என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை.
    • ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை.

    தஞ்சாவூா்:

    ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை டெல்டா மாவட்டமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வரக்கூடாது.

    ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறு தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மாபேட்டை பஸ் நிலையம் முன்பு தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பேரியக்கம் தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் திருநாவுக்கரசு, திருமாவளவன், வேல்முருகன் , மணியரசன் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் இந்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

    வழக்கில் ஆஜராகி விட்டு வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி அம்மாபேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். இதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு எங்கள் மீது வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் ஆஜரானேன். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கபட்டது. சம்மன் அனுப்பப்பட்டதால் நான் ஆஜர் ஆனேன்.

    பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

    மக்கள் பிரச்சனைக்காக போராடியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை திமுக அரசு திரும்ப பெற்றது.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பெய்த கனமழையில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின்கம்பம் சீரமைக்கும் பணியில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது. மனித உயிர் விலை மதிக்க முடியாதது. நிவாரணம் என்பது ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும். குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவித்து ஒரே மாதிரியாக வழங்க வேண்டும். இதில் பாகுபாடுக்கூடாது.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் துரித நடவடிக்கை எடுக்க 15-க்கும் மேற்பட்ட அமைச்சசர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். எனவே நியமிக்கப்பட்ட அனைவரும் துரிதமாக பணி செய்து இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும்.

    பருவ மழை, பேரிடர் கால நிவாரண நிதிகளை மத்திய அரசு ஒருபோதும் தமிழகத்திற்கு வழங்கியது இல்லை. ஜிஎஸ்டி வரி வசூலித்த தொகைகளை கூட வழங்கவில்லை. எனவே தமிழக அரசே உரிய நிதிகளை ஒதுக்கி வழங்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக்கூடாது. இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசால் தமிழ் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்லூரி பஸ்சானது இன்று காலை கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 20 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.

    அதேவேளையில், கும்பகோணத்தில் இருந்து பூ லோடு ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சானது திருவிடைமருதூர் அடுத்துள்ள கோவிந்தபுரம் வழியாக கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கல்லூரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் மினி லாரியில் பயணம் செய்த கும்பகோணம் மூப்பக்கோவில் மேலத்தெருவை சேர்ந்த முகமது சமீர் (வயது 25), சுந்தரபெருமாள் கோவில் மேலவீதியை சேர்ந்த கார்த்தி (31) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த கல்லூரி மாணவர்களையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும், இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த கோர விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    • திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    தஞ்சையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் ரெயில்வே கீழ்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேப்போல் கும்பகோணம், ஒரத்தநாடு, வல்லம், பூதலூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது.

    இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சம்பா, தாளடி சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் தளர்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைப்போல் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே தண்ணீரை கடந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது. மேலும் மழை நீர் வடிய அரசு வடிகால் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள்.
    • பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் சென்னையில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

    இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டாட செல்வார்கள்.

    இந்த பண்டிகை நாட்களில் ரெயில்களிலும், பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டில் இந்த மாதத்தில் (அக்டோபர்) ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வருகிறது.

    ஆயுத பூஜை வருகிற 11-ந் தேதி கொண்டாடப்படுகிறது. 12-ந்தேதி விஜயதசமி, 13-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக உள்ளன.

    தீபாவளி பண்டிகைக்கு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன. இதனால், பண்டிகை நாட்களில் சிறப்பு ரெயில் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர்.

    வருகிற 11-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு வாரத்தில் 5 நாட்கள் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை தவிர்த்து) பகல் நேர சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த ரெயில் (வண்டி எண்.06190) செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் 5 நாட்களும் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தஞ்சைக்கு 6.24 மணிக்கும். கும்பகோணத்திற்கு 6.58 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 7.28 மணிக்கும், சீர்காழிக்கு 7.52 மணிக்கும், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்க ல்பட்டு வழியாக சென்னை தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு செல்லும்.

