என் மலர்tooltip icon

    சிவகங்கை

    திருப்பத்தூர் அருகே மதம்மாறி திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டையை சேர்ந்தவர் முருகன் மகன் கவியரசு (வயது 24), ஹோமியோபதி டாக்டர். இவர் திண்டுக்கல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது ஆஸ்பத்திரிக்கு திண்டுக்கல்லை சேர்ந்த கபிர் மகள் ஜன்னத்துல் ஷாகிரா (வயது 21), இவர் கதிரவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக காதலித்துவந்தனர்.

    பின்னர் கவியரசு மதம் மாறி ஜன்னத்துல் ஷாகிராவை திருமணம் செய்து கொண்டார். மகன் மதம்மாறி திருமணம் செய்து கொண்டதிற்கு கதிரவனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நேற்றிரவு ஜன்னத்துல் ஷாகிரா, தனது கணவருடன் திருப்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்தார்.

    இதையடுத்து போலீசார் கதிரவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.
    சிவகங்கை:

    விவசாயிகளுக்கு உரங்களை தேவையான அளவு இருப்பு வைத்து அதை வினியோகம் செய்வது குறித்த ஆய்வுக்கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-

    மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அங்குள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதையொட்டி மாவட்டத்தில் தற்போது 52 ஆயிரம் எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வேளையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு வைத்து அதை அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்வதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    தற்போது மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 652 டன் யூரியாவும், தனியார் உரக்கடைகளில் 658 டன் யூரியாவும் கையிருப்பில் உள்ளது. இது தவிர இந்த மாதத்திற்கு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1100 டன் யூரியா உரம் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளது.

    இந்த உரத்தை அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைத்து அப்பகுதி விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 2ஆயிரம் டன் அளவு உரம் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உர வினியோகத்தை தினசரி கண்காணிப்பு மேற்கொண்டு அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மண்டல கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார், வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) மோகன்தாஸ்சவுமியன், வேளாண்மை அலுவலர்கள் கருணாநிதி மற்றும் பரமேஸ்வரன், டான்பெட் மண்டல மேலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூர் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரமற்ற கழிவறை இருப்பதை கண்டித்து போராட்டம் அறிவித்ததால் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் உள்ள கழிவறைக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. கழிவறைக்கு செல்லும் மாணவிகள் தொற்று வியாதிகளால் அவதியடைந்து வருகின்றனர்.

    இதனால் கழிவறை பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது.

    பள்ளி கழிவறையை சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு மாணவிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    இதனால் பள்ளியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவிகள் காலை பள்ளிக்கு வரவில்லை .

    ஆனால் அறிவித்தபடி விடுதலை சிறுத்தைகள்கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் கட்சியினர் பள்ளி முன்பு திரண்டனர்.

    திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    காரைக்குடி அருகே தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பஸ் டயரில் சிக்கி கணவன் கண்முன்பு மனைவி உயிரிழந்தார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 35). இவரது மனைவி ரேவதி (30). 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இன்று காலை வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு புறப்பட்டனர்.

    காரைக்குடியில் உள்ள ரெயில்வே ஜி.ஹெச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டார். அவர் முன் ரேவதி பஸ் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த தகவலறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து காரைக்குடி சூடாமணி புரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஜேம்ஸ் (49) என்பவரை கைது செய்தார்.
    மானாமதுரை அருகே அரசு பஸ் மோதி அண்ணன்-தம்பி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மானாமதுரை:

    மானாமதுரை அருகேயுள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி (47). முருகன் (46), சகோதரர்களான இவர்கள் இருவரும் மொபட்டில் மானாமதுரைக்கு புறப்பட்டனர்.

    மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை எல்லையில் நகருக்குள் செல்லும் சாலையில் செல்ல முயன்றனர்.

    அப்போது ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் மொபட்டில் பயணம் செய்த சகோதரர்களான மூர்த்தியும், முருகனும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    விபத்து காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 4–வதுநாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    சிவகங்கை:

    அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி.ஏ.சி.பியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    கிராமபுறங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு பட்ட மேல்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 25–ந்தேதி முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்து வருகின்றனர். அவர்கள் அவசர பிரிவு நோயாளிகளுக்கு பாதிப்பில்லாத நிலையில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

     4–வது நாளான நேற்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் தார்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வின்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நிலையில் போர் வெல்லில் விழுந்த குழந்தைகளை மீட்க போதுமான கருவிகள் இல்லாதது அவமானம் என்று கருணாஸ் எம்எல்ஏ கூறியுள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருனாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வீரத்திற்கு தலைவணங்குகிறேன். ஆழ்துளைக்குள் சிக்கி தவிக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசை குறை சொல்ல முடியாது.

    மீட்புப் பணி

    வின்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நிலையில் போர் வெல்லில் விழுந்த குழந்தைகளை மீட்க போதுமான கருவிகள் இல்லை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்குமான அவமானம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிவகங்கை மாவட்ட கிராமங்களில் இளைஞர் விளையாட்டு திட்டத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுண் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டதின்படி, அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் டவுண் பஞ்சாயத்துகளில் இருபாலருக்கும் தனி தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும்.

    ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் (அல்லது) பூப்பந்து (அல்லது) இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு மைதானம் அமைக்கப்படும். மேலும், இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

    அதன்படி போட்டியில் கலந்து கொள்ள 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதி உடையவர். போட்டியில் கபடி அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், வாலிபால் அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும் (இருபாலரும்) கலந்து கொள்ளலாம்.

    எனவே, சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுண் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்கள் கபடி, வாலிபால் கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு அந்தந்த கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் டவுண் பஞ்சாயத்து செயலாளர்களிடம் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், விபரங்களுக்கு 7401703503 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஓய்வூதியர், சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    சிவகங்கை:

    எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில் சத்துணவு ஊழியர்களின் 35 ஆண்டுகால வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம், குடும்ப ஓய்வூதியம், உணவூட்டு செலவினம் உயர்வு, சத்துணவு மையம் இணைப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வலியுறுத்தப்பட்டது.

    மேலும் நவம்பர் மாதம் 10-ந் தேதி மாவட்ட தலைநகரில் நடைபெற இருக்கும் ஊர்வலம், நவம்பர் மாதம் 26-ந் தேதி நடைபெற இருக்கும் மாவட்ட அளவிலான மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கலாராணி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்தை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கையில் மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் பழைய பென்சன் திட்டத்தை தொடர வேண்டும். மின்வாரிய வைரவிழாவிற்கு மின் ஊழியர்களுக்கு 3 சதவீதம் ஊக்க தொகை வழங்கியது போன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் வழங்க வேண்டும். மின்வாரியத்தில் ஒப்பந்ததாரர்களாக பணியாற்றியவர்களுக்கு பணிக்காலத்தையும் சேர்த்து ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும்.

    மின்வாரியத்தில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட இணைச் செயலாளர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் செல்வராஜ், மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யூ. மாநில செயலாளர் உமாநாத், மாவட்ட செயலாளர் கருணாநிதி, பொருளாளர் முத்துகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் வருகிற 24ஆம் தேதி அரசு சார்பில் நினைவு தினமும், 27ஆம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர் சமாதியில் குருபூஜை விழாவும் நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

    எனவே, மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் இன்று முதல் வருகிற 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி பரிந்துரையின்பேரில், இந்த தடை உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார். 

    குருபூஜை விழா மற்றும் மரியாதை செலுத்துவதற்காக வரும் தலைவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற வேணடும். ஒவ்வொரு தலைவருக்கும் மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தொண்டர்கள் யாரும் ஜோதி ஓட்டம், பேனர்கள் மற்றும் கொடிகள் ஏந்தி வரக்கூடாது, ஆபத்து விளைவிக்கும் பொருட்களை கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
    கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி கொடுத்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து உதவித்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கி கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள் உள்ளிட்ட 195 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனுக்கொடுத்த 2 பேருக்கு உடனடி நடவடிக்கை எடுத்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார். மற்ற மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் காளிமுத்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன் உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்னகுளம் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் கிராமத்து இளைஞர்கள் ஒன்றாக இணைந்து மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகள் நட அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு மரக்கன்றுகளை நடுவதற்கு உதவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். இதே போல தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் சேவியர் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் செயல்படும் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிவகங்கை மாவட்ட எல்கையான நெற்குப்பையில் இருந்து இளையான்குடி, தாலுகாவாணி உள்ளிட்ட பகுதிகளில் 48 குடிநீர் நீரேற்று நிலையங்கள் உள்ளன.

    இந்த பகுதியில் 24 மணி நேரமும் திட்ட பணிகளை செயல்படுத்த சுமார் 159 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான எண்ணிக்கையில் சுமார் 81 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களுக்கும் மிக குறைவான ஊதியம் தரப்படுகிறது.

    எனவே இவர்களுக்கு குடிநீர் வாரிய நிர்ணயத்தின்படி ஒரு ஊழியருக்கு மாத சம்பளமாக ரூ.13 ஆயிரத்து 350 வழங்க வேண்டும் அத்துடன் தீபாவளி போனசாக ஒருமாத சம்பளம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    சிவகங்கை மாவட்டத்தில் இன்று காலையும் இடைவிடாது சாரல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
    சிவகங்கை:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் கன்னியாகுமரியையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மாலையில் ஒரு சில இடங்களில் கனமான முதல் மிதமான மழை பெய்தது. இரவு 12 மணி முதல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.

    5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    முக்கிய சாலைகளில் மழைநீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலையும் இடைவிடாது சாரல் மழை பெய்ததால் சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

    மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

    சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சிவகங்கை-5.9
    திருப்புவனம்-12.4
    தேவகோட்டை-33.2
    சிங்கம்புணரி-2.4.
    ×