என் மலர்
தஞ்சாவூர்
- அம்மனுக்கு நேற்று புவனேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கோவிலூர் நெல்லி தோப்பில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மச்சம் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
தற்போது காத்தாயி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.முதல் நாள் காத்தாயி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று புவனேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. இன்று மகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாட்களும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.
விழாவில் காலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் , அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது . பின்னர் கன்னியா பூஜை, துர்கா பூஜை, சரஸ்வதி, லட்சுமி பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காத்தாயி அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே காத்தாயி அம்மன் கோவில் வளாகத்தில் நவராத்திரி கொலு பொம்மை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையும் பக்தர்கள் பார்வையிட்டனர்.
- 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
- போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லாவண்யா (வயது 24 ). சம்பவத்தன்று இவரது வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மாயமானது.
அதிர்ச்சியடைந்த லாவண்யா பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்த அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் வீடு புகுந்து நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சிறுவனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 350-க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மதுக்கூர்:
சர்வதேச உணவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே மூத்தாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான 350க்கு மேற்பட்டோர் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர்.
விழாவிற்கு மதுக்கூர் வட்டாரக்கல்வி அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார்.
ஓய்வு பெற்ற மூத்தாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவிச்சந்தி ரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மதுக்கூர் வட்டார வள மையமேற்பா ர்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர்கள் பிரகாஷ், வீரப்பரா ஜனும்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் நடுவர்களாக கோட்டைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி, மன்னங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வினோத், கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னத்துரை கலந்து கொண்டு போட்டியா ளர்களில் சிறப்பாக காட்சிப்படுத்தியவர்களுக்கு பரிசுகளை தேர்வு செய்தனர்.
முதல் இடத்தை ஜெயபாரதியும், 2-வது இடத்தை கௌதமியும், 3-வது இடத்தை லதாவும் பெற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனிவேலு பரிசுகள் வழங்கினார்.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பில் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் செல்வராணி , உதவி ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர். மேலும் இதில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர்கள், ஆசிரி யைகள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருட்டு சம்பவங்களை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சி.சி.டி.வி. கேமராக்க ளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த சோழபுரம் பாத்திமா நகரை சேர்ந்த லியாகத் அலி, ராஜா முகமது, அப்துல் பாசித் ஆகியோர் வீடுகளில் உள்ள ஏ.சி.யில் பொருத்தப்பட்டுள்ள காப்பர் கம்பிகளை நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
வீடுகளில் ஆட்கள் இருந்தபோதே இந்த திருட்டு சம்பவம் நடந்து உள்ளது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் சோழபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடு த்தனர். பின்னர், தொடர் திருட்டு சம்பவங்களை கண்டித்து போலீஸ் நிலையம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருப்பனந்தாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமை யிலான சோழபுரம் போலீசார் திருட்டு நடந்த வீடுகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து,
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்க ளில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பூதலூர்:
திருச்சி மாவட்டம் லால்குடி தாலூகா டி.கல்விக்குடி மேலகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 19).
இவர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பூண்டிக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் உணவை பார்சல் வாங்கி கொண்டு திரும்பி சென்றார்.
பூண்டி அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அருகே இருந்தவர்கள் திருக்காட்டுபள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீசார் பிரேதத்தைப் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார்.
- கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
கபிஸ்தலம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த கபிஸ்தலத்தில் வேளாண்மை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட துணை விவசாய விரிவாக்கம் மையம், திருமண்டங்குடி ஊராட்சியில் சண்முகம் எம்.பி. நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக மையம், கூனஞ்சேரி, திருவைகாவூர் ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டிடங்கள், கொந்தகை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியில் இருந்து கட்டப்பட்ட பொது விநியோக கட்டிடம் உள்பட ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 5 புதிய கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். முன்னதாக ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் அனைவரையும் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.
