என் மலர்
தஞ்சாவூர்
- நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கப்பட உள்ளது.
- தற்போது வரை 52 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர், திருவையாறு (பகுதி), தஞ்சாவூர் (பகுதி) ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 214 ஊரகக் குடியிருப்புகளுக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 453 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.248.67 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுவதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்த நிலையில் தஞ்சை ரெட்டிபாளையம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் பணிகள் நடந்து வருவதை இன்று துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நீர்த்தேக்க தொட்டியில் ஏறி நின்று பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டார் . அவரிடம் நடந்து வரும் பணிகள் குறித்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர் ஆகியோர் விளக்கி கூறினர்.
அப்போது துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ. இந்த பணிகளை விரைந்து தரமாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
பூதலூர் ஒன்றியம் திருச்சென்னம்பூண்டி ஊராட்சி அருகில் கொள்ளிடம் ஆற்றில் புதிய நீர் சேகரிப்பு கிணறு ஒன்றும் மற்றும் தோகூர் ஊராட்சி அருகில் காவிரி ஆற்றில் புதிய நீர் உறிஞ்ச கிணறு ஒன்றும் அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் மோட்டார் மூலம் 16.78 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு அகரப்பேட்டை ,கடம்பக்குடி, சித்திரக்குடி ஆகிய கிராமங்களில் புதிதாக கட்டப்பட உள்ள முறையை 2.05, 2.70 மற்றும் 4.60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையங்கள், நந்தவனப்பட்டி கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் பகிர்மான நிலையம் மூலம் 190.715 கி.மீ. நிலத்திற்கு நீர் உந்து குழாய்கள் பதிக்கப்பட்டு 72 தரைமட்ட நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட உள்ளது.
தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து 255.91 கி.மீ. நீளம் குழாய்கள் பதித்து ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 305 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மற்றும் புதிதாக கட்டப்பட உள்ள 23 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 55 லிட்டர் வீதம் வழங்கப்பட உள்ளது.
இந்தத் திட்டமானது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
தற்போது வரை 52 சதவீதம் அளவிற்கு பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்
ஆய்வின் போது தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி (தெற்கு), முரசொலி (வடக்கு), உலகநாதன் (மேற்கு ), மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ராகவேந்திரா நகர்கிளை செயலாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.
- 12-ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- மாணவர்கள் திருக்குறளை கற்றுக்கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
திருக்குறள் உலகப் பொதுமறை நூலாக போற்றப்படுகிறது.
திருக்குறளை பள்ளி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் புது முயற்சியாக தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியில் இயங்கி வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் கற்றுத் தரப்படுகிறது.
இதன் பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி மற்றும் முழுவதும் என பார்வைத்திறன் குறையுடைய மாணவ- மாணவியர்கள் என 1 முதல் 12 -ம் வகுப்பு வரை சுமார் 150 -க்கும் மேற்பட்டோர் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் பிரெய்லி எழுத்து கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்கேயே விடுதியில் தங்கி கல்வி பெற்று வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பள்ளியில் படிக்கும் மாணவ -மாணவியர்கள் அரசு பொதுத் தேர்வுகளில் 10 முதல் 12- ம் வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களுக்கு சென்னை (பூந்தமல்லி), திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 3 இடங்களில் மட்டுமே இந்த சிறப்பு பள்ளி செயல்பட்டு வருகிறது.
தஞ்சையில் மட்டுமே ஆண், பெண் ஆகிய இருபாலரும் படிக்கும் வசதி உள்ளது.
இந்நிலையில் இப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு திருக்குறளை கற்றுத் தரும் வகையில் புது முயற்சியாக ஒலிபெருக்கி வைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருள் ஆகியவை தானியங்கி கருவியின் மூலம் தினமும் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் அந்த திருக்குறளை உற்று நோக்கும் வகையில் முன்னதாக ஒரு மணி நேரம் முடிவடைந்ததும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அலாரம் அடிக்கப்பட்டு பின்னர் திருக்குறள் ஒலிபெருக்கி மூலம் கூறப்படுகிறது.
இதன் மூலம் பார்வை திறன் குறையுடைய மாணவர்கள் அந்த அலாரத்தை கவனித்தும், பின்னர் திருக்குறளை மனதில் உள்வாங்கி அவற்றை கற்றுக் கொள்கின்றனர்.
இதன் மூலம் மாணவ- மாணவிகள் திருக்குறளை கற்று கொண்டு பல்வேறு போட்டி தேர்வுகளிலும் பங்கு பெறுகின்றனர்.
