என் மலர்
திருச்சிராப்பள்ளி
- வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- இதனால் திருச்சி குட்ஷெட் சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
திருச்சி
வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து
திருச்சி மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கதலைவர் சந்திரசேகர், தமிழ்நாடு போக்குவரத்து லேபர் யூனியன் மாநில பொருளாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் திருச்சி குட்செட் யார்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தன்ராஜ், அருணகிரி, செல்வம், குழந்தைவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி குட்ஷெட் சாலையில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக காய்கறி சிமெண்ட் இரும்பு போன்ற பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.
- டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்குமா ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
- ஆனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் ஏழை விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் சாரதாமதம் செய்வதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருச்சி
டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்குமா ?என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில்
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா (பிஎம்எப்பிஒய்) திட்டத்தைத் தவறாமல் தேர்வு செய்யுமாறு வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த பயிர்க் காப்பீட்டு பிரீமியத்தில் தங்களின் பங்காக சாகுபடி செய்யும் இடத்தைப் பொறுத்து ஏக்கருக்கு ரூ.1600 செலுத்த வேண்டும்.
மீதமுள்ள காப்பீட்டு பிரீமியம் தொகைமத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செலுத்தும். தண்ணீர் கிடைக்க பெறாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்தால் ஒரு ஏக்கருக்கு ரூ. 9 ஆயிர த்து 25 காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்.
மேலும் காப்பீடு செய்யப்பட்ட பயிர் விதைப்பு நிலையிலேயே தண்ணீர் இல்லாமல் வாடிவிட்டாலோ, சாகுபடியாளரால் முடிக்க முடியாமல் போனால் ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 36,100 ரூபாய் வரை இழப்பீடாக விவசாயிகளுக்கு கிடைக்கும். இதற்கிடையே சம்பா பயிர் காப்பீட்டுக்கு வருகிற 15 ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பயிர் காப்பீடு செய்வதற்கு முக்கிய ஆவணமான அடங்கல் சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஆகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது பயிர் காப்பீடு ஒன்றே டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ள காரணத்தினால் சம்பா பயிர் காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்ய அனைத்து விவசாயிகளும் முடிவு செய்து அடங்கல் ஆவணத்தை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வருகின்றனர்.
ஆனால் டெல்டா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் ஏழை விவசாயிகளுக்கு அடங்கல் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் சாரதாமதம் செய்வதாக கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறும்போது, டெல்டாவில் சாதாரண நிலப்பரப்பில் இதுவரை 6 லட்சம் ஏக்கரில் சம்பா பயிருக்கு காப்பீடு கோரப்பட்டுள்ளது. காலக்கெடு குறைவாக இருக்கின்ற காரணத்தினால் விவசாயிகளுக்கு உடனடியாக அடங்கல் சான்று கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பேரூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் பயனடைந்தன.
திருச்சி
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பேரூர் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் சிறப்பு கால்நடை மருத்துவ மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் மண்டல இணை இயக்குனர் முரு எஸ்தர் ஷீலா மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட உதவி இயக்குனர் கணபதி பிரசாத் மேற்பார்வையில் கால்நடை மருத்துவர்கள், சுரேஷ் பாபு, அன்பரசி மற்றும் சௌந்தர்யா கால்நடை ஆய்வாளர்கள் சம்சாத், தவமணி, கவியரசு, கிருஷ்ணவேணி, சுந்தர்ராஜன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி, மற்றும் குடற்புழு நீக்க சிகிச்சை அளித்தனர்.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் பயனடைந்தன. சிறந்த கன்று மற்றும் பராமரிப்பு மேலாண்மைக்கான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
- இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.
- பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்
டால்மியாபுரம்
திருச்சி மாவட்டம் கல்லக்குடி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மகன் அகஸ்டின்பிரபாகரன் (வயது 38). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அகஸ்டின்பிரபாகரன் வடுகர்பேட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ராஜா டாக்கீஸ் பேருந்து நிலைய பாலம் அருகே சென்ற போது, அவர் பின்னால் வந்த காரின் டயர் வெடித்து, இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அகஸ்டின்பிரபாகரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த மக்களின் வருவாய், சேமிப்பு தற்போது சமநிலைக்கு வந்துள்ளதால் இந்த தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.
திருச்சி
தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருச்சி மாநகரில் கடந்த ஒரு வார காலமாக ஜவுளி மற்றும் நகைக் கடைகள் நிரம்பியுள்ள என்.எஸ். பி. ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கடைவீதிகளில் சங்கமிக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த மக்களின் வருவாய், சேமிப்பு தற்போது சமநிலைக்கு வந்துள்ளதால் இந்த தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.