    அங்கிருந்து இந்த ரெயில் மறுமார்க்கமாக (வண்டி எண். 06191) மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு சீர்காழிக்கு இரவு 7.52 மணிக்கும், மயிலாடுதுறைக்கு 8.43 மணிக்கும், கும்பகோணத்திற்கு 9.18 மணிக்கும், தஞ்சைக்கு 10.13 மணிக்கும். இரவு 11.35 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரெயிலில் 12 இருக்கை பெட்டிகள், 6 படுக்கை பெட்டிகள் உள்பட மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. எனவே இந்த ரெயிலை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு திருச்சி கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மொத்தம் 475 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • பயணிகள் இணையதளம் அல்லது செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்கோணம் கோட்டம் நிர்வாக இயக்குநா் ரா. பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் சார்பில் நாளை (சனி) மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாள்களில் பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூா், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊா்களுக்கு இன்று, நாளை (வெள்ளி, சனிக்கிழமைகளில்) ஆகிய இரண்டு நாள்களும் சோ்த்து 300 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூா், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊா்களுக்கு 175 பேருந்துகள் கூடுதலாக என மொத்தம் 475 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப செல்ல 6, 7 ஆகிய தேதிகளில் சென்னை வழித்தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களிலும் 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பயணிகள் இணையதளம் அல்லது செல்போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

    முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    பொதுமக்கள் எளிதாக புகார் செய்யும் விதமாக தஞ்சாவூர் மாவட்டக் காவல் அலுவலகம் உருவாக்கிய "உரக்கச்சொல் " என்ற செயலியின் சேவை தொடங்கப்பட்டது.

    மாவட்டக் காவல் அலுவலகத்தில் இந்தச் செயலியை அறிமுகம் செய்த தஞ்சாவூர் சரகக் டி.ஐ.ஜி. ஜியாஉல் ஹக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் ஆகியோர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள உரக்கச் சொல் என்கிற செயலியைக் செல்போனில் பிளே ஸ்டோர் ஆப் வழியாக பதிவிறக்கம் செய்து, பயனாளரின் பெயர், கைப்பேசி எண்ணைப் பதிவிட்டால், ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) வரும். அதைப் பதிவிட்டால் செயலி இயங்கத் தொடங்கும்.

    குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களும் பங்கேற்றால், அவற்றை விரைவாக தடுத்துவிடலாம் என்பதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம், தங்களது பகுதியில் அல்லது செல்லும் வழியில் நிகழும் போதைப் பொருள்கள் புழக்கம், சூதாட்டம், லாட்டரி விற்பனை, கள்ளச்சாராயம், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தல், பொது இடத்தில் மது அருந்துதல், மணல் திருட்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ரவுடிகளின் நடவடிக்கை, தகராறு போன்றவை குறித்து புகார் செய்யலாம்.

    இதில், குற்றம் நிகழும் இடம், என்ன குற்றம், காவல் நிலையம் போன்றவற்றை குறிப்பிட்டால், அது தொடர்புடைய காவல் அலுவலர்களுக்குச் செல்லும். இதையடுத்து, உடனடியாக காவலர்கள் நிகழ்விடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பர்.

    மேலும், அதில் நடவடிக்கை விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், கைது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல் துறை உயர் அலுவலர்கள் கண்காணிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் பதிவு செய்யும் புகார்தாரர்கள் பெயர், கைப்பேசி எண் போன்ற அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும். அதேசமயம் தவறான தகவலை பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் நாளை, நாளை மறுநாள் (சனி, ஞாயிறு) வார விடுமுறையையொட்டி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 295 பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருச்சியில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும் 175 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும்.

    அதேபோன்று, விடுமுறைக்கு பின் பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 29, 30 ஆகிய தேதிகளில் (ஞாயிறு, திங்கட்கிழமை) சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 150 சிறப்பு பஸ்களும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி.
    • 75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வளையப்பேட்டை பகுதியில் தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உருவசிலையுடன் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய கலைஞர் கோட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி உருவ சிலை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி கல்யாணசுந்தரம் ஆகியோர் கலைஞரின் கோட்டத்தை கும்பகோணத்தில் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

    கும்பகோணம் தி.மு.க.வின் மண் என்பது கருணாநிதிக்கு மட்டும் அல்ல, இந்தி எதிர்ப்பு போராட்டம், கருப்பு கொடி போராட்டம் என தஞ்சையில் நீலமேகம் தலைமையில் சிறப்பாக நடத்திக்காட்டினர். அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிவாகை சூடியவர் கருணாநிதி. தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறையிலும் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார்.

    75 ஆண்டுகால வரலாற்றில் இந்தியாவை தீர்மானிக்கும் தவிர்க்க முடியாத தலைவராக திகழ்ந்தவர் கருணாநிதி. அதுமட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியவர். தமிழ்நாட்டில் தி.மு.க.வின் வழிகாட்டி திட்டங்களான புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், ஒரு கோடியே 16 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேலும் மகளிர் உரிமை திட்டம் அனைத்து தகுதி உள்ள மகளிர்களுக்கும் கிடைக்கும்.

    வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கழக உடன்பிறப்புகள் சிறப்பாக பணியாற்றி மீண்டும் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக ஆட்சியில் அமர செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட கரம்பை, 8 நம்பர் கரம்பை, சிவகாமிபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களுக்கு கடந்த 2 வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இன்று காலை காலிக்குடங்களுடன் 8 கரம்பை பகுதி மெயின் சாலையில் திரண்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

    இது பற்றி தகவல அறிந்த வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையில போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்று பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனத்தில் அணிவகுத்து நின்றன.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அய்யம்பேட்டை:

    சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பழனிவேல் ஓட்டினார். கண்டக்டராக தஞ்சை ஜெபமாலைபுரத்தை சேர்ந்த வினோத் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் இன்று காலை தஞ்சை அருகே அய்யம்பேட்டையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பைபாஸ் சாலை திருப்பத்தில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். இதில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. பயணிகள் காப்பாறுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் பழனிவேல், கண்டக்டர் வினோத், தஞ்சை காசவளநாடுபுதூர் தொழிலாளி ராஜசேகர் (வயது 34) உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த அய்யம்பேட்டை போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் ராஜசேகர் இறந்தார். தொடர்ந்து 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சீமான் கூறிய கருத்து அமைந்துள்ளது.
    • தமிழகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துவிட்டது என்று கூறுவது கவர்னரின் அரசியல் விமர்சனம்.

    கும்பகோணம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சீமான் கூறிய கருத்து அமைந்துள்ளது. இது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற முயற்சி. தி.மு.க. கூட்டணிக்குள் பேசக் கூடிய அரசியலை கூட்டணிக்கு வெளியில் உள்ளவர்கள் பேசுவது ஏற்புடையது அல்ல.

    அது அவர்களின் சூது, சூழ்ச்சி நிறைந்த ஒரு அரசியல். டெல்லியில் இருப்பது போல் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றால் இங்கு ஆண்ட கட்சிகளாக அல்லது ஆளும் கட்சிகளாக இருக்கும் அ.தி.மு.க., தி.மு.க. தனித்து ஆட்சி செய்யக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்கள் என்றுதான் அதற்கு பொருள். இந்த அடிப்படையை உணராத கட்சி அல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி.

    கடந்த 1999-ம் ஆண்டு முதன் முதலில் தேர்தல் களத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அடி எடுத்து வைத்த போது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதுதான் எங்களது முழக்கமாகும். எங்களுக்கே அந்த விழிப்புணர்வு இருக்கும் போது

    நூற்றாண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதது அல்ல, கம்யூனிஸ்டு கட்சியினர் தெரியாதவர்கள் அல்ல.

    எனவே எந்த நேரத்தில் எதை கேட்க வேண்டும்? எப்படி கேட்க வேண்டும்? அதற்கான காலம் கனிந்திருக்கிறதா? இதையெல்லாம் அறிந்தவர்கள் தான் தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றோம். எங்களுக்கு கேட்கவேண்டிய நேரத்தில் கேட்கும் வலிமை வரும்.

    ஆளுங்கட்சி அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு யாரையும் துணை முதலமைச்சர் ஆக்கலாம். ஒருவர் அல்ல, பலரை கூட துணை முதலமைச்சர் ஆக்கலாம். எந்த அதிகாரத்தையும் அவர்கள் மாற்றிக் கொள்ளலாம்.

    தி.மு.க. ஆட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பது தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் செயல் திட்டம்.

    இந்தியாவிலேயே மிக சிறப்பான கல்வி திட்டங்களுடன் இயங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துவிட்டது என்று கூறுவது கவர்னரின் அரசியல் விமர்சனம்.

    அவர் அரசியல்வாதியாக தான் இருக்கிறாரே தவிர, கவர்னர் என்பதை மறந்து விடுகிறார். கவர்னராக இருந்து அவர் கருத்துக்களை சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
    • இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஜிஎஸ்டி குறைப்பு தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

    அப்போது ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசுகையில், "இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.

    அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு.. க்ரீமை கொண்டு வா.. நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு... கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அன்னபூர்ணா உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த சர்ச்சையை பயன்படுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

    ஜோதி அறக்கட்டளை என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் BUN-ன்னா கிரீம் இருக்கனும்..Bike-ன்னா ஹெல்மெட் இருக்கணும் என்ற வாசகம் அடங்கிய BUN வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

    ×