என் மலர்
சிவகங்கை
சிவகங்கையைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அந்த பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
அந்த பெண்ணிடம் விசாரித்ததில், அவர் சிவகங்கையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தபோது அந்த கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜ் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் அதனால் அவர் கர்ப்பமானதும் தெரிய வந்தது.
இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் சிவகுரு துரைராஜை கைது செய்தனர். அவர் சிவகங்கை மாவட்ட பா.ஜனதாவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி தாளாளர் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் கடந்த 2018-ம் ஆண்டு சிவகங்கையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கல்லூரி தாளாளர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.
இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். இதனால் அவர்கள் எனது படிப்பை நிறுத்திவிட்டு திருமண ஏற்பாடுகளை செய்தனர்.
இந்த நிலையில் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு சான்றிதழ் தேவைப்பட்டதால் அதனை பெறுவதற்காக கல்லூரிக்கு சென்றேன்.
அப்போது கல்லூரி தாளாளர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.
அதைத்தொடர்ந்து எனது உடல்நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சை பெறலாம் என மருத்துவரிடம் சென்றபோது நான் 3 1/2 மாத கர்ப்பிணி என தெரியவந்தது. இதையடுத்து எனது கணவர் வீட்டார் என்னை, எனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.
பின்னர் என்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமானதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே கருக்கலைப்பு செய்யலாம் என மருத்துவமனையை அணுகியபோது டாக்டர்கள் மறுத்து விட்டனர்.
எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.
மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாகியுள்ள பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் கருவின் டி.என்.ஏ. பரிசோதனையை எடுக்கவும் சிவகங்கை அரசு மருத்துவர் கல்லூரி டீனுக்கு அறிவுறுத்தினார்.
திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் சமுதாய சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, குனிச்சி சமுதாய சுகாதார கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தன.
அப்போது, மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த நோயாளிகள் அலறியடித்து வெளியேறினர். சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட புதிய கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தர்மபுரி மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.
சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தாசில்தார் அனந்தகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் பேச்சுவார்த்ததை நடத்தினர். புதிய கட்டிட காண்டிராக்டர் மூலம் சேதம் சீரமைக்கப்படும் என உத்திரவாதம் அளித்தனர்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு காரணமாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 47 பேர் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டத்தில் 7 பெண்களுக்கும், 5 ஆண்களுக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் 12 பேருக்கும் சிறப்பு வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது வைரஸ் காய்ச்சலால் பாதித்த மற்ற 35 பேருக்கும் டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு தனி வார்டில் சுழற்சி முறையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 75 பேருக்கும் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
எஸ்.புதூர் அருகே உள்ள புழுதிபட்டி, பிரான்பட்டி, கணபதிபட்டி, நாகமங்கலம் பகுதிகளில் காந்தி பிறந்த தின விழாவையொட்டி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை பா.ஜனதா ஒன்றிய தலைவர் தேவேந்திரன் தலைமையில் நடைபெற்றது. காந்தியின் பிறந்த நாளை வருகிற 30-ந் தேதி வரை சிறப்பாக கொண்டாட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
அதன்படி நாடு முழுவதும் காந்தியின் பிறந்த நாளை அரசின் சார்பிலும் பல்வேறு அரசியில் கட்சியினரும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தியும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
அதைத்தொடர்ந்து சமூக விழிப்புணர்வு பாதயாத்திரையை புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புழுதிபட்டி வில்லி விநாயகர் கோவில் பகுதியில் தொடங்கிய பாதயாத்திரை முக்கிய வீதிகள் வழியாக வந்து பிரான்பட்டி சாலை இணைப்பில் முடிவடைந்தது. இதில் தூய்மையை பேணுவோம், மரங்களை நடுவோம், நீர் ஆதாரம் காப்போம், பெண்கள் நலம் காப்போம், இயற்கை வேளாண்மையை மேம்படுத்துவோம், கதர் ஆடை அணிவோம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மதுவை ஒழிப்போம், சமூக ஒற்றுமையை வளர்த்திடுவோம், சுதேசி பொருட்களை ஆதரிப்போம் போன்ற நோக்கங்களை வலியுறுத்தி சமூக விழிப்புணர்வு பாதயாத்திரை நடைபெற்றது.