2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊடுருவியது. அதன் தாக்கம் 2021 வரை நீடித்தது. உலகமெல்லாம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கினர்.
பின்னர் 2022ல் வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டனர். ஆனால் முந்தைய வேலை இழப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கு 3 ஆண்டுகள் பிடித்துள்ளது.
திருச்சி மாநகரின் பிரபல ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் கூறும் போது,
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் இந்த ஆண்டுதான் முழுமையாக மீண்டிருக்கிறார்கள்.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது எளிய நடுத்தர மக்கள் ஒன்று இரண்டு ஆடை மட்டுமே வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது மூன்று நான்கு சேலைகள் வாங்கி செல்கிறார்கள்.
நடப்பாண்டில் ஏப்ரல் மே மாதத்தில் இருந்தே விற்பனை நன்றாக இருக்கிறது.
கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தீபாவளி பர்சேஸ் முடித்து விட்டார்கள் என்றார்.
அதேபோன்று நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை மாதத் தொடக்கத்தில் வந்திருப்பதால் சம்பளமும், போனசும் ஒரே நேரத்தில் கைக்கு வந்துள்ளதால் மாதச் சம்பளம் பெற்று வரும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் உற்சாகமடைந் துள்ளனர்.
விற்பனை களை கட்டி உள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை.
- முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கடந் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்திய குடியுரிமை பெற்ற காரணத்தினால் அவரவர்கள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்கும் வரையில் திருச்சி மத்திய ஜெயில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.
ஆனால் இங்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையிலும் 4 பேரும் விடுவிக்கப்படவில்லை. அவரவர் விரும்பும் நாடுகளுக்கும் அனுப்பப்படவில்லை. தற்போது சிறப்பு முகாமில் இருக்கும் முருகன் தனது மகளுடன் லண்டனில் இருக்கவும், சாந்தன் தனது தாயுடன் இலங்கை செல்லவும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் நெதர்லாந்து செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் சிறையில் நடத்தப்படுவது போன்று நடத்தப்படுவதாகவும், தங்களை விடுவிக்க கோரியும் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:-
4 பேரின் விபரங்கள், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள், அவர்கள் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் உள்பட அனைத்து தகவல்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மேலும் நாடு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடர்பாக வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக (எப்.ஆர்.ஆர். ஓ.) தலைமை இடத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் அங்கிருந்து இன்னும் எந்த உத்தரவுகளும் வரவில்லை. மத்திய அரசு மற்றும் எப்.ஆர்.ஓ. அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் உத்தரவுகளின் அடிப்படையில் தான் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் வெளியே அனுப்ப இயலும்.
அந்த 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை. முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போன்று அவர்களும் நடத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 273 அடி உயரமுள்ள மலைக்கோவிலுக்கு செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன.
- ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திருச்சி மக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
திருச்சி:
தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டமான திருச்சி பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. பல நூற்றாண்டுகளை கடந்து பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோவில் என்று கூறுகிறார்கள். இந்த பாறைக்கு மலைக்கோட்டை என்ற பெயரும் உண்டு.
மேலும் மலைக்கு செல்லும்போது தாயுமானவர் சன்னதியை கடந்துதான் பிள்ளையார் சன்னதிக்கு செல்ல வேண்டும். கிட்டத்தட்ட பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 400-க்கும் மேற்பட்ட படிகளை ஏறிச்செல்ல வேண்டும். மேலும் மிகவும் பழமையான கோவில் என்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.
273 அடி உயரமுள்ள மலைக்கோவிலுக்கு செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப்படிகள் செங்குத்தாக இருப்பதால், மலை உச்சிக்கு மிகவும் சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். இதனால் நடக்க முடியாதவர்கள் படிக்கட்டில் ஏற முடியாமல் மலையடிவாரத்தோடு திரும்பிச்சென்று விடுகின்றனர்.

இதனால் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திருச்சி மக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ரூ.10 லட்சத்தை இந்த திட்டத்துக்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை.
பிறகு வந்த ஆட்சியாளர்கள், ரோப் காருக்கு பதிலாக இழுவை ரெயில் அமைக்கலாம் என்று யோசித்தனர். ஆகையால் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் தேர்தல் நேரத்தில் மலைக்கோட்டைக்கு ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க.வினர் மீண்டும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் அந்த திட்டம் நிறைவேறவில்லை.
