search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார மேற்கூரை
    X
    இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார மேற்கூரை

    திருப்பத்தூரில் திறந்த 2 மாதத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிட மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது

    திருப்பத்தூர் அருகே திறந்த 2 மாதத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே குனிச்சி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.25 லட்சம் செலவில் சமுதாய சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இந்த புதிய கட்டிடத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. அப்போது, குனிச்சி சமுதாய சுகாதார கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமென்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்தன.

    அப்போது, மருத்துவ பரிசோதனைக்காக காத்திருந்த நோயாளிகள் அலறியடித்து வெளியேறினர். சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட புதிய கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சுகள் திடீரென பெயர்ந்து விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் தர்மபுரி மெயின் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்.

    சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க கோரி கோ‌ஷம் எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தாசில்தார் அனந்தகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் பேச்சுவார்த்ததை நடத்தினர். புதிய கட்டிட காண்டிராக்டர் மூலம் சேதம் சீரமைக்கப்படும் என உத்திரவாதம் அளித்தனர்.

    ஒரு மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×