என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருச்சி கடைவீதியில் தீபாவளி விற்பனை அமோகம்
- தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த மக்களின் வருவாய், சேமிப்பு தற்போது சமநிலைக்கு வந்துள்ளதால் இந்த தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.
திருச்சி
தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மக்கள் புத்தாடை, பட்டாசு, பலகாரம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திருச்சி மாநகரில் கடந்த ஒரு வார காலமாக ஜவுளி மற்றும் நகைக் கடைகள் நிரம்பியுள்ள என்.எஸ். பி. ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் கடைவீதிகளில் சங்கமிக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலால் நிலைகுலைந்த மக்களின் வருவாய், சேமிப்பு தற்போது சமநிலைக்கு வந்துள்ளதால் இந்த தீபாவளியை மக்கள் உற்சாகமாக கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.
2019-ம் ஆண்டு கொரோனா வைரஸ் ஊடுருவியது. அதன் தாக்கம் 2021 வரை நீடித்தது. உலகமெல்லாம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இழந்து வீடுகளில் முடங்கினர்.
பின்னர் 2022ல் வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டனர். ஆனால் முந்தைய வேலை இழப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றில் இருந்து விடுபடுவதற்கு 3 ஆண்டுகள் பிடித்துள்ளது.
திருச்சி மாநகரின் பிரபல ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் கூறும் போது,
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் இந்த ஆண்டுதான் முழுமையாக மீண்டிருக்கிறார்கள்.
கடந்த தீபாவளி பண்டிகையின் போது எளிய நடுத்தர மக்கள் ஒன்று இரண்டு ஆடை மட்டுமே வாங்கிச் சென்றனர். ஆனால் தற்போது மூன்று நான்கு சேலைகள் வாங்கி செல்கிறார்கள்.
நடப்பாண்டில் ஏப்ரல் மே மாதத்தில் இருந்தே விற்பனை நன்றாக இருக்கிறது.
கிராமப்புறங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தீபாவளி பர்சேஸ் முடித்து விட்டார்கள் என்றார்.
அதேபோன்று நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை மாதத் தொடக்கத்தில் வந்திருப்பதால் சம்பளமும், போனசும் ஒரே நேரத்தில் கைக்கு வந்துள்ளதால் மாதச் சம்பளம் பெற்று வரும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் உற்சாகமடைந் துள்ளனர்.
விற்பனை களை கட்டி உள்ளதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