தற்போது ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்தது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மலைக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவினர் ஆய்வு செய்து, திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைக்க போதுமான இடமில்லாததால், சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. அதற்கு மாற்றாக, லிப்ட் அமைக்கலாமா? என்பது குறித்து மாற்றுத்திட்டத்தை பரிசீலித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார். இதனால் 46 ஆண்டுகால திருச்சி மக்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ? என்று தவித்து வந்தனர்.
இந்தநிலையில் நாடு முழுவதும் மலைப்பிரதேசங்கள், மலைக்கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்தை எளிதாக்குவதற்கு, ரோப் கார் வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் 22 இடங்களில், 'ரோப் கார்' வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரோப்கார் வசதி செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கி உள்ளது. சாத்தியமுள்ள இடங்களின் பட்டியல் 2 மாதங்களில் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து திட்ட மதிப்பீட்டு தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
விரைவில் நவீன தொழில்நுட்ப வசதியுடன், உலகத்தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், விரைவில் திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ரோப் கார் திட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையிலும் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
- சென்னையில் கொஞ்சம் மழை பெய்தாலே மக்கள் படகு வாங்கி வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
- திருச்சியில் இருக்கும் 2 அமைச்சர்களுக்கும் திருச்சி வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை.
திருச்சி:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை நடத்தி வருகிறார். 102 வது சட்டமன்ற தொகுதியாக திருச்சி மேற்கு மற்றும் 103-வது தொகுதியாக திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் அவர் பாதயாத்திரை நடத்தினார். இந்த பாத யாத்திரை திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூர் நாச்சியார் கோவில் அருகில் தொடங்கி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் வளைவு அருகே நிறைவு பெற்றது. அப்போது மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் வழி நெடுகிலும் மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் காந்தி மார்க்கெட் வளைவு அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அண்ணாமலை பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
இந்தப் பகுதியை ஆட்சி செய்த பெரும்பிடுகு முத்தரையர் நீர் மேலாண்மை திட்டத்தின் முன்னோடி. திருச்சி மாநகர மக்களுக்கு தனது சொத்துக்களை கொடுத்தவர் பி.ஆர்.தேவர். வ.வே.சு.ஐயர் பிறந்த மண் திருச்சி. ஆனால் இத்தகைய பெருமைமிக்க தலைவர்களை திமுக இருட்டடிப்பு செய்துள்ளது. பாரதிய ஜனதா ஆட்சிக்கு நேர் எதிராக தி.மு.க. ஆட்சி உள்ளது. ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து ஒவ்வொரு ஊழலாக செய்து இங்குள்ள ஆட்சியாளர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டு வருகிறார்கள்.
இதற்கு முன்பு தமிழகத்தை காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்ற சாமானிய மனிதர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் மூன்று லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்று சொன்னது. ஆனால் அதைப்பற்றி அவர்களிடம் கேட்டால் சம்பந்தம் இல்லாமல் பிரதமர் இந்தியை திணிக்கிறார் என்று கூறுவார்கள்.
தமிழ்நாட்டில் 8 கோடி மக்கள் மட்டும் பேசக்கூடிய மொழியாக இருந்த தமிழ் மொழியை இன்று பிரதமர் உலகத்தில் உள்ள 800 கோடி மக்களும் அறிமுகப்படுத்துகிறார். திருக்குறளை எல்லா நாடுகளுக்கும் கொண்டு செல்ல நினைக்கிறார். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எல்லா மனிதர்களையும் இணைத்து மனிதர்களை முன்னெடுத்து ஆட்சி இருக்குமே தவிர மதங்களை பிளவுபடுத்தி இருக்காது. ஜாதியை வைத்து காட்டுமிராண்டித்தனமாக தி.மு.க. செய்யக்கூடிய அரசியலை செய்ய மாட்டோம்.
சென்னையில் கொஞ்சம் மழை பெய்தாலே மக்கள் படகு வாங்கி வைத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை இப்போது திருச்சியிலும் வந்துள்ளது. ராஜராஜசோழன் வெட்டிய உய்யக்கொண்டான் வாய்க்கால் சாக்கடையாக மாறிவிட்டது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் திருச்சியில் ஆட்டோ நகரம் அனைத்து வசதிகளுடன் துணை நகரம், மெட்ரோ ரயில் சேவை, உயர்மட்ட மேம்பாலம், மலைக்கோட்டைக்கு ரோப் கார் அமைக்கப்படும் என்றெல்லாம் கூறியிருந்தனர.
