என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர்.
    • விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர். இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.

    இந்நிலையில் இந்த உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கினர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் 10 பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம், நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலகம், சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அலுவலகம் மற்றும் நெல்லை, பாளை, மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாசில்தார் அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த அறைகளுக்கு நேரில் சென்று தேவையான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வருகிற 30-ந் தேதி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தினமும் காலை முதல் மாலை வரை மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு-4 குழுவை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் இன்று நெல்லை வந்துள்ளனர்.
    • இந்த குழு 14 நாட்கள் தங்கி இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    நெல்லை:

    அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு-4 குழுவை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் இன்று நெல்லை வந்துள்ளனர்.

    கமாண்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையில் சுமார் 16 பேர் அடங்கிய அந்த குழு இன்று காலை நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகைக்கு வந்தடைந்தது. இந்த குழு 14 நாட்கள் தங்கி இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    அணைக்கட்டுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அடங்கிய பகுதிகளில் கூடுதல் ஆய்வு மேற்கொள்கின்றனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை இந்த குழுவினர் மேற்கொள்ள உள்ளனர்.

    அதே நேரத்தில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் குழுவினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர்.

    மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபத்தான காலகட்டங்களில் முதலுதவி சிகிச்சை முறைகள் அளிப்பது குறித்த பயிற்சிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த குழுவினர் நடத்த உள்ளனர்.

    • மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான் பாறை உள்ளிட்ட இடங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர் புற மின் விநியோக செயற்பொ றியாளர் காளிதாசன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேலப்பாளையம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அதன்படி மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணி கர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர்,

    வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்க ருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டி த்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி ரோடு,

    குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணாவீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வகாதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள்புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ காலனி), அன்புநகர், மகிழ்ச்சி நகர், திருமால் நகர், அரசு பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி,டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமி திப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாமரைச்செல்வி, திருநகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மழை இல்லாததால் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சருகாக காய்ந்து விட்டன.
    • நெல்லை மாவட்டத்தில் 25 வட்டாரங்கள் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. அதனால் பயிர்கள் அனைத்தும் நீரின்றி கருகி விட்டன.

    விவசாயிகள் கோரிக்கை

    இந்நிலையில், நெல்லை மாவட்டம் வன்னிக்கோனேந்தல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட தேவர்குளம், மேலே இலந்தகுளம், மூவிருந்தாளி உள்ளிட்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக்கோரி ஏற்கெனவே மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    மழை இல்லாததால் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் சருகாக காய்ந்து விட்டன. அதனால் அதற்கான காப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

    கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    அதற்கு இதுவரை பதில் இல்லை என கூறி அதனை கண்டித்தும், நெல்லை மாவட்டத்தில் 25 வட்டாரங்கள், அரசால் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வன்னிகோனேந்தல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 9 ஊராட்சிகளையும் வறட்சி பகுதிகளாக அறிவிக்கப்பட வில்லை. எனவே வன்னிக்கோனேந்தல் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட 9 கிராமங்களையும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து போர்க்கால அடிப் படையில் நிவாரணமும் பயிர் காப்பீட்டும் முறையாக வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் இன்று வன்னிக்கோனேந்தலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அதில் 500-க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    • பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன.
    • மாணவிகளின் பெற்றோருக்கு போன் செய்து பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவிகள் செல்லவில்லை.

    நெல்லை:

    பாளையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகள் உள்ளன.

    இந்த பள்ளியில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளுக்கான விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விடுதி வார்டன், அங்கு தங்கியிருக்கும் மாணவிகளின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்று வழக்கம்போல் எண்ணி பார்த்தனர். அப்போது அதில் 2 மாணவிகளை காணவில்லை. அவர்கள் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருவதும், சங்கரன்கோவில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோருக்கு போன் செய்து பள்ளி நிர்வாகம் விசாரித்த நிலையில், அங்கும் மாணவிகள் செல்லவில்லை. இதையடுத்து பாளை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான 2 மாணவிகளையும் தேடி வருகின்றனர். அவர்களை தேடி கண்டுபிடித்த பின்னரே எதற்காக விடுதியை விட்டு வெளியேறினார்கள் என்ற விபரம் தெரியவரும்.

