search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போது எடுத்த படம்.
    X
    மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போது எடுத்த படம்.

    முதியோர் உதவித்தொகை கோரி கொடுத்த மனுக்களுக்கு உடனடி தீர்வு - கலெக்டர் நடவடிக்கை

    கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி கொடுத்த மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து உதவித்தொகை வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.
    சிவகங்கை:

    கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கி கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள் உள்ளிட்ட 195 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

    கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனுக்கொடுத்த 2 பேருக்கு உடனடி நடவடிக்கை எடுத்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார். மற்ற மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் காளிமுத்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன் உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பொன்னகுளம் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் கிராமத்து இளைஞர்கள் ஒன்றாக இணைந்து மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகள் நட அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு மரக்கன்றுகளை நடுவதற்கு உதவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். இதே போல தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் சேவியர் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் செயல்படும் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிவகங்கை மாவட்ட எல்கையான நெற்குப்பையில் இருந்து இளையான்குடி, தாலுகாவாணி உள்ளிட்ட பகுதிகளில் 48 குடிநீர் நீரேற்று நிலையங்கள் உள்ளன.

    இந்த பகுதியில் 24 மணி நேரமும் திட்ட பணிகளை செயல்படுத்த சுமார் 159 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான எண்ணிக்கையில் சுமார் 81 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களுக்கும் மிக குறைவான ஊதியம் தரப்படுகிறது.

    எனவே இவர்களுக்கு குடிநீர் வாரிய நிர்ணயத்தின்படி ஒரு ஊழியருக்கு மாத சம்பளமாக ரூ.13 ஆயிரத்து 350 வழங்க வேண்டும் அத்துடன் தீபாவளி போனசாக ஒருமாத சம்பளம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர். 
    Next Story
    ×