திருச்சியில் இருக்கும் 2 அமைச்சர்களுக்கும் திருச்சி வளர்ச்சியின் மீது அக்கறை இல்லை. திருச்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.பி.யை கொடுங்கள். மெட்ரோ ரயில் திட்டம் உடனே கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பாதயாத்திரையில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில இணை பொரு ளாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டி முத்து, மாவட்ட துணை தலைவரும் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளருமான கள்ளிக்குடி ராஜேந்திரன், மார்க்கெட் மண்டல் தலைவர் மெடிக்கல் பழனிக்குமார், மாநில கூட்டுறவு பிரிவு எம்பயர் கணேஷ், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீராம் சங்கர், மகளிர் அணி ரேகா கார்த்திகேயன், கருமண்டபம் முட்டை செல்வம், இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் சந்தோஷ் குமார் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகை கொள்ளை சம்பவம் நடந்துள்ளது
- எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
திருச்சி,
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. (வயது 50). சுகாதார ஆய்வாளர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வேலை விஷயமாக வெளியே சென்று விட்டார். பின்னர் வந்து வீட்டை திறந்து பார்க்கும் போது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்த போது 4 பவுன் செயின், இரண்டு பவுன் வளையல். 12 கிராம் தங்க மோதிரம் மற்றும் நாணயங்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சுந்தரமூர்த்தி எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி உமா வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றார்.
- காலாண்டு வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் 4 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தம்
- வருகிற 1-ந் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் என அறிவிப்பு
திருச்சி,
தமிழகத்தில் லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும், இது மட்டுமன்றி மணல் தேவைக்கேற்ப அதிக அளவு குவாரிகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த போராட்டத்தால் திருச்சி குட்செட்டில் லாரிகள் வேலை நிறுத்தத்தின் காரணமாக 200க்கும் மேற்பட்ட லாரிகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதே போல் திருச்சி மார்க்கெட் ஈ.பி.ரோட்டில் உள்ள ஷெட்டில் நூற்றுக் கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டத்தில் 4000க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளது.அதேநேரம் இன்றைய தினம் கொண்டு செல்லப்பட உள்ள பொருட்களும் தேக்கமடைந்து உள்ளது. ஏற்கனவே நோட்டீஸ் விடுத்ததன் காரணமாக இன்றையதினம் வரவேண்டிய அரிசி மற்றும் உரங்கள் நாளை இறக்குமதி செய்யப்பட உள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் லாரி தொழிலை நசுக்கும் வகையில் தொடர்ந்து இதுபோன்று செயல்பட்டு வந்தால் 1-ந் தேதிமுதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
- தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்க திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் திறக்கப்பட்டது
- 15-ந் தேதி வரை செயல்படும் என்று அறிவிப்பு
திருச்சி,
தீபாவளி, பொங்கல் ஆகிய பண்டிகை தினங்க ளில் அதிக அளவிலான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல் வது வழக்கம். இதற்காக கூடுதல் அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்ப டும்.
அவ்வாறான நேரங்களில் பயணிகளின் கூட்ட நெரி சலை தடுக்கும் வகையில் திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வருகிற 12-ந் தேதி கொண்டா டப்படும் தீபாவளி பண்டி கையை முன்னிட்டு தற்கா லிக பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான ஏற்பாடு கள் நடந்தன.
இதையடுத்து திருச்சியில் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகளுக்காக மத்திய பஸ் நிலையம் அருகேயுள்ள சோனா மீனா திரையரங்கம் அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
அதேபோல் மதுரை மற்றும் புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மன்னார்புரத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து அங்கிருந்து இயக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.
விழாவில் மாநகர காவல்துறை ஆணையர் காமினி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். போக்குவரத்து கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சங்கர், நகர கோட்ட மேலாளர் புகழேந்திராஜ், மற்றும் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புறநகர் கோட்ட மேலாளர் யேசுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (9-ந்தேதி) முதல் 15-ந் தேதி வரை செயல்படும் இந்த தற்காலிக பேருந்து நிலையங்களில், பயணிகள் வசதிக்கான மின்விளக்குகள், கழிவறை, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.
- உப்பிலியபுரம் அருகே கல்லூரி மாணவி திடீர் தற்கொலை செய்து கொண்டார்
- உப்பிலியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பகுதியில் உள்ள கானப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், விவசாயி. இவரது மகள் ஜனனி (வயது 18). இவர் நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மாலை வீட்டிற்கு வந்த ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அவரது தாத்தா மாலை வேளையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஜனனி தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் செபாஷ்டின் சந்தியாகு போலீசாருடன் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜனனி தற்கொலைக்கு காரணம் என்ன? கல்லூரியில் ஏதும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது






