search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதான மின்கம்பங்கள், தாழ்வான மின்பாதைகளை உடனடியாக மாற்ற வேண்டும்-மின் ஊழியர்களுக்கு அதிகாரி உத்தரவு
    X

    பழுதான மின்கம்பங்கள், தாழ்வான மின்பாதைகளை உடனடியாக மாற்ற வேண்டும்-மின் ஊழியர்களுக்கு அதிகாரி உத்தரவு

    • வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
    • களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் காளிதாசன் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முடிந்தவுடன் மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசியதாவது:-

    வடகிழக்கு பருவமழை

    மின்துறை அமைச்சர் உத்தரவின் படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகளான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின் விநியோகம் வழங்கும் மின் பாதையில் உள்ள மின்கம்பங்கள், மின்சாதனங்கள், முறையாக தொடர் ஆய்வு மேற்கொண்டு பழுதான மின் கம்பங்கள், தாழ்வான மின்பாதைகள், பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.

    விவசாய மின் இணைப்பில் சுயநிதி அடிப்படையில் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் அளித்தால் உடனடியாக ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மின்வாரியத்திற்கு எந்த நிலையிலும் வருவாய் இழப்பீடு ஏற்படாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக மின் இணைப்புகளை ஆய்வு செய்து மின்வாரிய விதிமுறை களுக்கு முரணாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பீட்டை தடுக்க வேண்டும்.

    பணிகளை மேற்கொள்ளும் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும். நகர்ப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987- ஐ தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×