    • ஆட்டோவை வழிமறித்த மர்ம கும்பல் விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது.
    • கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    வெட்டிக்கொலை

    இவர் நேற்று முன்தினம் இரவு கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஜனவரி மாதம் மேலச்செவல் கிருஷ்ணன் கோவிலில் மது அருந்தி யவர்களை தட்டிக்கேட்டது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவந்து, ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். அதில் ஒருவரின் உறவினர் தான் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள விஜயகுமார் என்பதால் பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    7 பேரிடம் விசாரணை

    இதுதொடர்பாக அதே ஊரை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே குற்றவாளி களை கைது செய்யும் வரை விஜயகுமாரின் உடலை வாங்க வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து விட்டனர். அவர்களிடம் போலீசார், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயகுமார் மகனுக்கு அரசு வேலை, ரூ.1 கோடி நிவாரணம், கொலை யாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை அவரது உறவினர்கள் விதித்தனர்.

    அதனை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி அரசுக்கு பரிந்துரை செய்வதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். எனினும் இன்றும் 2-வது நாளாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

    • மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • பூத் கமிட்டி எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    வள்ளியூர்:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட விவசாய அணி லாசர், மேற்கு ஒன்றிய செயலாளர் அமலராஜா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைசெயலாளர் உவரி கிருபாநிதி ராஜன், வள்ளியூர் சுந்தர், மாவட்ட இணைச் செயலாளர் ஞான புனிதா, இந்திரன், பணகுடி பேரூர் துணைச் செயலாளர் ஜெகன், திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி, திசையன்விளை பேரூர் செயலாளர் ஜெயக்குமார், வள்ளியூர் பேரூர் செயலாளர் பொன்னரசு மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கு பெற்று பூத்கமிட்டி உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பூத் கமிட்டி எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பால் துரை செய்திருந்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய, நகர, கிளை செயலாளர்கள், தொண்டர்கள், பூத் கமிட்டியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது.
    • அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதில் 5, 6-வது அணு உலைகளுக்கான 4 நீராவி ஜெனரேட்டர்கள் ரஷியாவில் இருந்து கடந்த மாதம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கிருந்து 2 ஜெனரேட்டர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு கடல் வழியாக ஏற்கனவே கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து மற்ற 2 நீராவி ஜெனரேட்டர்களும் கடந்த 7-ந்தேதி மிதவை கப்பலில் ஏற்றி, இழுவை கப்பல் மூலமாக கூடங்குளத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது தரை தட்டியது.

    இதில் மிதவை கப்பல் கடலில் சிக்கிக் கொண்டது. அதனை மீட்க கொழும்புவில் இருந்து மற்றொரு கப்பல் வரவழைக்கப்பட்ட நிலையில், நீராவி கொள்கலன்கள் எடை அதிகமாக இருப்பதால், மிதவை கப்பலை இழுக்க முடியாது என கப்பல் அதிகாரிகள் கை விரித்துவிட்டனர். இதனால் வேறு வழிகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மிதவை கப்பலில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளது. இதனால் அந்த கப்பல் மெல்ல மெல்ல கடலில் மூழ்க தொடங்கி உள்ளதால், நீராவி கொள்கலன்களும் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணு உலை வளாகத்தில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் மிதவை கப்பல் தரை தட்டி நிற்கிறது. இதனால் சாலை அமைத்து ராட்சத கிரேன் மூலமாக கொள்கலனை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    இதனால் ரூ.2 கோடி செலவில் அங்கு சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. கொள்கலன் கடலில் சரிந்து விழுவதற்குள் அதனை மீட்க துரிதமான நடவடிக்கைகளை அணு உலை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    • வடமாநிலத்தவர்கள் 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை தயார் செய்து வைத்திருந்தனர்.
    • சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது பாளை சீவலப்பேரி ரோட்டில் உள்ள கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைகளை இந்து அமைப்பினர் வாங்கி சென்று பிரதிஷ்டை செய்வார்கள். பின்னர் அதனை நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

    இந்த ஆண்டும் வழக்கம்போல் அங்கு 380-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வடமாநிலத்தவர்கள் தயார் செய்து வைத்திருந்தனர்.

    இந்து அமைப்பினரும் அந்த சிலைகளை வாங்குவ தற்காக முன்பணம் செலுத்தி வைத்திருந்தனர். அதில் ரசாயன கலவை இருந்ததால் சிலைகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டு குடோன் சீல் வைக்கப்பட்டது.

