என் மலர்
திருநெல்வேலி
- விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
- உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளித்து விதிமீறல்களை சரி செய்து, அபராத தொகையுடன் கூடிய கட்டணம் செலுத்தி கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறாமல் மாநகரப் பகுதியில் ஏராள மான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.
விதிமீறல் கட்டிடங்கள்
இதையடுத்து விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து உதவிப் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கு எடுத்தனர்.
ஆய்வு
இதையடுத்து கடந்த 10 நாட்களாக 481 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 26 வணிக வளாகங்கள் மற்றும் 76 வீடுகள் முறை யான அனுமதி இன்றி விதி முறைகளை மீறி கட்டப் பட்டது தெரியவந்தது.
இது குறித்த ஆய்வு அறிக்கையை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பொறியாளர்கள் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக அனுமதியின்றி விதிமுறை களை மீறி கட்டிய கட்டிடங் களை ஏன் இடித்து அப்புறப் படுத்தக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கமிஷனர் உத்தர விட்டுள்ளார்.
102 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்
இதையடுத்து நகர ஊரமைப்பு சட்டப்பிரிவு 456-ன் படி 102 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதற்கு உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளித்து விதிமீறல்களை சரி செய்து, அபராத தொகையுடன் கூடிய கட்டணம் செலுத்தி கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வாறு அனுமதி பெற விண்ணப்பிக்காத கட்டிடங்களை கண்டறிந்து எடுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக கமிஷனர் தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது.
- தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
- பெரியார் சிலைக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நெல்லை:
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பாளை பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.
தி.மு.க. சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ். வி. சுரேஷ், மண்டல சேர்மன் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் சுதா மூர்த்தி, கிட்டு என்ற ராமகிருஷ்ணன், கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்துச் சின்னத்துரை, ஜெனி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், நிர்வா கிகள் பூக்கடை சப்பானி முத்து, பி.ஆர்.பி. ராஜா, மாரியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஜோதிபுரம் ஊர் நாட்டாண்மை தங்கராஜ், மாவட்ட துணைத்தலைவர் அருள் ராஜ் ஆகியோரது தலைமையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் மூத்த தலைவர் லெனின் பாரதி, மாவட்ட துணைத் தலைவர்கள் வெள்ளை பாண்டியன், மாரியப்பன், மாவட்ட செயலாளர்கள் செய்யது அலி, மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுடலை ராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீ ராம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், மேலப்பாளையம் செய லாளர் குழந்தைவேலு, வக்கீல் பழனி, செல்வம், ஜெயபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் முத்து வளவன் தலைமையிலும், ம.தி.மு.க சார்பில் மனப்படை மணி உள்ளிட்ட நிர்வாகிகளும், தமிழர் உரிமை மீட்பு களம் சார்பில் ஒருங்கி ணைப்பாளர் லெனின் கென்னடி தலைமையிலும், ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையிலும் ஏராளமான நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள மேலச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாத்துரை (வயது 65). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலையில் சவாரிக்காக நெல்லைக்கு வந்து விட்டு, மீண்டும் அவர் மட்டும் ஊருக்கு திரும்பி ச்சென்றார்.
நெல்லை அருகே கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் சென்றபோது, திடீரென 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விஜயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு சுபகுமார் உள்ளிட்டோரும் அங்கு வந்து விசாரித்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. எனினும் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட விஜயகுமார் மீது எந்தவிதமான வழக்குகளும் இல்லை. மேலும் அவரது ஊரில் யாரிடமும் வாக்குவாதம் கூட செய்தது இல்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர். அந்த கிராமத்தில் இரு தரப்பினர் இடையே அவ்வப்போது சிறு சிறு தகராறுகள் ஏற்படும். அந்த கோபத்தில் யாரேனும் இந்த கொலையை செய்தார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக விஜயகுமார் கரிசல்பட்டி கிராமம் வழியாக ஒரு தோட்டத்திற்கு வேலைக்கு தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றி சென்று இறக்கிவிட்டு மீண்டும் அதே வழியில் வீடு திரும்பி உள்ளார். இதனை நோட்டமிட்டு தான் மர்ம நபர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகிறார்கள். காட்டுப்பகுதி என்பதால் சி.சி.டி.வி. கேமராக்களும் அப்பகுதியில் இல்லை. இதனால் கொலையாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், இன்னோஸ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவ சங்கர், செல்வகுமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே விஜயகுமாரை கொலை செய்த கும்பலை கைது செய்யும்வரை அவரது உடலை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஹெலிகாப்டர் மீண்டும் 2 முறை அதே பகுதியில் தாழ்வாக பறந்து சென்று வந்தது.