தாங்கள் படித்த பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் இணைந்து இந்த வசதியை செய்து கொடுத்துள்ளனர்.
மேலும் இப்பள்ளியில் சிறப்பு அம்சமாக கணிணி பயன்பாடு பாடப்பிரிவு கணிணி வாய்ஸ் மூலம் கற்றுத் தரப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி கூறுகையில், பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் கடிகாரத்தை நேரில் பார்க்க முடியாததால், ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரம் அலாரம் அடித்து பின்னர் ஒலிபெருக்கி மூலம் திருக்குறள் ஒலிபரப்பப்பட்டு அதன் பொருளும் கூறப்படுகிறது.
இதனால் மாணவர்கள் திருக்குறளை எளிதில் கற்றுக் கொள்ள முடிகிறது என்றார்.
மற்ற மாணவர்களை போல் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்கள் திருக்குறளை கற்க புது முயற்சி எடுக்கும் பள்ளி ஆசிரியர்களை பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.
- ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு 5 நாட்களுக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்து செல்லப்பட்டனர்.
- விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் வட்டாரம் வேளாண்மைத்துறையின் கீழ் அட்மா திட்டத்தின் மூலம் 20 விவசாயிகள் மாநிலங்களுக்கிடையேயான பட்டறிவு சுற்றுலாவிற்கு பேருந்து மூலம் அழைத்துசெல்லப்பட்டனர்.
ஒழுங்குமுறை விற்ப னைக்கூட நடைமுறைகள் மற்றும் மின்னனு தேசிய வேளாண் சந்தை தொடர்பாக பாபநாசம் வட்டாரத்தை சேர்ந்த 20 விவசாயிகள் 5 நாட்களுக்கு ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய மிளகாய் சந்தையான ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டுருக்கு பட்டறிவு சுற்றுலாவாக அழைத்துசெல்லப்பட்டனர்.
அங்கு ஆந்திராவில் பயிரப்படும் மிளகாய் இரகங்கள், பயிரிடப்படும் பருவங்கள் பயிர் தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை படுத்தல் ஆகிய தொழில்நுட்பங்களை விவசாயிகள் நேரில் கண்டு விவரங்கள் கொண்டு அறியபெற்றனர்.
விவசாயிகள் மிளகாயை எவ்வாறு சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.
சந்தைப்படுத்தும் முறைகள்தரம் நிர்ணயம், விளைபொருளுக்கு ஏற்ற விலை நிரணயம் செய்தல் மின்னனு தரம் நிர்ணயம், தர சான்று பெறுதல் தேசிய வேளாண் சந்தை இணைய தளத்தில் பதிவு செய்தல், வியாபாரிகளை எவ்வாறு தொடர்பு கொள்ளுதல், விளைபொருளுக்கேற்ற தொகை பெறும் வழிமுறைகள் ஆகியவை பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த சுற்றுலாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு போக்குவரத்து செலவினம் தங்குமிடம் மற்றும் இந்த சுற்றுலாவிற்கு உணவு வேளாண்மைத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.
விவசாயிகளை பாபநாசம் வட்டாரம் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி மற்றும் பாபநாசம் தொகுதி உதவி வேளாண்மை அலுவலர் திரிபுரசுந்தரி விவசாயிகளை அழைத்து சென்றிருந்தனர்.
- விவசாயிகளின் வங்கி கணக்கில் கிரைய தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
- ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை கொள்முதல் வரும் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:-
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தஞ்சாவூா் விற்பனை குழுவுக்கு உள்பட்ட ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிகழாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 என்ற வீதத்தில் விவசாயிகளிடமிருந்து அரைவை கொப்பரை நேபெட் நிறுவனத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை 1602 விவசாயிகளிடமிருந்து 2 ஆயிரத்து 499 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நி லையில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டமானது வரும் 26 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய அரசாணை பெறப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது, சிறு குறு விவசாயிகள் நலனை கருதி அவா்களிடமிருந்து கொப்பரை கொள்முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சாா்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனா்.
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கிரைய தொகையானது நேரடியாக வரவு வைக்கப்படுவதுடன் தரத்தின் அடிப்ப டையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதியைச் சாா்ந்த தென்னை விவசாயிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாணவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ் வழங்கப்பட்டு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
- மாற்றுத்திறன் மாணவர்களை கடைக்கு அழைத்து சென்று உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருகிறது.
தஞ்சாவூர்:
நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி (ஞாயிறு) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
அதற்காக அனைத்து மக்களும் பண்டிகைக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் வாங்கிட கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர் .
