என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    கல்லூரி தாளாளர் பலாத்காரத்தால் கர்ப்பம் - 13 வார கருவை கலைக்க பெண்ணுக்கு அனுமதி

    கல்லூரி தாளாளர் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண்ணின் 13 வார கருவை கலைக்க மதுரை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கையைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது. சில நாட்களிலேயே அந்த பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அந்த பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவர் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

    அந்த பெண்ணிடம் விசாரித்ததில், அவர் சிவகங்கையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்தபோது அந்த கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜ் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் அதனால் அவர் கர்ப்பமானதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் சிவகுரு துரைராஜை கைது செய்தனர். அவர் சிவகங்கை மாவட்ட பா.ஜனதாவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக உள்ளார்.

    இந்த நிலையில் கல்லூரி தாளாளர் பலாத்காரத்தால் கர்ப்பமான பெண் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த 2018-ம் ஆண்டு சிவகங்கையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது கல்லூரி தாளாளர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.

    இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். இதனால் அவர்கள் எனது படிப்பை நிறுத்திவிட்டு திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

    இந்த நிலையில் அரசின் உதவித்தொகை பெறுவதற்கு சான்றிதழ் தேவைப்பட்டதால் அதனை பெறுவதற்காக கல்லூரிக்கு சென்றேன்.

    அப்போது கல்லூரி தாளாளர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து எனது உடல்நிலை சரியில்லாமல் போனது. சிகிச்சை பெறலாம் என மருத்துவரிடம் சென்றபோது நான் 3 1/2 மாத கர்ப்பிணி என தெரியவந்தது. இதையடுத்து எனது கணவர் வீட்டார் என்னை, எனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

    பின்னர் என்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் மீது சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமானதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே கருக்கலைப்பு செய்யலாம் என மருத்துவமனையை அணுகியபோது டாக்டர்கள் மறுத்து விட்டனர்.

    எனவே எனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமாகியுள்ள பெண்ணின் கருவை கலைக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    மேலும் கருவின் டி.என்.ஏ. பரிசோதனையை எடுக்கவும் சிவகங்கை அரசு மருத்துவர் கல்லூரி டீனுக்கு அறிவுறுத்தினார்.

    Next Story
    ×