என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • கோட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் 2000 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது.
    • மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் மிகவும் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு அம்மனுக்கு கடந்த திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேக மும், லட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேகமும் இரவு கும்மியடியும் நடைபெற்று வருகிறது.

    இதையொட்டி நடந்த திருவிளக்கு பூஜையில் 2000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜை முடிந்தவுடன் அனைவ ருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பூச்சொரிதல் விழா அம்மன் திருவீதி உலா அதனை தொடர்ந்து நாளை (செவ்வா ய்க்கிழமை) காலை பால்குடம், காவடி, அக்னி சட்டி, இரவு முளைப்பாரி அம்மன் கோவில் வந்தடை கிறது. மறுநாள் (புதன்கிழமை) காலை முளைப்பாரி செலுத்துதல் நடைபெறும். மதியம் மஞ்சு விரட்டு நடக்கிறது.

    முளைப்பாரி திருவிழா பெரியகாரை, கள்ளிக்குடி, அடசிவயல் மற்றும் கோட்டூர் கிராமத்தை சுற்றி யுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் நடை பெறுகிறது.

    • ராகுல் காந்தியின் இந்த பேச்சு 90 சதவீதம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.
    • சம்பவம் நடந்த 9 நாட்களுக்கு பின் அவதூறு வழக்கு தொடர்ந்த நபர் குஜராத் நீதிமன்றத்தில் மனு செய்கிறார்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையை கூறினார். இது தொடர்பாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடருகிறார்.

    கோலாருக்கும், சூரத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தெரியவில்லை. பின்னர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட புகார்தாரர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அவரே 2022-ம் ஆண்டு தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என குஜராத் நீதிமன்றத்தில் தடை கேட்டு பெறுகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி பேசுகிறார். அப்போது பிரதமர் மீதும், குறிப்பிட்ட தொழிலதிபர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

    ராகுல் காந்தியின் இந்த பேச்சு 90 சதவீதம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த 9 நாட்களுக்கு பின் அவதூறு வழக்கு தொடர்ந்த நபர் குஜராத் நீதிமன்றத்தில் மனு செய்கிறார். அதில் ராகுல்காந்தி மீதான வழக்கு விசாரணைக்கு தடையை நீக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்.

    இதையடுத்து நீதிமன்றம் அவதூறு வழக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு ஒரு ஆண்டு தடை வாங்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை 21-02-2023ம் ஆண்டு தொடங்கியது. 30 நாட்கள் விசாரணை முடிந்தபின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 23-ந்தேதி தண்டனை அளிக்கப்பட்டது.

    மறுநாள் (24-ந்தேதி) ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்தது ஏன்? 30 நாட்களுக்குள் கிரிமினல் வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?

    இவ்வாறு ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

    பேட்டியின் போது சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் உடனிருந்தார்.

    • சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு குழந்தைகள் காப்பகம் சிவகங்கையில் உள்ளது.
    • 2 சிறுமிகளும் நேற்று காலை காப்பகத்தின் பின்புறம் உள்ள சுவரின் மீது ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கையில் சமூக நலத்துறை சார்பில் நடத்தப்படும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் கடந்த மார்ச் மாதம் காரைக்குடி போலீசார் ஒரு வழக்கு தொடர்பாக 15 வயது சிறுமி ஒருவரையும், தேவகோட்டை போலீசார் 16 வயது சிறுமி ஒருவரையும் கோர்ட்டு அனுமதியுடன் தங்க வைத்திருந்தனர்.

    இந்தநிலையில் அந்த 2 சிறுமிகளும் நேற்று காலை காப்பகத்தின் பின்புறம் உள்ள சுவரின் மீது ஏறி தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. மாயமான 2 சிறுமிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
    • இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் உள்ளது. இங்கிருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையின் நடுவில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் அதை வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அருகே கண்மாய் ஒன்று உள்ளதால் அந்த கண்மாயில் இருந்து வரும் கசிவு நீரானது இந்த சுரங்கப்பாதையில் வந்து நிரம்பி வருகிறது.

    இதனால் ஆண்டு முழுவதும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் முத்துப்பட்டி, நெற்புகப்பட்டி, நடராஜபுரம், பணங்குடி, பாகனேரி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று கல்லல் நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

    இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:- கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் மூழ்கிவிடும். அப்போது இந்த தண்ணீரை அகற்றுவதற்கு குறைந்தது ஒருவார காலம் வரை ஆகும். மேலும் இந்த சுரங்கப்பாதை உள்ள இடத்தின் அருகே விவசாய தேவைக்காக கண்மாய் ஒன்று உள்ளது.