இதில் எம்.பி.க்கள். கல்யாணசுந்தரம், ராமலிங்கம், சண்முகம், அரசு தலைமை கொறடா செழியன், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் நாசர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், சுதா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் விஜயன், ஹாஜா மைதீன், சுரேஷ், ஊராட்சி தலைவர்கள் பிரபாகரன், பாலசுப்பி ரமணியன், பவுனம்மாள் பொன்னுசாமி, மகாலிங்கம், மகாலட்சுமி பாலசுப்பி ரமணியன், ராஜேந்திரன், வேளாண்மை இணை இயக்குனர் நல்ல முத்துராஜா, பாபநாசம் உதவி வேளாண்மை இயக்குனர் மோகன், வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதி தங்கம், மற்றும் வேளாண்மை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பழனிச்சாமி நன்றி கூறினார்.
- ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
- முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.
கும்பகோணம்:
பாபநாசம் திராவிடர் சமுதாய நலக்கல்வி அறக்கட்டளை, இமயம் கல்வி சமூகப்பணி அறக்கட்டளை, தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் ஆகியவை சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா கட்டுரை போட்டிகள் கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
போட்டியில் கணினி அறிவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் மாதவன் முதல் இடம் பிடித்தார். அவருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
தொடாந்து, பேச்சு போட்டியில் முதுகலை முதலாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவி நூர்ஆகாஸ் 2-ம் இடம் பிடித்தார்.
அவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மாதவி பாராட்டி வாழ்த்தினார்.
அப்போது தேர்வு நெறியாளர் சுந்தரராசன், வேதியல் துறை தலைவர் மீனாட்சி சுந்தரம், புவியியல் துறை தலைவர் கோபு, கார்த்தி, சவுந்தர்ராஜன், கல்லூரி நூலகர் சங்கரலிங்கம், கவின் கலை மன்ற பொறுப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன், விவேகா னந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி வருகிற 21, 22-ந்தேதி (சனி, ஞாயிறு) வார விடுமுறை, 23-ந்தேதி ஆயுத பூஜை, 24- ந்தேதி விஜயதசமி என தொடர் விடுமுறையையொட்டி, பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதேபபோல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 300 பஸ்களும், திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 200 பஸ்கள் என கூடுதலாக 20, 21 மற்றும் 22 ஆகிய 3 நாட்களில் மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்களில் சென்னை தடத்தில் 300 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 200 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை முடிந்து பயணிகள் திரும்ப செல்ல 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9:30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படு த்தப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆம்னி பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
- கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. மேயர் சண். ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநகராட்சி அலுவலர்கள் ,கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதலாவதாக புதிதாக ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட மகேஸ்வரி பேசும்போது, நான் டி.என்.பி.எஸ்.சி குரூப் -2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து அரசு பணியில் சேர்ந்தேன். பெரியகுளம் நகராட்சி, தர்மபுரி நகராட்சிகளில் பணிபுரிந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக பல்வேறு விருதுகளை பெற்றேன். திடக்கழிவு மேலாண்மை திட்டத்திலும் தேசிய, மாநில அளவில் விருதுகள் பெற்றுள்ளேன். அதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பேற்று பணிபுரிந்து வருகிறேன். தஞ்சாவூர் மாநகராட்சியிலும் சிறப்பாக பணிபுரிந்து பல்வேறு விருதுகளை பெற கடுமையாக உழைப்பேன் என்றார்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேயர் சண். ராமநாதன் பேசியதாவது:-
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஆம்னி பஸ் நிலையத்தை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த பஸ் நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய எம். எஸ். சுவாமிநாதன் பெயர் வைத்ததற்கும், தஞ்சை மேரிஸ் கார்னர் உயர்மட்ட மேம்பாலத்தை ராமநாதன் மருத்துவமனை வரை நீட்டிக்க உத்தரவிட்டதற்கும் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அமைச்சர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட், பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் வாடகை அதிகம் இருப்பதாக ஏலம் எடுத்தவர்கள் கூறியிருந்தனர். எனவே அவர்களின் வேண்டுகோளை ஏற்று மறு ஏலம் விட்டு குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாமன்னர் சோழன் சிலைக்கு மின்அலங்காரம், மரப்படிகள், தடுப்புகள் ஆகியவற்றை தற்காலிகமாக அமைத்து தரும் பணிகள் மேற்கொள்ள ரூ.14 லட்சம் அங்கீகரிக்கவும் ஒப்பந்த புள்ளிகள் கோரி தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது கவுன்சிலர்கள் நீலகண்டன் ,உஷா, காந்திமதி, கண்ணுக்கினியாள் உள்ளிட்ட சிலர் மாமன்ற கூட்டத்தில் விவாதிக்காமல் எப்படி கடைகளுக்கு மறு ஏலம் விடலாம் என கூறி எதிர்ப்பு தெரிவித்து மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாநகராட்சியில் மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், முறைப்படி தான் ஏலம் நடந்ததாகவும் , கூட்டம் முடிவடைந்து விட்டதாகவும் கூறி மேயர் சண்.ராமநாதன் வெளியேறினார்.