இதில் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி மாணவ-மாணவிகள், பா.ஜனதா மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் நாகராஜன், மாவட்ட விவசாய அணி தலைவர் சின்னையா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி அருகே ஆபத்தாரணப்பட்டி ஊராட்சியில் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் கட்சியின் ஆண்டு விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. விழா இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆபத்தாரணப்பட்டி பிரபு தலைமையில் நடைபெற்றது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு வடமாடு மஞ்சுவிரட்டு தொடங்கியது. இதில் 16 மாடுபிடி வீரர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன. மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் ஒரு சில மாடுகள் பிடிபட்டன. பல மாடுகள் பிடிபடாமல் சென்று, உரிமையாளருக்கு பரிசுகளை வாங்கி தந்தன.
மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆவின் தலைவர் அசோகன், அவை தலைவர் நாகராஜன், ஓட்டுனர் அணி செயலாளர் சிவாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கோபி, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் வாசு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் திருவாசகம், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி ராஜசேகரன், முன்னாள் சிங்கம்புணரி பேரூராட்சி சேர்மன் லட்சுமிபிரியா ஜெயந்தன் மற்றும் காளாப்பூர் சசிகுமார் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் திவ்யா பிரபு நன்றி கூறினார். வடமாடு மஞ்சுவிரட்டு விழா ஏற்பாடுகளை மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும், ஏரியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவருமான ஆபத்தாரணப்பட்டி பிரபு மற்றும் திவ்யா பிரபு செய்திருந்தனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்லாயி (வயது 62).
இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் உள்ள மாட்டுக் கொட்டகையில் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். விஷம் குடித்து செல்லாயி தற்கொலை செய்திருப்பதாக கமுதி போலீசுக்கு தெரியாமல் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மகள் வயிற்று பேரன் பாண்டி (20) தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், தனது மாமாவும், செல்லாயி மகனுமான சோனைமுத்து (29) மீது சந்தேகம் உள்ளதாகவும், அவர் தாயை கொலை செய்திருக்கலாம் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சோனைமுத்துவை போலீசார் பிடித்தனர். கூடுதல் சூப்பிரண்டு மங்களேசுவரன், தேவகோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை ஆகியோர், சோனைமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் புதைக்கப்பட்ட செல்லாயி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்த ஆறுமுகம் சாவிலும் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அவரையும் சோனை முத்து தான் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினர் 5 கட்ட அகழாய்வு பணிகளை நடத்தி முடித்துள்ளனர்.
இந்த ஆய்வில் 2600 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பு, இரும்பு பொருட்கள், சுடுமண் சிற்பம், அணிகலன் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் பழந்தமிழர்களின் வாழ்வியலை அறியும் வகையில் கால்வாய், இரட்டை சுவர், உறை கிணறு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை நடத்தப்பட்ட அகழாய்வின் மூலம் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே 6-ம் கட்ட அகழாய்வு பணி விரிவாக நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அகழாய்வு நடந்து முடிந்த சில மீட்டர் தூரத்தில் தென்னை மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டது.
அப்போது அங்கு மனிதர்கள் பதுங்கும் வகையில் கல்திட்டை அமைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. ஆதிமனிதர்கள் மழை, வெயில் காலங்களில் இருந்து தங்களை பாதுகாக்க பூமிக்கடியில் பாறைகளின் மறைவில் கல் திட்டை அமைத்து தங்கி இருந்திருந்தார்கள்.
அதன்படி கீழடியில் வாழ்ந்த ஆதிதமிழர்கள் இரவு மற்றும் மழை, வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க இந்த கல்திட்டை அமைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக நில உரிமையாளர் கதிரேசன் தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். கல் திட்டையை பார்வையிட்ட அதிகாரிகள் 6-ம் கட்ட அகழாய்வு தொடங்கும். இதுதொடர்பாக விரிவாக ஆய்வு நடத்தப்படும் என தெரிவித்தனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே உள்ள பூங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சாத்தையா. இவரது மனைவி தில்லையம்மாள் (வயது 60). இவர்களது மகன் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் கண் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட சாத்தையா ஓசூரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று விட்டார்.