    இந்த கண்மாயில் உள்ள தண்ணீர் கசிவு காரணமாக அங்கிருந்து கசிந்து வந்து இந்த சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி வருகிறது. தற்போது கோடைக்காலமாக இருந்தாலும் கூட கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளதால் அந்த தண்ணீர் இ்ந்த சுரங்கப்பாதைக்கு வந்து நிரம்புகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி சென்று கல்லல் சென்று அதன் பின்னர் காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுதவிர இந்த கிராமத்தில் இரவு நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால் இங்கு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரை காரணம் காட்டி அவர்கள் வரமறுத்து விடுகின்றனர்.எனவே மாவட்ட கலெக்டர் நேரில் இங்கு வந்து பார்வையிட்டு அருகில் கண்மாயில் இருந்து வெளியேறும் கசிவு தண்ணீரை சரி செய்ய பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ரெயில்வே துறை சார்பில் இதற்கு நிரந்தர தீர்வும் காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 பேரிடம் ரூ.21 லட்சம் மோசடி செய்த நபரை தேடி வருகின்றனர்.
    • அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை தொண்டி ரோடு பகுதியில் வசிப்பவர் ராஜேஸ்வரி (வயது 45). இவர் சிவகங்கை காளவாசல் பகுதியைச் சேர்ந்த மீனாட்சிசுந்தரம், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் சிவகங்கை சேர்ந்த மருதுபாண்டி, முத்துப்பாண்டி, முத்து உமையாள் ஆகிய 5 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.21 லட்சம் பெற்றுக் கொண்டாராம்.

    அதன் பின்னர் அவர்கள் 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளையும் கொடுத்தாராம். அதைப் பெற்றுக் கொண்ட அவர்கள் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்த அலுவலகத்தில் பணிக்கு சேர சென்ற போது அந்த உத்தரவு போலியானது என்று தெரிந்ததாம்.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் ராஜேஸ்வரி மீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் விசாரணை நடத்தி ராஜேஸ்வரி மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

    • மகாவீர் ஜெயந்தியையொட்டி 4-ந் தேதி டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.
    • சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகிறது. மேலும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL1, FL2, FL3, FL3A, FL3AA, Fl4A உரிமம் பெற்ற ஓட்டல்கள், கிளப் மற்றும் கேண்டீன்களில் இயங்கும் மதுக்கூடங்களையும் மேற்கண்ட தினத்தில் முழுவதுமாக மூட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கலப்படத்தை தவிர்த்து பாதுகாப்பு நெறிமுறைகள் கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • 94440 42322 என்ற வாட்ஸ்-அப் புகார் சேவை எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர், பதநீர், இளநீர், கம்மங்கூழ் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகமாகிறது. எனவே திரவ குளிர்பானங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறி முறைகளை முறைப்படி பின்பற்ற வேண்டும்.

    அதன்படி அனைத்து உணவு வணிகர்களும் குறிப்பாக புதிய வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை பெற்ற பின்னரே, உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.

    பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும்.உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பில். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்க ளுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.

    திரவ ஆகாரங்களை தயாரித்து அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களை தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது.

    கம்மங்கூழ் போன்ற உணவுப்பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. குளிரூட்ட, உணவுத் தர "ஐஸ் கட்டியைப்" பயன்படுத்த வேண்டும்.

    உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி "நீல நிறத்திலும்" இருக்கும். ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உறுதி செய்து, ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா? என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.

    நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து லேபிள் விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும். நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப்பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் உணவு பாதுகாப்பு அலுவலகத்திலோ அல்லது 94440 42322 என்ற வாட்ஸ்-அப் புகார் சேவை

    எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்பு செய்த கண்மாயை மீட்டு தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லாம்பட்டி கிராமத்தில் 150 குடியிரு ப்புகள் உள்ளன. கிராமத்திற்கு பாத்தியப்பட்ட குலவன் கண்மாய் சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

    பருவ மழை காலங்களில் கண்மாயின் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கண்மாய்க்கு அருகே இருந்து வரும் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களை 1987-ம் ஆண்டிலிருந்து 5 நபர்கள் கொண்ட கூட்டு பட்டா எங்கள் வசம் இருந்து வருவதாக அவர்களின் வாரிசுதாரர்கள் கூறி அந்நிலங்களில் உள்ள முட்செடிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கண்மாய்க்கு அருகே உள்ள நிலங்கள் அனைத்தும் கண்மாய்க்கு உட்பட்ட தாகவே இருந்து வருகிறது. எனவே இதில் தற்சமயம் தனியார் தரப்பினைச் சேர்ந்த நபர்கள் மேற்கொண்டு வரும் பணியினை நிறுத்த வேண்டும், கண்மாய்க்கு நடுவே இரு திசைகளில் இருந்து வரும் கோவில் மற்றும் மயான பகுதிக்கு செல்லும் பாதைகள் முதலியவற்றை மீட்டு தர வேண்டும்.

    அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். கண்மாய்க்கு பாத்தியப்பட்ட கலிங்கு மற்றும் கரை பகுதியை மீட்டு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்துள்ளனர். ஆனால் தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    எனவே கண்மாய்க்கு அருகில் உள்ள நிலப்பகுதிகள் கிராமத்திற்கு சொந்தமானதா? அல்லது 5 பேர்கள் கொண்ட குழுவினரின் வாரிசுகளுக்கு சொந்தமானதா? என்று முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்தி னருக்கும், வருவாய் துறையினரும் மட்டுமே உள்ள காரணத்தினால் அவர்கள் மௌனம் கலைத்தால் மட்டுமே இதற்கு முடிவு எட்டும் என்பது சமூக ஆர்வலர்க ளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

    மேலும் இது சம்பந்தமான நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கிராம மக்கள் தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டார் கால்வாய் சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    மானாமதுரை

    மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள கிருங்காகோட்டையை ஒட்டியுள்ள வைகை ஆற்றுப்பகுதியில் நாட்டார் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மூலம் 16 பெரியகண்மாய்கள், 25 சிறிய கண்மாய்கள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள், ஊரணிகளில் விவசாயத்தேவைக்கும், மீன்வளர்ப்புக்கும் தண்ணீர் நிரம்பி வந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கால்வாய் முறையாக தூர்வா ரப்படாமல் போனதால் மேடாகி கருவேலமரங்கள் நிறைந்து தண்ணீர் செல்வது தடைபட்டது. இந்த நிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, நாட்டார் கால்வாயை தூர்வாரி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தார்.

    எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று நாட்டார் கால்வாயை சீரமைக்க ரூ10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது இந்த கால்வாயை தூர்வார ரூ.3 கோடி ஒதுக்கி பணிகளை செய்தது. முறையாக வேலை செய்யாமல் பெருமளவு நிதியை செலவழிக் காமல் வீணடிக்கப்பட்டுள்ளது. தற்போது முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். நாட்டார் கால்வாயை சீரமைக்கும் பணியால் 3 மாவட்டங்களும் பயனடையும் நிலை உள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமமும் பயன்பெறும். இந்த அறிவிப்பால் இந்த பகுதியில் மானாவாரியாக உள்ள நிலங்கள் விளைநிலங்களாக மாறும். சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் தனது கோரிக்கையை ஏற்று நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழரசி எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    • திருப்பத்தூர் அருகே ஊரணி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • கோர்ட்டு உத்தரவுப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆ. தெக்கூர் கிராமத்தில் நகரத்தார்களால் கட்டப்பட்ட 120 ஆண்டு கால மீனாட்சி சுந்தரேஸ்வரரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் முன்பு 5 ஏக்கர் பரப்பளவில் ஊரணி இருந்தது. ஆனால் இந்த ஊரணியைச் சுற்றி வணிக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் ஆக்கிரமித்த தால் தண்ணீர் வரத்து பாதை அடைபட்டு பயன்பாடு இல்லாமல் போனது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும் உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டி 2 ஆண்டுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திற்கும், வருவாய் துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதனை விசாரித்த நீதிபதிகள் ஊரணியை சுற்றி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளையும் மீட்டெடுத்து ஊரணியை சீரமைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த 17-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து ஆகியோர் தலைமையில் ஊரணியின் மேற்குப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மின் விநியோகத்தை தடை செய்தனர்.

    மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டிடங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஊரணியை சுற்றியுள்ள மற்ற பகுதிகளில் இருந்து வரும் சுமார் 47 குடியிருப்பு பகுதிகளின் உரிமை யாளர்களுக்கு மாற்று இடங்களில் 3 சென்ட் நிலம் வழங்கி, வரும் நாட்களில் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்பு களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகளால் பொன்னமராவதி-திருப்பத்தூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தமிழர்களின் வரலாற்று பெருமையை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
    • அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    கீழடி அருங்காட்சிய கத்தை ஏராளமான திரை பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடனிருந்தார்.

    அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்ய கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது.
    • உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை தகுந்த தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில் காரைக்குடி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழிலாளர் நல சங்க கட்டிடத்தில் தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ், கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    இதில் தொழில் அதிபர்கள் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற விதத்தையும், விற்பனை விகித முறையையும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படித்து முடித்த இளைஞர்கள் காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள காலிமனைகளை பயன்படுத்தி, தொழிற் முனைவோர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் பங்கேற்ற காரைக்குடி சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த தொழில் அதிபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பல்வேறு வசதிகள் குறித்து தெரிவித்தனர்.

    இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில்துறை கூடுதல் செயலாளர் பல்லவி பல்தேவ் தெரிவித்தார்.

    சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி, உதவி செயற்பொறியாளர் (மதுரை) வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×