அப்போது கவுன்சிலர்கள் பேசும் மைக் திடீரென அணைக்கப்பட்டது. எங்களது உரிமைகள் பற்றி பேச முன்னறிவிப்பு இன்றி எப்படி மைக் அணைக்கலாம் என கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தஞ்சை மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் நடந்த இந்த அமளி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- நவராத்திரி கொலுப்படிகள் அமைக்கும் பணி தொடங்கியது.
- புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது.
தஞ்சாவூர்:
துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியரையும் போற்றி வணங்கும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மகாளய பட்ச அமாவாசைக்கு மறுநாள் இரவு முதல் நவராத்திரி வழிபாடு தொடங்குகிறது. நவராத்திரி கொண்டாடும் ஒன்பது நாட்களுக்கும் அம்பாளை அழைக்கும் விதமாக கொலு வைக்கும் வைபவம் கோயில்கள் மற்றும் வீடுகளில் நடக்கும்.
இதில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை அழைத்தும் , இறுதி 3 நாட்கள் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறவும் போற்றி வழிபடுகின்றனர்.
அதன்படி நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. வரும் 23-ம் தேதி சரஸ்வதி பூஜையும், 24-ம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.
அதன்படி நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் நவராத்திரி கொலுப்ப டிகள் அமைக்கும் பணி தொடங்கியது.
தஞ்சை -நாகை சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில், மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய கலை, கலாச்சாரம் ,வாழ்க்கை முறை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையிலும், விநாயகர், பார்வதி தேவியுடன் சிவபெருமான், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, மும்மூர்த்திகள், துர்க்கை, நடராஜர் ,கருப்பசாமி, தசாவதாரம் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகள் அடங்கிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டனர்.
இதேபோல் பல்வேறு வீடுகளிலும் பெண்கள் விரதம் இருந்து கொலு வைக்க தொடங்கியுள்ளனர். அஷ்டலட்சுமி ,ஆண்டாள், சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி என பல்வேறு வகையாக பொம்மைகள் வைத்து அலங்கரித்து மங்களப் பொருட்கள் வைத்து அம்பாளை சிறப்பு பூஜை செய்து வீடுகளுக்கு அழைக்கின்றனர்.
- இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது.
- 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தஞ்சாவூர்:
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் இராஜராஜன் சதய விழா வருகிற 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. 2 நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
சதய நாளான 25ஆம் தேதி மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கம், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர்.
சதய விழாவை ஒட்டி பெரிய கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக பந்தல் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து விழா மேடையும் அமைக்கப்படும்.
- வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
- தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் தஞ்சையில் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
காலை 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரம் இந்த மழை நீடித்தது. மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தொடர்ந்து மழை விட்டாலும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மழை வரலாம் என்று சூழ்நிலை தற்போது நிலவுகிறது. மழையால் தஞ்சையில் வெப்பத்தின் தாக்கம் தணிந்தது.