    அனுமதி

    அந்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி, பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தயாரான விநாயகர் சிலைகளை வழி பாட்டுக்கு எடுத்து செல்ல மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டது. உடனடியாக நேற்று இரவில் விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்காக இந்து முன்னணியினர் எடுத்து சென்றனர்.

    தொடர்ந்து நாளை மாநகர பகுதியில் 78 இடங்கள் உள்பட சுமார் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த சிலைகளை வருகிற 24-ந்தேதி வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான போதிய வெளிச்சம் உள்ள இடத்தில் வைத்து பூஜை செய்ய மாநகர போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

    அறிவுறுத்தல்

    வருகிற 24-ந்தேதி இந்த சிலைகள் அனைத்தையும் ஊர்வலமாக எடுத்துச் செல்லலாம். ஆனால் அதனை நீர்நிலைகளில் கரைக்கக்கூடாது என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்து அமைப்பினர் சிலைகளை எடுத்து சென்றனர்.

    மேலும் நெல்லை மாவட்டத்தில் மாசு விளைவிக்காத விநாயகர் சிலைகளை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களை இன்று மாலை போலீசார் அறிவிக்கின்ற னர். அந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் அந்த இடங்களில் தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்படுள்ளது.

    • பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார்.
    • மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பள்ளியின் இயக்குனர் சவுமியா ஜெகதீஷ் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் பாத்திமா எலிசபெத் பங்கேற்று பூஜையை வழிநடத்தினார்.

    மாணவர்கள் இணைந்து களிமண்ணாலான விநாயகர் சிலையை செய்தனர். விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, பொரி, பழங்கள் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர். விநாயகர் சிலையின் முன்பு ஆசிரியர்கள் மலர்களால் கோலமிட்டனர். அருகம்புல், எருக்கலையால் தொடுத்த மாலைகளை விநாயகருக்கு அணிவித்தனர். விநாய கருக்கு பூஜை செய்து வழிபட்ட பின்னர் அனை வருக்கும் பொரி, கொழுக்கட்டை வழங்கினர். விழா வில் ஆசிரியர்கள், அலு வலர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது.
    • புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது.

    மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட் பகுதியில் 14 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்தது. மாஞ்சோலையில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    மாநகர பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 4 மில்லி மீட்டரும், களக்காட்டில் 3.20 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்தில் மலை பகுதியில் தொடரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது.

    தொடர் விடுமுறையை யொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் அருவிகளில் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை அடவி நயினார் அணையில் 2 மில்லிமீட்டரும், குண்டாறு அணையில் 1.2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    கருப்பா நதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.

    • தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது
    • வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு அந்த தம்பதி பஸ்சை சிறை பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் காவல்பிறை தெருவை சேர்ந்தவர் அருண்மணி. இவர் இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாளையில் இருந்து டவுனுக்கு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது வண்ணார் பேட்டை தெற்கு புறவழிச் சாலையில் பாளையங் கால்வாய் அருகே வந்த போது, புதிய பஸ் நிலையத்தில் இருந்து கடையம் நோக்கி வந்த தனியார் பஸ் அதிவேகமாக வந்தது.

    அப்போது தம்பதியினர் வந்த மொபட் மீது அந்த தனியார் பஸ் மோதுவது போல் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து இது போல் 2 முறை மோது வது போல் பஸ் இயக்கப் பட்டதால், அச்சமடைந்த அந்த தம்பதி வண்ணார் பேட்டை எம்.ஜி.ஆர். சிலை அருகே மொபட்டை குறுக்கே விட்டு பஸ்சை சிறை பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் பஸ்சை அதிவேகமாக ஓட்டிய டிரைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார் அதிவேகமாக வந்த தனியார் பஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிவேகமாக ஓட்டியது, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதற்காக அந்த தனியார் பஸ்சுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நெல்லையில் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதி களையும் ஒழுங்காக பின்பற்று வதில்லை. அதிக ஒலி எழுப்புவதோடு, அதிவேகத்திலும் தொடர்ந்து தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர்ந்து சாலையில் செல்லும் மக்களை அச்சுறுத்தும் வகையில் தனியார் பஸ்கள் இயக்கப் படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் போக்குவரத்து விதிகள் அனைவருக்கும் சமம் என்ற விதியை மீறி நெல்லையில் அதிவேகமாக இயக்கப்படும் தனியார் பஸ்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    ×