- போலீசார் தாழ்வாக பறந்தவாறு சுற்றி வந்த ஹெலிகாப்டர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இன்று ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது.
குடியிருப்பு மற்றும் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கப்பற்படை தளத்திற்கு சொந்தமான வளாக பகுதி உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் அந்த ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு நிலவியது.
இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரை தங்களது செல்போன்களில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர். அந்த ஹெலிகாப்டரின் இறக்கை அதிவேகமாக சுழன்றது.
அந்த ஹெலிகாப்டர் மீண்டும் 2 முறை அதே பகுதியில் தாழ்வாக பறந்து சென்று வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் தாழ்வாக பறந்தவாறு சுற்றி வந்த ஹெலிகாப்டர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ஹெலிகாப்டர் ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்ததா? அவ்வாறு வந்ததெனில் தாழ்வாக பறந்ததன் காரணம் என்ன? என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
இந்த ஹெலிகாப்டர் இன்று காலை கூடங்குளம், வள்ளியூர் பகுதிகளிலும் தாழ்வாக பறந்து வந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக கூடங்குளத்தில் இழுவை கப்பல் தரை தட்டி நிற்கும் நிலையில் அதில் இருக்கும் நீராவி ஜெனரேட்டர்களை வான் வழியாக மீட்பதற்காக இந்த ஹெலிகாப்டர் வர வழைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
- அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் பாளை ரமேஷ் தலைமையில் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- கடந்த 2 ஆண்டில் தி.மு.க. 2.73 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ் அணி நிர்வாகிகள் அதிக அளவில் அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் பாளை ரமேஷ் தலைமையில் 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடந்த இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் அ.ம.மு.க.வை சேர்ந்த மாவட்ட இணை செயலாளர் அரைஸ், இளைஞரணி சண்முகராஜ், பிஆர்பி. ராஜா, இளை ஞரணி செயலாளர் மகேஷ், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் என பலர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பர மசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேர வை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா பேசியதாவது:-
தற்போது தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. ஜெயலலிதாவுக்கு பின்னர் 4 ஆண்டு காலம் நல்லாட்சி நடத்திய திறமை யான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகம், மினி கிளினிக், தாலிக்கு தங்கம், மகளிருக்கு மானிய விலையில் பைக் உள்ளிட்டவை தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டில் தி.மு.க. 2.73 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது. சரியான பாதையில் அ.தி.மு.க. தான் பயணிக்கிறது என்பதை அறிந்து அ.ம.மு.க. இளை ஞர்கள் தாய் கழகமான அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரெயில்வே பீடர் சாலைல் உள்ள பொது குடிநீர் குழாயில் துர்நாற்றத்துடன் குடிநீர் வருகிறது.
- துர்நாற்றத்துடன் வரும் குடிநீரை குடித்தால் நோய் பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தியிடம், நெல்லை மாவட்ட பொதுஜன பொது நல சங்க தலைவர் அயூப் அளித்துள்ள கோ ரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது:-
நெல்லை டவுன் வாகையடி முக்கு அருகில் ரெயில்வே பீடர் சாலை உள்ளது. இங்குள்ள பொது குடிநீர் குழாயில் நீண்ட நாட்களாகவே துர்நாற்றத்துடன் குடிநீர் வருகிறது.
இந்த தண்ணீரை அந்த தெருவில் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் குடிநீருக்காக பிடித்து செல்கின்றனர். மேலும் இந்த பாதையில் நடந்து செல்வோர்களில் பலரும் இந்த குடிநீரை தான் குடித்துவிட்டு செல்கின்றனர். துர்நாற்றத்துடன் வரும் இந்த குடிநீரை குடித்தால் நோய் தொற்று பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வரும் இந்த சூழ்நிலையில் துர்நாற்றத் துடன் வரும் இந்த குடிநீரை உடனடியாக ஆய்வு செய்து பொதுமக்களுக்கு சுத்த மான குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த குடிநீர் நல்லியை அடை த்து வைத்தாலும் குடிநீர் அதிகளவில் தேவை யில்லாது வெளியே செல்கிறது. அதையும் சரி செய்திட வேண்டும்
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் சரஸ்வதி கலந்துகொண்டார்.
- கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
வள்ளியூர்:
சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய பொறியாளர் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் சரஸ்வதி கலந்துகொண்டார். கல்லூரி தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தாளாளர் ஹெலன் லாரன்ஸ் பொறியாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் டாக்டர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக பொறியாளர் தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட டெக்னிக்கல் பேப்பர் பிரசடேசன் போட்டியில் துறைவாரியாக வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் துறை மாணவர் அருண்குமார் வரவேற்று பேசினார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் மாணவர் தருண் ஆண்டனி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
- கிராம உதயம் தலைமை அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல், கொசுப்புழு தடுப்பு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
- கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை கோபாலசமுத்தி ரத்தில் உள்ள கிராம உதயம் தலைமை அலு வலகம் சார்பாக அலு வலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர். சுந்தரேசன் தலைமை தாங்கி விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி வரவேற்று பேசினார்.
கிராம உதயம் தனி அலுவலர் ரேவதிகுமாரி, பகுதி பொறுப்பாளர்கள் முருகன், ஆரோக்கியமிக்கேல், ஜீவா, மைய தலைவர்கள் சென்டு, பேச்சியம்மாள் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். முடிவில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரியங்கா நன்றி கூறினார்.
இந்த டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு பயிற்சி கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், மைய தலைவர்கள், குழு தலைவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் கொசுப்புழு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்குதல் வீட்டில் நீர் தேங்காமல் தடுத்தல் போன்ற விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இசக்கிமுத்து நேற்று ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்த பரமசிவன், இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகர் மேல காலனியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது55). தொழிலாளி. நேற்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த வடக்கு மீனவன் குளத்தை சேர்ந்த பரமசிவன் (47), இசக்கிமுத்துவிடம் செலவுக்கு ரூ. 200 தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவன் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ. 150-ஐ பறித்து சென்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பரமசிவனை தேடி வருகிறார்.
- அண்ணா சிலைக்கு மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு ராதாபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் சமூகரெங்க புரத்தில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மற்றும் திட்டக்குழு தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அண்ணா உருவபடத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ஜெபஸ்டின் ஆனந்த், மாவட்ட அறங்கா வல் குழு உறுப்பினர் முரளி, மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஒன்றிய கவுன்சிலர் இசக்கி பாபு, படையப்பா முருகன், பரிமளம், ஞானசர்மிளா கெனிஸ்டன், ஊராட்சி தலை வர்கள் அந்தோனி அருள், முருகேசன், மணி கண்டன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தன், வேலப்பன், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுப்பையா, நவ்வலடி சரவணகுமார், ராதாபுரம் கூட்டுறவு சங்கத்தலைவர் அரவிந்தன், சிதம்பரபுரம் முருகன், மாவட்ட சிறுபா ன்மை அணி மூர்த்தி, கருனை ராஜ், தக்காளி குமார், கல்கண்டு, சார்லஸ் பெஸ்கி, திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமை ப்பாளர் நெல்சன், புளியடி குமார், எழில் ஜோசப், காமில், சாகுல் ஹமீது, முத்து, முத்தையா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மன்னன்பெருமாள் என்பவர் முத்துசெல்வியை ஆபாசமாக பேசினார்.
- ஆபாசமாக பேசிய மன்னன் பெருமாளை முத்துசெல்வி பெற்றோர் கண்டித்தனர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்த சுப்பையா மகள் முத்துசெல்வி (வயது 35). கடந்த 5 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மன்னன்பெருமாள் (43) என்பவர் முத்துசெல்வியை ஆபாசமாக பேசினார்.
இதனை அவர் தனது பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து அவரது பெற்றோர்கள் மன்னன் பெருமாளை கண்டித்தனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முத்துசெல்வியை, மன்னன் பெருமாள் மீண்டும் ஆபாச மாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப் பட்டது. நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜூ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மன்னன் பெருமாளை கைது செய்தனர்.
- இசக்கிமுத்து முக்கூடல் அருகே உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்தார்.
- மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் இசக்கிமுத்து உயிரிழந்தார்.
முக்கூடல்:
அம்பை அருகே உள்ள வி.கே.புரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் இசக்கி முத்து (வயது 36). இவரது மனைவி வசந்தி(34). இவர்களு க்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை.
தற்போது முக்கூடல் பாண்டியாபுரம் தெருவில் தம்பதி வசித்து வந்தனர். இசக்கிமுத்து முக்கூடல் அருகே உள்ள தனியார் ஆலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 11-ந்தேதி இரவில் அவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
முக்கூடல்-ஆலங்குளம் பிரதான சாலையில் அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்துள்ளது. இதில் நிலை தடுமாறி இசக்கிமுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் இறந்த துக்கத்தில் அவரது மனைவி வசந்தி மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார். கடந்த 4 நாட்களாக அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த உறவினர்கள் பார்த்தபோது வசந்தி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
உடனடியாக அவர்கள் முக்கூடல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






