search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சுவிரட்டில் 500 காளைகள் பங்கேற்பு; 19 பேர் காயம்
    X

    மஞ்சுவிரட்டு நடந்தபோது எடுத்த படம்.

    மஞ்சுவிரட்டில் 500 காளைகள் பங்கேற்பு; 19 பேர் காயம்

    • திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் பங்கேற்றன.
    • இந்த போட்டியில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குமாரபேட்டை கிராமத்தில் அழகிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழாவையொட்டி 5 ஊர் நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 69-வது ஆண்டாக பாரம்பரிய மஞ்சு விரட்டு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்றது.

    இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 16 காளைகள் நிராகரிக்கப் பட்டு 274 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 50 மாடுபிடி வீரர்கள் 2 குழுவாக காளைகளை பிடித்தனர். முன்னதாக வயல்வெளிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகியநாச்சி அம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×