என் மலர்
சிவகங்கை
- அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
- மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் ஆகியோர் பாராட்டினர்.
தேவகோட்டை
மதுரை என்.எம்.எஸ். மற்றும் கே.எஸ்.பி. கணேசன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நடந்தது. இதில் புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 6,7,8 வகுப்பு பிரிவில் ''அறிவொளி தந்த காமராஜர்'' தலைப்பில் 7-ம் வகுப்பு மாணவிகள் கலா ஸ்ரீ, தியா, 8-ம் வகுப்பு மாணவிகள் அக்சயா, தீபிகா, ''தன் நலம் கருதாத காமராஜர்'' என்ற தலைப்பில் 9-ம் வகுப்பு மாணவர்கள் பால் தினகரன், முகிதா, ஆரோக்கிய டெல்பின், கார்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த மாணவ, மாணவிகளையும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜையும் தலைமையாசிரியர் நாகேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் ஆகியோர் பாராட்டினர்.
- சுந்தரபுரம் கடைவீதியில் எரியாத மின்விளக்குகளை பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும்.
- மானாமதுரை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சியாக இருந்து இந்த ஆண்டில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்தபட்டதில் இருந்து மாதத்தில் 3 நாட்கள் குடிநீர் சப்ளை செய்யப்படாமல் உள்ளது. மேலும் தெரு விளக்குகள் பல எரியாமல் உள்ளன.
நகரின் முக்கிய கடைவீதியான சுந்தரபுரம் கடைவீதியில் உள்ள தேவர் சிலை ரவுண்டாணா பகுதியில் உள்ள உயர் மின்கோபுர விளக்கு பல நாட்கள் எரியாமல் உள்ளது. வைகை ஆற்று பாலம் முதல் சிவகங்கை ரோடுவரை தெருவிளக்குகளும் எரியாததால் இரவு நேரத்தில் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மக்கள் அதிகமாக வந்து செல்லும் முக்கிய கடைவீதிகளில் விளக்குகள் எரியாமல் உள்ளதால் அவகைளை பழுது நீக்கி ஒளிரச் செய்ய வேண்டும். நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடுயின்றி கிடைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மானாமதுரை பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறை திறக்கப்பட்டது.
- பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பழைய கட்டண கழிவறையை ரூ.3.75 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதை பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகராட்சிஆணையாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.
நகராட்சி உதவி பொறியாளர் சீமா, கவுன்சிலர்கள் சோனா கண்ணன், முகமதுசித்திக், பிலோமினா, அஞ்சலிதேவி, பூமிநாதன், முன்னாள் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் பாண்டி, பாலாஜி கண்ணன், சுகாதார ஆய்வாளர் சுந்தர், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆட்டோ தொழிலாளி குடும்பத்துக்கு நலவாரிய நிதி உதவி வழங்கப்பட்டது.
- அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊரணியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார். இவர் சி.ஐ.டி.யு. உறுப்பினர் ஆவார். அவர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு நலவாரிய நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
இதுபற்றி ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, சிவகங்கை மாவட்டத்தில் 4 ஆயிரம் ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை. அனைத்து தொழிலாளர்களும் நலவாரியத்தில் பதிவு செய்து நலவாரிய உதவிகளை பெற வேண்டும் என்றார்.
- காரைக்குடி தொகுதியில் பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள் மாங்குடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
- மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.51.75 லட்சம் மதிப்பீட்டில் காரைக்குடி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளுக்கு மேஜைகள்,நாற்காலிகள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார்.
சாக்கோட்டை ஒன்றியம் சாக்கவயல் உயர்நிலைப் பள்ளி,சாக்கோட்டை சிறுகப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, காரைக்குடிகழனிவாசல் நகர்மன்ற நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி வ.உ.சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி நகராட்சி ராமநாதன் செட்டியார் தொடக்கப் பள்ளிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலும்,காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை ப்பள்ளி, ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, முத்துப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு தலா ரூ. 9.75 லட்சம் மதிப்பிலும் டெஸ்க்,பெஞ்சுகளை வழங்கினார்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின்போது காந்திபுரம் முதலாவது வீதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சகுந்தலாவிற்கு தனது சொந்த நிதியில் இருந்து வீல்சேரும் வழங்கினார்.
இதில் நகர்மன்ற உறுப்பினர் மெய்யர்,காங்கிரஸ் நகர தலைவர் பாண்டி,நகர செயலாளர் குமரேசன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ்,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரவீன்,நகர வர்த்தக காங் தலைவர் ஜெயப்பிரகாஷ், தொகுதி இளைஞரணி பொதுச்செயலாளர் பாலா,மாநில இளைஞர் காங் பொதுசெயலாளர் அருணா,தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் மணி மற்றும் தலைமை
ஆசிரியர்கள் ஆசிரியர்கள்,மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் யோகா தின விழா கொண்டாடப்பட்டது.
- முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளியின் தாளாளர் சத்தியன் தலைமை தாங்கினார்.நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன், முன்னாள் துணை ஆணையர் கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் பள்ளியின் கல்வி இயக்குனர் டாக்டர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
காரைக்குடி என்.சி.சி பட்டாலியன் கர்னல் ரஜினீஷ் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கொண்டார்.அவர் பேசுகையில், யோகாவின் சிறப்புகளை பற்றியும்,யோகாவால் உடல் ஆரோக்கியத்தை பராமரித்தல் பற்றியும்,மனநிலையை சீராக்கி பராமரித்தல் பற்றியும் எடுத்துக்கூறினார்.
மாணவர்கள் அனைத்து விதமான யோகாசனஙகளையும் செய்தனர். குறிப்பாக 7-ம் வகுப்பு மாணவன் மாநில அளவிலான யோகா சாம்பியன் யஷ்வந்த் செய்த யோகாசனங்கள் வியப்பில் ஆழ்த்தியது.முதல்வர் ராணி போஜன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- தேவகோட்டையில் மின் கம்பியில் தொங்கும் கல் சாலையில் செல்வோரின் மீது விழும் அபாயம் உள்ளது.
- மின்சாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் மின்சார கம்பிகள் தொய்வு ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க மின்சார துறையினர் கம்பியில் கல்லை கட்டி தொங்கவிட்டு உள்ளனர். இந்தச் சாலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் நடந்து மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர்.
கோட்டாட்சியர், ஆணையாளர், மின்சாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் இந்த சாலையில் உள்ள மின் கம்பியில் கல் தொங்கி கொண்டு இருப்பதால் அது எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்வோரின் தலையை பதம் பார்க்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் முருகன் கூறிகையில், மின்சாரத் துறை அதிகாரிகளிடம் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
இதே போல் தாழ்வான மின் கம்பிகள் அதிக இடங்களில் செல்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மின்சார துறை அதிகாரிகள் அலட்சியத்தால் உயிர் பலிகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளோம் என்றார்.
- காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.
- மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
காரைக்குடி
காரைக்குடி மின் கோட்டத்திற்கு உட்பட்ட காரைக்குடி, கானாடுகாத்தான், கல்லல், சாக்கவயல், தேவகோட்டை துணை மின் நிலையங்களில் நாளை(24-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை உயரழுத்த மின் பாதையில் உள்ள மாற்றப்பட வேண்டிய நிலையில் உள்ள மின்கம்பங்கள் மாற்றும் பணிக்காக மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.
அதன்படி காரைக்குடி துணை மின் நிலையத்தில், அண்ணாநகர் பீடரில் ஜீவா நகர், போலீஸ் காலனி, செக்காலை, சுப்பிரமணியபுரம் தெற்கு, புதிய பஸ் நிலையம், அழகப்பாபுரம், எச்.டி.சி. பீடரில் ஆறுமுகநகர், மன்னர் நகர், திலகர் நகர், பாரிநகர், தந்தை பெரியார் நகர், சிக்ரி. கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் கானாடுகாத்தான், சூரக்குடி, திருவேலங்குடி, ஆத்தங்குடி, பலவான்குடி, உ.சிறுவயல், ஆவுடைப் பொய்கை, நெற்புகப்பட்டி, நேமத்தான்பட்டி.
கல்லல் துணை மின் நிலையத்தில் சாத்தரசம்பட்டி பீடரில் கல்லல், கீழப்பூங்குடி, அரண்மனை சிறுவயல், சாத்தரசம்பட்டி, வெற்றியூர், ஆலம்பட்டு, குருந்தம்பட்டு, சாக்கவயல் துணை மின் நிலையத்தில் வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க்கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி செங்கரை. மித்ராவயல் பீடரில் சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், மாத்தூர், இலுப்பக்குடி, லட்சுமி நகர், பொன்நகர். தேவகோட்டை துணை மின் நிலையத்தில், வேப்பங்குளம் பீடரில் - உடப்பன்பட்டி, கோட்டூர், மாவிடுதிகொட்டை, திருமணவயல் மேலமுன்னி, வேலாயுத பட்டினம். கண்ணங்குடி பீடரில் கண்ணங்குடி, ராம்நகர், இறகுசேரி, பைக்குடி, அகதிகள் முகாம், நடராஜபுரம், அனுமந்தகுடி ஆகிய கிராமங்களில் மின் வினியோகம் தடைசெய்யப்படும்.
