search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruchirapalli Rock Fort Temple"

    • 273 அடி உயரமுள்ள மலைக்கோவிலுக்கு செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன.
    • ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திருச்சி மக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    திருச்சி:

    தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டமான திருச்சி பல்வேறு வரலாற்று சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக திருச்சி மாநகரில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. பல நூற்றாண்டுகளை கடந்து பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோவில் என்று கூறுகிறார்கள். இந்த பாறைக்கு மலைக்கோட்டை என்ற பெயரும் உண்டு.

    மேலும் மலைக்கு செல்லும்போது தாயுமானவர் சன்னதியை கடந்துதான் பிள்ளையார் சன்னதிக்கு செல்ல வேண்டும். கிட்டத்தட்ட பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 400-க்கும் மேற்பட்ட படிகளை ஏறிச்செல்ல வேண்டும். மேலும் மிகவும் பழமையான கோவில் என்பதால் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    273 அடி உயரமுள்ள மலைக்கோவிலுக்கு செல்ல 437 படிக்கட்டுகள் உள்ளன. இந்தப்படிகள் செங்குத்தாக இருப்பதால், மலை உச்சிக்கு மிகவும் சிரமப்பட்டுத்தான் செல்ல வேண்டும். இதனால் நடக்க முடியாதவர்கள் படிக்கட்டில் ஏற முடியாமல் மலையடிவாரத்தோடு திரும்பிச்சென்று விடுகின்றனர். 

    இதனால் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திருச்சி மக்கள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது ரூ.10 லட்சத்தை இந்த திட்டத்துக்காக ஒதுக்கினார். ஆனால் திட்டம் நிறைவேறவில்லை.

    பிறகு வந்த ஆட்சியாளர்கள், ரோப் காருக்கு பதிலாக இழுவை ரெயில் அமைக்கலாம் என்று யோசித்தனர். ஆகையால் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் தேர்தல் நேரத்தில் மலைக்கோட்டைக்கு ரோப் கார் திட்டத்தை நிறைவேற்றுவதாக அ.தி.மு.க.வினர் மீண்டும் வாக்குறுதி அளித்தனர். ஆனால் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தும் அந்த திட்டம் நிறைவேறவில்லை.

    தற்போது ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க அரசு இந்த திட்டத்தை கையில் எடுத்தது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருச்சி மலைக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவினர் ஆய்வு செய்து, திருச்சி மலைக்கோட்டைக்கு ரோப்கார் அமைக்க போதுமான இடமில்லாததால், சாத்தியமில்லை என்று கூறிவிட்டது. அதற்கு மாற்றாக, லிப்ட் அமைக்கலாமா? என்பது குறித்து மாற்றுத்திட்டத்தை பரிசீலித்து வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து இருந்தார். இதனால் 46 ஆண்டுகால திருச்சி மக்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ? என்று தவித்து வந்தனர்.

    இந்தநிலையில் நாடு முழுவதும் மலைப்பிரதேசங்கள், மலைக்கோவில்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், போக்குவரத்தை எளிதாக்குவதற்கு, ரோப் கார் வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் 22 இடங்களில், 'ரோப் கார்' வசதியை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

    குறிப்பாக திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ரோப்கார் வசதி செய்ய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகளை மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் ஒப்படைத்து உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

    இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கி உள்ளது. சாத்தியமுள்ள இடங்களின் பட்டியல் 2 மாதங்களில் இறுதி செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து திட்ட மதிப்பீட்டு தயாரிப்பு பணிகள் தொடங்கும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    விரைவில் நவீன தொழில்நுட்ப வசதியுடன், உலகத்தரத்தில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என்றும், விரைவில் திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ரோப் கார் திட்டம் மத்திய அரசால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையிலும் இருப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    ×