விளிம்பு நிலை குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும், பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவ -மாணவிகளும் எந்த ஒரு காரணத்துக்காகவும் தீபாவளி கொண்டாட்டங்க ளையும் பண்டிகை தரும் அளவற்ற மகிழ்வான தருணங்களையும் தவற விடக்கூடாது என்ப தற்காக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை முன்னிட்டு ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் திப்பியக்குடி அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாண வர்களையும் அவர்களது பெற்றோர், ஆசிரியர்களுடன் அவர்களது இல்லத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அங்கு குழந்தைகள் அவர்கள் விரும்பும் உடைகளை தீபாவளி பரிசாக ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் வாங்கிக் கொடுத்தனர்.
மேம்பாலம் பார்வைத்திறன் குறைவுடையோர் பள்ளியில் பயிலும் பெற்றோரை இழந்த மாணவ- மாணவிகளுக்கும் தேவையான புத்தாடைகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது .
மேலும் அனைத்து மாணவ -மாணவிகளுக்கும் 10 வகையான இனிப்புகள் அடங்கிய ஸ்வீட்பாக்ஸ் வழங்கி பண்டிகை கால வாழ்த்துக்கள் தெரிவிக்க ப்பட்டது.
மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் , இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இது குறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவிக்கையில், ஆதர வற்ற குழந்தைகள் மகிழ்ச்சியாக தீபாவளி உள்ளிட்டபண்டிகை காலங்களை மகிழ்வாக கொண்டா டுவதற்காக தொடர்ந்து பல்வேறுநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் வேளையில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோரை இழந்த மாற்றுத்திறன் மாணவர்களை நேரடியாக கடைக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பும் உடைகளை எடுத்து கொடுப்பது மன நிறைவை தருவதாக தெரிவித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, மேற்பார்வை யாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- பயணிகள் ரெயில் நேரத்தை தஞ்சையில் மாலை 5.45 மணிக்கு புறப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பூதலூர் ரெயில் நிலைய நடைமேடையில் இன்டிகேட்டர் போர்டு வைக்க வேண்டும்.
பூதலூர்:
தஞ்சாவூர் திருச்சிரா ப்பள்ளி ரயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் அய்யனாபுரம் நடராஜன் செயலாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜீவகுமார் ஆகியோர் திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில்வே மேலாளரை நேரில் சந்தித்து ரயில் நேரமாற்றம் குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் தினமும் காரைக்கால்- திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் நேரத்தை தஞ்சையில் மாலை 5:45 மணிக்கு புறப்படுமாறு ஏற்பாடு செய்ய வேண்டும்.
வண்டி எண் 06646 திருக்காட்டுபள்ளி -மயிலாடுதுறை ரெயில் நேரத்தை திருச்சியில் காலை 7.35 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
திருச்சிராப்பள்ளி -ஹவுரா விரைவு ரெயில் வேளாங்கண்ணி வரை நீடிக்கவும், மைசூர் விரைவு ரெயில், சோழன் விரைவு ரெயில்களில் முன் பதிவில்லா பெட்டிகளை கூடுதலாக இணைக்கவும்.
மயிலாடுதுறை -கோவை ஜனசதாப்தி விரைவு ரெயிலை பூதலூரில் இரு மார்க்கத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யவேண்டும்.
பூதலூர் ரெயில் நிலைய நடைமேடையில் முன் பதிவு பெட்டிகள் நிற்கும் இடம் குறித்து இன்டிகேட்டர் போர்டு வைக்கவும்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேர சூப்பர் பாஸ்ட் விரைவு ரெயில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தபட்டு இருந்தன.
- பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அடுத்த கொத்தங்குடி ஊராட்சி சாத்தனூர் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது.
பணிகள் தொடங்கி பல மாதங்கள் ஆகியும் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது.
இதன் அருகில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது.
மாணவர்கள் ஓய்வு நேரங்களில் அவ்வழியாக செல்வதும், விளையாடுவதும் ஆக உள்ளனர்.
எனவே, பள்ளியும் அருகில் இருப்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
- சிறுமி சத்தம் போடவே அவரது பெற்றோர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.
- படுகாயம் அடைந்த சிவக்குமாருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில்வே கேட் அருகில் காலனி தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது35).
இவர் ஆடுதுறை ரெயில் நிலையத்தின் வெளியே உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்த 11 வயது சிறுமியிடம், சிவகுமார் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சிறுமி சத்தம் போடவே சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.
மேலும் சிவகுமாரை தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.
- ஜவுளி, பட்டாசு, இனிப்பு வாங்குவதற்காக பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
- காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜவுளி, பட்டாசு, இனிப்பு முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர்.
தஞ்சையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க தொடங்கி விட்டனர். மேலும் தற்போது தங்கள் வீட்டுக்கு, உறவினர்களுக்கு கொடுக்க தேவைப்படும் இனிப்பு வகைகளை வாங்குவதற்கு குவிய தொடங்கியுள்ளனர்.
இதனால் தஞ்சையில் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படுகிறது.
இன்று பிற்பகல் வரை மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பாதிப்படையவில்லை.
தஞ்சை காந்திஜி சாலை, கோர்ட் ரோடு, கீழவாசல், பழைய பஸ் நிலையம் ,புதிய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தஞ்சை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தஞ்சைக்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் நகரில் சாலைகளில் வழக்கத்தை விட வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவதை தடுக்க காந்திஜி சாலையில் போலீஸ் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுழற்சி முறையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இனி வரக்கூடிய நாட்களில் இதை விட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- 12, 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் ஆர். மோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-
வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலின்றி எந்தவித சிரமமும் இன்றி பயணம் செய்ய ஏதுவாக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னையிலிருந்து கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூ ரணி, மன்னார்குடி, நன்னி லம், நாகப்பட்டினம், காரைக்கால் வேளா ங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) 250 கூடுதல் பஸ்களும், 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 750 கூடுதல் பஸ்களும், 11-ந் தேதி (சனிக்கிழமை) 520 கூடுதல் பஸ்களும் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கு மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு 9-ந் தேதி 100 கூடுதல் பஸ்களும், 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 250 கூடுதல் பஸ்களும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பஸ்களும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது .
கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, ஒரத்தநாடு தட பஸ்கள் , தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் இயக்கப்படும்.
இதேப்போல் கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலா டுதுறை, சீர்காழி , திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதார ண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. ஆர் பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
மேலும் தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 12, 13, 14 மற்றும் 15 ஆகிய நாட்களில் மேற்குறிப்பிட்டவாறு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக கீழ்குறிப்பிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி செய்யப்ப ட்டுவருகிறது.அதன்படி சென்னையில் இருந்து திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோ ட்டை, மயிலாடுதுறை, காரைக்குடி, கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, வேளாங்கண்ணி, திருவாரூர், கோயம்புத்தூர், ராமேஸ்வரம், கொடை க்கானல் ஆகிய ஊர்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை யையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணி களின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கே ற்ப பேருந்து சேவையை அளிக்க ஏதுவாகும். மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இய க்கப்படும் பேருந்துகளுக்கும் முன்பதிவு சேவை விரிவுப்படு த்தப்பட்டு ள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டு க்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் ஆப் மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் பிறந்தநாள் விழா.
- குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர்:
பொதுநலன் மனித உரிமை காப்பாளர் பாரத சிற்பி டாக்டர் ரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் தனது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மாநகராட்சி 29-வது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
குழந்தைகள் அமர்வதற்கு பாய் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். மேலும் அந்த வார்டு ஏழை பெண்களுக்கு புடவைகளை பரிசாக வழங்கி உதவினார்.
இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் ஸ்டெல்லா நேசமணி எப்சிராஜ், வார்டு தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.
- இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் நவ பாரத் மெட்ரிக் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் இன்று குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து தொடர்ந்து 3 மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஸ்டார் குளோபல் இன்டர்நேஷனல் சார்ட்டபிள் டிரஸ்ட் தலைவர் முகமது சாபீர் ஒருங்கிணைத்தார்.
இதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாண விகள் கலந்து கொண்டு இடைவிடாமல் 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய சிலம்பம் 11.30 மணி வரை இடைவிடாமல் சுற்றினர்.
இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பிடித்தது. சிலம்பம் சுற்றியவர்களை மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் பாராட்டினார்.
மேலும் அவர் சாதனை படைத்த தற்கான நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சான்றிதழ்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நவ பாரத் மெட்ரிக் பள்ளி பிரின்சிபல் ஜான்சன், அட்மினேஸ்டர் குணாசிங், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சீப் ஆப்பரேட்டிங் ஆபிஸர் வினோத், தீர்ப்பாளர் பரத் குமார், கேரளா யு.எஸ்.எம்.ஏ. கிராண்ட் மாஸ்டர் குங் நியாஸ், பொதுச் செயலாளர் மார்க்கர், ஏ.ஐ.கே.ஏ. துணைத் தலைவர் ரெனால்ட் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






