என் மலர்
தஞ்சாவூர்
- கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தாவின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம்.
- மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
தஞ்சாவூர்:
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இன்று அங்கு வாக்குப்பதிவு நடக்கிறது. கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அவருடைய தாய்வழி தாத்தாவின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துளசேந்திரபுரம் ஆகும்.
இந்தநிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற வேண்டி, துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள தர்ம சாஸ்தா கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் அவரை வாழ்த்தி கிராமம் முழுவதும் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் சிலர், இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.

இதேபோல் மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
- அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பா.ஜ.க கட்சி முன்பிருந்தே செயல்படுத்தி வருகிறது.
- யாருடன் சென்று ஓட்டுகேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.
திருவிடைமருதூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அரசியலில் கூட்டணி கட்சிகளுக்கு பங்கு என்னும் நிலைப்பாடு பா.ஜ.க கட்சி முன்பிருந்தே செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இருந்தபோதும் கூட்டணி அரசியலில் கூட்டணி கட்சிகளை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்துள்ளோம். யாருடன் சென்று ஓட்டுகேட்கிறோமோ அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிட்ட கூட்டணி கட்சியினருக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கி மந்திரி சபையில் இடம் அளிப்பது குறித்து பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்.
சினிமாவில் பிரகாசித்து விட்டு அரசியலில் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இதனை மக்கள் பல முறை உணர்த்தி இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
- விழாவில் சதய நட்சத்திர நாளான 10-ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும்.
தஞ்சாவூா்:
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை, அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு முதல் அரசு விழாவாக சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா வரும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடைபெறுகிறது.
இதனையொட்டி, பெரியகோவிலில் இன்று காலை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பந்தக்காலுக்கு பால், மஞ்சள், தயிர், திரவிய பொடி உள்பட பல்வேறு வகையான மங்களப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பந்தக்கால் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் செல்வம், துணைத்தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், தமிழர் வெற்றி பேரவை செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் சதய நட்சத்திர நாளான 10-ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிக்கப்படும். மேலும் பல்வேறு கட்சி, இயக்கம், அமைப்புகள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
இந்த 2 நாள் விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பெருவுடையார், பெரியநாயகிக்கு சிறப்புப் பூஜைகளும், அலங்காரமும் நடைபெறவுள்ளன.
- முகூர்த்தநாளையொட்டி பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
- இதேபோல் முல்லை பூவும் கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூச்சந்தை அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கள், ஊட்டி, ஓசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதேப்போல் இங்கிருந்தும் பூக்கள் விற்பனைக்காக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுவாக முகூர்த்தநாட்கள், பண்டிகை காலங்களில் பூக்களின் தேவை அதிகம் இருப்பதால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கும்.
இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. மேலும் நாளை முகூர்த்த நாளாகும். தீபாவளி மற்றும் முகூர்த்தநாளையொட்டி பூக்களின் தேவை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அவற்றின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி கடந்த வாரம் மல்லிகை கிலோ ரூ.500 முதல் 600 விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று 4 மடங்கு உயர்ந்து கிலோ ரூ.2000-க்கு விற்பனையாகின. இதேப்போல் முல்லை பூவும் கிலோ ரூ.2000-க்கு விற்கப்பட்டது.
கனகாம்பரம் ரூ.1000, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.300, ரோஜா ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றின் விலையும் அதிகமாகும்.
இது பற்றி வியாபாரிகள் கூறும்போது, நாளை தீபாவளி பண்டிகை, முகூர்த்தநாளை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. வரத்து அதிகமாக இருந்தாலும் தேவை அதிகம் என்பதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்றனர்.
- 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
- சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தியுடன் தொடங்குகிறது.
விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி, வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 7-ந்தேதி காலை சுவாமி படிச்சட்டத்தில் வீதிஉலா வந்து, 108 சங்காபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடைபெறும்.
பின்னர், அன்று மாலை சண்முகர் அம்பாளிடம் சக்திவேல் வாங்கி சூரசம்காரம் செய்து, சுவாமி தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்து வீதிஉலா வைபவம் நடைபெறும். இதில் தஞ்சை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வர்.
தொடர்ந்து, வருகிற 12-ந்தேதி யதாஸ்தானம் சேரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவக்குமார், துணை ஆணையர் உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் அந்த மர்மபொருளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர்.
- ஆய்வில் அந்த பார்சலில் இருந்தது ‘மெத்தபெட்டமைன்’ என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது.
அதிராம்பட்டினம்:
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்மபொருள் கிடப்பதாக கடலோர காவல் குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், பட்டுக்கோட்டை கடலோர காவல்குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சை வேம்பு, ராஜசேகர், அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் ஜெகதீசன், ராஜாமடம் வி.ஏ.ஓ. முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பார்த்தபோது, கடற்கரை ஓரத்தில் பாலித்தீன் பையில் அந்த மர்மபொருள் கிடந்தது தெரியவந்தது.
பின்னர், வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் அந்த மர்மபொருளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அது போதை பொருள் என்பது தெரியவந்தது. பின்னர், அது எந்த வகையான போதை பொருள்? என்பதை அறிய அதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வில் அந்த பார்சலில் இருந்தது 'மெத்தபெட்டமைன்' என்ற போதை பொருள் என்பது தெரியவந்தது. அதன் எடை 900 கிராம் என்றும், அதன் மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குபதிவு செய்து போதை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? கடத்தி வந்தவர் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும்.
