search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிறப்பு முகாமில் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்கள் வெளிநாடு செல்லும் உத்தரவுக்காக காத்திருப்பு
    X

    சிறப்பு முகாமில் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையானவர்கள் வெளிநாடு செல்லும் உத்தரவுக்காக காத்திருப்பு

    • 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை.
    • முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரையும் கடந் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    இதில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரும் இந்திய குடியுரிமை பெற்ற காரணத்தினால் அவரவர்கள் இருப்பிடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் இலங்கை குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவு கிடைக்கும் வரையில் திருச்சி மத்திய ஜெயில் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர்.

    ஆனால் இங்கு வந்து ஓராண்டு ஆகும் நிலையிலும் 4 பேரும் விடுவிக்கப்படவில்லை. அவரவர் விரும்பும் நாடுகளுக்கும் அனுப்பப்படவில்லை. தற்போது சிறப்பு முகாமில் இருக்கும் முருகன் தனது மகளுடன் லண்டனில் இருக்கவும், சாந்தன் தனது தாயுடன் இலங்கை செல்லவும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் நெதர்லாந்து செல்லவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரும் சிறையில் நடத்தப்படுவது போன்று நடத்தப்படுவதாகவும், தங்களை விடுவிக்க கோரியும் அவ்வப்போது போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கூறியதாவது:-

    4 பேரின் விபரங்கள், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள், அவர்கள் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் உள்பட அனைத்து தகவல்களையும் மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். மேலும் நாடு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடர்பாக வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக (எப்.ஆர்.ஆர். ஓ.) தலைமை இடத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது.

    ஆனால் அங்கிருந்து இன்னும் எந்த உத்தரவுகளும் வரவில்லை. மத்திய அரசு மற்றும் எப்.ஆர்.ஓ. அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெறும் உத்தரவுகளின் அடிப்படையில் தான் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள 4 பேரையும் வெளியே அனுப்ப இயலும்.

    அந்த 4 பேருக்கும் என பிரத்யேகமாக எந்த பாதுகாப்போ, கெடுபிடிகளோ இல்லை. முகாமில் 4 பேரும் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை போன்று அவர்களும் நடத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×