search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிப்பு?-பொதுமக்கள் சந்தேகத்தை தீர்க்க நெல்லையில் 10 இடங்களில் கட்டுப்பாட்டு அறை
    X

    கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை படத்தில் காணலாம்.

    மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிப்பு?-பொதுமக்கள் சந்தேகத்தை தீர்க்க நெல்லையில் 10 இடங்களில் கட்டுப்பாட்டு அறை

    • நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர்.
    • விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

    நெல்லை:

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதில் நெல்லை மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் பேர் உரிமை தொகையை பெற்றனர். இந்த திட்டத்தில் விண்ணப்பித்து உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கு அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் குறுந்தகவல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.

    இந்நிலையில் இந்த உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பெண்கள் மீண்டும் இன்று முதல் விண்ணப்பிக்க தொடங்கினர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்டத்தில் 10 பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    அதன்படி மாவட்ட கலெக்டர் அலுவலகம், நெல்லை ஆர்.டி.ஓ. அலுவலகம், சேரன்மகாதேவி சப்- கலெக்டர் அலுவலகம் மற்றும் நெல்லை, பாளை, மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் மற்றும் திசையன்விளை தாசில்தார் அலுவலகங்களில் இந்த கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த அறைகளுக்கு நேரில் சென்று தேவையான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வருகிற 30-ந் தேதி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தினமும் காலை முதல் மாலை வரை மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் தொடர்பான சந்தேகங்களை பொதுமக்கள் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×