- சீமான் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி உஞ்சிய விடுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளராக இருந்த உஞ்சைஅரசனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எதிர்பார்பாகவும், வேட்கையாகவும் இருக்கலாம். அவரின் வேட்கை தணிய வேண்டும்.
கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பிரச்சனையின் அடிப்படையில் விவாதங்கள் நடைபெறலாம். ஆனால் விரிசல் ஏற்படாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதை வி.சி.க. வழிமொழிகிறது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திராவிடம் என்ற ஒன்று இல்லை என்று கூறியிருப்பது குறித்து பலமுறை விளக்கம் அளித்திருக்கிறோம்.
திராவிடர் வேறு தமிழர் வேறு என்பது போல ஒரு விவாதத்தை கூர்மைப்படுத்துவது சங்பரிவார்களுக்கு துணை போவதாக அமையும்.
இதை தமிழக கவர்னர் ஆர்.என். ரவியும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் விரும்புகிறார்கள். இதை பா.ஜனதா அரசியலாக்கி வருகிறது. அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதற்கு துணை போகிற வகையில் சீமான் போன்றவர்களின் விவாதங்கள் அமைந்திருக்கிறது.
தி.மு.க. எதிர்ப்பு என்பது வேறு, திராவிட எதிர்ப்பு என்பது வேறு ஆகும். ஆரியம் என்பதற்கான நேர் எதிரான கருத்தியலை கொண்டது திராவிடம் ஆகும். இதன் அடிப்படையில் தான் திராவிட அரசியலை கையாளுகிறோம். ஆனால், சீமான் தேசிய இனத்தின் அடிப்படையில் தமிழர், திராவிடர் என்று பாகுபடுத்தி சொல்வது சரியான விவாதம் இல்லை.
தி.மு.க.வை எதிர்க்கிறோம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த திராவிட அடையாளத்தையும் எதிர்ப்பது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
- ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது.
- இந்த போட்டியில் வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.
'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.
இந்நிலையில் தஞ்சாவூரில் தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பிழையின்றி முழுமையாக பாடினால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று ஜோதி தனியார் தொண்டு நிறுவனம் ஒரு நூதன போட்டியை அறிவித்தது.
ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நூதன போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாணவ, மாணவிகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் 25 நபர்கள் சரியாக தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி தலா 2 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெற்று சென்றனர்.
- விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சியிலிருந்து தஞ்சை வரும் வழித்தடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டு, 43 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று 14-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் வரவேற்று பேசினார். திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பஞ்சநதம் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 100 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 76 ஆய்வியல் நிறைஞர்கள், முதுகலையில் 212 மாணவர்கள், இளங்கல்வியியலில் 190 மாணவர்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் 68 பேர் என மொத்தம் 656 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார்.
சிறந்த மதிப்பெண்கள், புள்ளிகளைப் பெற்ற 8 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கினார். இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 மாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மாற்றுத்திறனாளிகள், திருநங்கை ஒருவரும் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள், பேரவை உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கவர்னர் ஆர்.என்.ரவியின் தஞ்சாவூர் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது தவிர கவர்னர் ஆர்.என்.ரவி திருச்சியிலிருந்து தஞ்சை வரும் வழித்தடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக இணை வேந்தரும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் வரவில்லை.
நேற்று கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட நிலையில் இன்று கவர்னர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் சாமிநாதன் புறக்கணித்ததாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
- இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார்.
தஞ்சை:
சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில், தொலைக்காட்சி பொன் விழாவுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழா தொடக்கத்தில் தேசிய கீதத்தை தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போது, "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரி விடுபட்டு பாடப்பட்டது.
'திராவிடம்' என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை இதனால் எழுந்தது.
இந்த செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட தமிழக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், தஞ்சையில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதுமாக பாடப்பட்டுள்ளது.
இன்று தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து துல்லியமாக பாடப்பட்டது.
- விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
கும்பகோணம் கோட்டம் சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டியும், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.
இதைப்போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 280 கூடுதல் சிறப்பு பஸ்களும்,
திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 150 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். இரு நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 430 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 20, 21 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'சிறப்பு சுற்றுலா பஸ்' வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
- இந்த பஸ்சில் பக்தர்கள் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் டெல்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 6 முருகன் கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 'சிறப்பு சுற்றுலா பஸ்' வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு சுற்றுலா பஸ் சேவையை திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், திருப்பனந்தாள் காசி திருமடம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
இந்த சிறப்பு சுற்றுலா பஸ்சானது கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு எண்கண் சுப்பிரமணிய சுவாமி கோவில் (திருவாரூர் மாவட்டம்), சிக்கல் சிங்காரவேலர் கோவில், பொரவச்சேரி கந்தசாமி கோவில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோவில் (நாகப்பட்டிணம் மாவட்டம்), சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில், ஏரகரம் ஆதி சுவாமிநாதசுவாமி கோவில் (தஞ்சாவூர் மாவட்டம்) ஆகிய 6 கோவில்களையும் பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில் பக்தர்கள் பயணம் செய்ய ஒரு நபருக்கு கட்டணமாக ரூ.650 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ்சானது பிரதி வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கும்பகோணம் மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு பஸ்சில் பயணிக்க விருப்பம் உள்ளவர்கள் www.tnstc.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நேரடியாக பஸ்சில் பயணச்சீட்டு பெற்று க்கொண்டு பயணிக்க இயலாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