தில்லையம்மாள் மட்டும் வீட்டில் தனியே இருந்தார். இதை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் நேற்று நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.
தில்லையம்மாள் சத்தம் போடவே, கொள்ளையர்கள் ஆத்திரமடைந்து அவரை வெட்டிக் கொன்றனர். பின்னர் அவர் அணிந்திருந்த கம்மல், தங்கச்சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் ஆள் நடமாட்டம் இல்லாததால் அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது தான் தில்லையம்மாளை கொலை செய்து மர்ம மனிதர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற விவரம் தெரியவந்தது.
சம்பவம் குறித்து ஆராவயல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தில்லையம்மாள் கொலை குறித்து ஓசூரில் உள்ள சாத்தையாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த பின்னர் தான் கொள்ளை போன நகை- பணத்தின் மதிப்பு தெரிய வரும்.
சிவகங்கை:
சிவகங்கை சாத்தப்பர் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 35). ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த சில மாதங்களாக அரவிந்த் சரியாக வேலைக்கு செல்லவில்லை. மேலும் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையில் நவராத்திரி விழாவையொட்டி காளீஸ்வரி அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இரவில் அவர் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வீட்டின் அறையில் அரவிந்தன் உடல் முழுவதும் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து காளீஸ்வரி கூக் குரலிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அரவிந்த் குடும்ப பிரச்சினையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர்.
4 கட்ட பணி முடிந்த நிலையில் கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த ஆய்வின் போது அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பம், இரும்பு-செப்பு பொருட்கள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன.
அதே போல் பழந்தமிழர் வாழ்வியலை அறியும் வகையில் இரட்டை வட்டச்சுவர், தண்ணீர் தொட்டி, உறைகிணறு, கால்வாய் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன.
கீழடியில் கிடைத்த பொருட்களின் காலம், தன்மை குறித்து அறிய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்படி பழமையான பொருட்களை ஆய்வு செய்ததில் அவை 2,600 ஆண்டுகள் பழமையானது எனவும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையான அல்லது அதற்கு முந்தைய நாகரிகம் கொண்டதாக கீழடி நாகரிகம் விளங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அகழாய்வு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட 110 ஏக்கரில் வெறும் 10 ஏக்கரில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக தகவல் கிடைத்த நிலையில் எஞ்சியுள்ள பகுதிகளையும் ஆய்வு நடத்தினால் தமிழர்களின் முதன்மையான வாழ்க்கை முறை, அவர்கள் வாழ்ந்த காலம் குறித்த தகவல்கள் வெளிவரலாம். எனவே 6-வது கட்ட அகழாய்வு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
கீழடியில் பழந்தமிழர்கள் வாழ்ந்திருப்பது அந்தப்பகுதி மக்களிடையே பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அகழாய்வு மேற்கொள்வதற்காக கீழடியை சேர்ந்த நீதியம்மாள், மாரியம்மாள் சகோதரிகள் தங்களுடைய 22 ஏக்கர் நிலத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இது பற்றி அவர்கள் கூறுகையில், அகழாய்வு செய்வதற்காக எங்களது 22 ஏக்கர் நிலத்தை கொடுத்துள்ளோம். அவற்றில் முழுமையாக ஆய்வு செய்தால் இன்னும் பொருட்கள் கிடைக்கும். பழந்தமிழர்கள் எங்கள் பகுதியில் வாழ்ந்திருப்பதை நினைத்தால் பெருமையாக உள்ளது. இதன் மூலம் எங்கள் ஊர் உலகத்திற்கே தெரிய வந்துள்ளது என்றனர்.
இதே போல் கருப்பையா என்பவரது மனைவி சேதுராமுவும், தனது 2½ ஏக்கர் நிலத்தை அகழாய்வு பணிக்காக கொடுத்துள்ளார்.






