செட், புதுமைப்பெண் திட்டம் என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மத்திய நிதித்துறை இணை அமைச்சர் இந்தியாவில் வங்கி பயனாளர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையை கணக்கில் வைத்திருக்காத காரணத்தினால் ரூ.23 ஆயிரம் கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது தவிர அதிக அளவு ஏ.டி.எம் பயன்படுத்தியதற்காகவும், குறுந்தகவல் அனுப்பும் வசதிக்காகவும் என சுமார் 35 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி கணக்குகளில் இருந்து அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இனி ஏழை பெண்களின் வங்கி கணக்குகளில் இருந்து இதுபோன்ற அபராத தொகைகள் எடுக்கப்படாது என்ற நிலையை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினால் ஏற்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட 2,000 பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான பண பரிவர்த்தன அட்டை களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    இதில் மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் மாலை ராஜா, பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்ல துரை, வீரபாண்டியன், மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ராஜன், கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா, பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன், கவுன்சிலர் கருப்பசாமி கோட்டையப்பன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக விழா மேடையில் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

    • நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன் உள்பட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நெல்லை மாவட்ட தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம்.பி., மேயர் சரவணன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் மாலை ராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த், மாநில நெசவாளர் அணி அமைப்பாளர் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளரும், கீழநத்தம் பஞ்சாயத்து தலைவருமான அனுராதா ரவி முருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் எஸ்.வி. சுரேஷ், கிரிஜா, பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர் அருள் மணி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீரபாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், கவுன்சிலர்கள் உலகநாதன், கருப்பசாமி கோட்டையப்பன், ரவீந்தர், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், பவுல்ராஜ், இந்திரா மணி, கந்தன், சுந்தர், நித்திய பாலையா, வில்சன் மணித்துரை, மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாயா, 7-வது வார்டு வட்ட பிரதிநிதி சுண்ணாம்பு மணி உள்பட கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பாளை தொகுதி எம்.எல்.ஏ. அப்துல் வகாப் தலைமையில் துணை மேயர் ராஜு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மேயர் சரவணன், மண்டல சேர்மன் மகேஷ்வரி, கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, உலகநாதன், கந்தன், கோகுலவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு மேயர் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
    • களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் காளிதாசன் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முடிந்தவுடன் மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை

    மின்துறை அமைச்சர் உத்தரவின் படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகளான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின் விநியோகம் வழங்கும் மின் பாதையில் உள்ள மின்கம்பங்கள், மின்சாதனங்கள், முறையாக தொடர் ஆய்வு மேற்கொண்டு பழுதான மின் கம்பங்கள், தாழ்வான மின்பாதைகள், பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.

    விவசாய மின் இணைப்பில் சுயநிதி அடிப்படையில் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் அளித்தால் உடனடியாக ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மின்வாரியத்திற்கு எந்த நிலையிலும் வருவாய் இழப்பீடு ஏற்படாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக மின் இணைப்புகளை ஆய்வு செய்து மின்வாரிய விதிமுறை களுக்கு முரணாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பீட்டை தடுக்க வேண்டும்.

    பணிகளை மேற்கொள்ளும் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும். நகர்ப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987- ஐ தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    • சங்கரவடிவு களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார்.
    • சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளத்தை சேர்ந்தவர் சங்கரவடிவு (வயது 75). இவர் ஊச்சிகுளத்தில் இருந்து களக்காடு வந்த பஸ்சில் ஏறி, களக்காடு அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அவர் அணிந்திருந்த 2½ பவுன் எடையுள்ள தங்க செயினை மர்ம நபர்கள் பறித்தனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். இதைக்கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த மீனாட்சி என்ற பொண்ணுத்தாய் (30), தேவி (21), மீனா (25) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து சங்கர வடிவின் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி,

    மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசு ப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்துப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்து சின்னத்துரை, ஜெயபாலன், வட்டச் செயலாளர்கள் பாறையடி மணி, பக்கீர் மைதீன், நத்தம் வெள்ளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
    • 10-ம் திருநாளில் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.

    நெல்லை:

    பாளை மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில் தெரு அய்யா வைகுண்ட சுவாமி தத்துவ தவ தர்மபதி யில் 76-வது திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கியது.

    இவ்விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.

    முதல் நாள் திருவிழா வையொட்டி இன்று அதி காலையில் அய்யாவுக்கு பால் பணிவிடை, திருக்கொடி பட்டம் வீதி வலம் வந்து திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உகப்பெருக்கு பணிவிடை, சூரிய வாகனத்தில் அய்யா பவனி, ஊர் தர்மம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது. 2-ம் நாள் திருநாளில் குமரி மாவட்டம் நாஞ்சில் அசோகன் சின்னத்தம்பி தலைமையிலான அய்யாவழி இசை பட்டிமன்றம் நடை பெறுகிறது. அதனை தொடர்ந்து 8-ம் திருநாளில் வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா பவனி வந்து கலி வேட்டையாடல் உகப் பெருக்கு பணிவிடை ஏக மகா சிறப்பு அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது .

    10-ம் திருநாளில் குமரி மாவட்டம் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.

    அதைதொடர்ந்து 11-ம் திருநாளில் குமரி மாவட்டம் சுண்டப்பற்றி விளை ஜெகநாதனின் அய்யா வழி வில்லிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.இவ் விழாவி ற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • மிதவை கப்பலை மீட்பதற்காக சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
    • மிதவை கப்பல் 620 டன் வரை தான் எடை கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான நான்கு நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது தரை தட்டியது.

    இதையடுத்து மிதவை கப்பலை மீட்பதற்காக சென்னை, மும்பையில் இருந்து வந்த மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் அதனை மீட்க முடியவில்லை.

    தொடர்ந்து பாறையில் தரைதட்டி நிற்கும் மிதவை கப்பலை மீட்பதற்காக, இலங்கையில் இருந்து அதிக இழுவைத்திறன் கொண்ட ஓரியன் என்ற பெயரிலான அதிநவீன இழுவை கப்பல் நேற்று கூடங்குளம் வந்து சேர்ந்தது. எனினும் தரைதட்டிய மிதவை கப்பலை மீட்பதற்கான பணிகளை உடனே தொடங்கவில்லை.

    இன்று மதியத்திற்கு மேல் மீட்பு பணிகள் தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கப்பலை ஓரியன் இழுவை கப்பலை மட்டும் கொண்டு இழுத்து விடலாமா என்று ஒரு குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மதியம் ஓரியன் கப்பலின் தலைமை செயல் அதிகாரி கூடங்குளம் வருகிறார். அவர் வந்த பின்னரே ஆலோசனை நடத்தி மீட்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

    அதே நேரத்தில் தற்போது ஓரியன் கப்பலுடன் வந்துள்ள குழுவினர் கூறுகையில், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் 1000 டன் எடை கொண்ட கப்பலை கூட எங்களது இழுவை கப்பலால் இழுத்து இருக்கிறோம். இந்த மிதவை கப்பல் 620 டன் வரை தான் எடை கொண்டிருக்கிறது. அதுவும் கடலில் தான் இருக்கிறது. எனவே எளிதாக இழுத்து விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

    • விநாயகர் சிலைகளை வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
    • ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி (திங்கட் கிழமை) கொண்டாடப்படு கிறது.

    இதற்காக நெல்லை மாவட்டத்தில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைக்கப்படக் கூடிய இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைப்ப தற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர்.

    கட்டுப்பாடுகள்

    இந்த ஆண்டு சுற்றுச் சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலை களை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப் பாடுகள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகர் பகுதி களில் இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் வைப்ப தற்காக பாளையை அடுத்த கிருபா நகர் பகுதியில் உள்ள கூடத்தில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப் பட்டு வரும் நிலையில் அந்த சிலைகள் அரசின் உத்தரவை மீறி இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகை யில் மூலப்பொருட்களை கொண்டு தயார் செய்யப் படுவதாக தகவல்கள் பரவியது.

    பூட்டியதால் பரபரப்பு

    இதையடுத்து அங்கு வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அங்கு சென்று சோதனை செய்தனர். தகவல் அறிந்து இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் அங்கு திரண்டு ஆர்டர் கொடுத்த சிலைகளை அவசர கதியில் எடுத்துச் சென்றனர். இதனால் மேற்கொண்டு சிலைகள் எடுத்து செல்வதை தடுக்கும் வகையில் போலீசார் தடுப்பு கம்பிகள் வைத்து பூட்டினர்.

    இதற்கிடையே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், விநாயகர் சிலை செய்யும் கிருபா நகர் பகுதியில் உள்ள தயாரிப்பு கூடத்தில் ஆய்விற்காக எடுத்துச் சென்ற மாதிரிகள் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் வகையில் கலவை இருப்பது தெரிய வந்தது. சிலைகளையும் எடுத்துச் சென்றவர்களிட மிருந்து பறிமுதல் செய்து அந்த கூடத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இதற்கு இந்த அமைப்பினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்கிடையே சிலைகள் தயாரிக்கும் சிற்பக்கூடம் முன்பு 3-வது நாளாக இன்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பேச்சுவார்த்தை

    இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் பாளை தாசில்தார் சரவணன் முன்னிலையில் இந்து அமைப்பினருடன் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் சிலைகள் தொடர்பாக சுமூக உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

    ×