இத்தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மானாமதுரை மற்றும் பொட்டப்பாளையம் பகுதிக்கு உட்பட்ட பகுதிகள், தெ.புதுக்கோட்டை, இடைக்காட்டூர் ஆகிய 4 உயரழுத்த மின் பாதைகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் நாளை ராஜகம்பீரம், முத்தனேந்தல், இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, குறிச்சி, நல்லாண்டிபுரம், எஸ்.காரைக்குடி, சன்னதி புதுக்குளம், மேலப்பிடாவூர், குசவபட்டி, காஞ்சிரங்குளம் காலனி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. ஆனால் மானாமதுரை சிப்காட், கொன்னக்குளம், மனக்குளம், மானாமதுரை நகர் பகுதிகளில் மின்சாரம் இருக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
- சிவகங்கையில் யோகா தின பேரணி நடந்தது.
- பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கையில் மவுண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் சார்பில் சர்வதேச யோகாதின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பதாகைகள் ஏந்திய 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். சண்முகராஜா கலையரங்கம் முன்பாக தொடங்கி பேருந்து நிலைய பகுதிகள் வரை நடைபெற்ற பேரணியில் பள்ளியின் நன்மாணாக்கர் சான்று பெற்ற மாணவர்களின் பெற்றோர் ஆரோக்கியதேவி, சிவகலா, பௌமியா, சர்மிளா மற்றும் நகர்ப்பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஆதிலிங்க போஸ் தலை மையில் ஜெயபாலன், ராஜ்குமார், முத்தையா, ஆனந்தகுமார் ஆகியோர் தகுந்த பாதுகாப்பு வழங்கி பேரணியினை சிறப்பாக நடத்தினர்.
பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் தியாகராசன், அனிதா, சுரேஷ்கண்ணன், அகிலாண்டேசுவரி, பாண்டியராஜன், சந்திரலேகா, முத்துப்பாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.
- சிவகங்கையில் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
- வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 21 பள்ளி மாணவர்கள் விடுதிகளும், 14 பள்ளி மாணவியர்கள் விடுதிகளும், 5 கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளும், 5 தொழிற் பயிற்சி கல்லூரி மாணவியர்கள் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.
பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவியர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, தொழிற் பயிற்சி கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்பயிற்சி மாணவ, மாணவியர்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படு த்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் விகிதாசாரா அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலாரின் ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்துக்கு மிகாமலும், இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீட்டர் தொலைவிற்கு மேலும் இருக்க வேண்டும். இந்த தொலைவு விதி மாணவிகளுக்கு பொருந்தாது.
விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பா ளாரிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்தும், மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்திலோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளி மாணவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவர்கள் வருகிற 31-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
விடுதிகளில் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியாக 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்படும் நிலையில் எக்காலத்திலும் நிபந்தனை இல்லாமல் படிப்பு முடியும் வரை விடுதியில் தங்கிப்பயில அனுமதிக்கப்படுவார்கள் .
விடுதி மாணாக்கர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடைகளும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்களும், மலைப்பிரதேசத்தில் இயங்கும் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ ர்களுக்கு கம்பளி, மேலாடையும் வழங்கப்படும்.
எனவே, மாணவ, மாணவிகள் அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு கல்வி பயில வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனைவியை பார்க்க சென்ற புதுமாப்பிள்ளை அரசு பஸ் மோதி பலியானார்.
- இவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர்.
சிவகங்கை
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜுக்குட்டி. இவர் மதுரையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவருக்கும் சிவகங்கை மாவட்டம் சுந்தரநடப்பு அருகே உள்ள மனக்கரையை சேர்ந்த கலைச்செல்விக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்தபின் பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை பார்க்க மதுரையில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் ராஜுக்குட்டி சிவகங்கை நோக்கி சென்றார்.
அவர் நல்லாகுளம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் பூவந்தி போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமணமாகி 3 மாதமே ஆன நிலையில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சிவகங்கை பகுதியில் பொதுமக்கள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிவகங்கை அருகே பழமையான கல்வெட்டு-முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டது.
- இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது.
சிவகங்கை
சிவகங்கையை அடுத்த சித்தலூர் பகுதியில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், கல் வட்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு சிவகங்கையை சேர்ந்த புத்தகக்கடை முருகன் சித்தலூர் பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட தொல் எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தொல் நடைக்குழு நிறுவனர் கா.காளிராசா கூறியதாவது:-
சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் சித்தலூர் விலக்கில் இருந்து செல்லும் பிரிவு சாலையில் இடப்பக்கம் இரண்டு அம்மன் கோவில்கள் காணப்படுகின்றன. கோவிலை ஒட்டி குவியலாகக் கிடக்கும் கற்குவியலில் ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டு இரு பகுதியிலும் வெட்டி சிதைக்க பெற்றிருக்கிறது.
இந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் 13-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என தெரிகிறது. மடையை ஒட்டிய பகுதியில் கல்லாலான அரைத்தூண் ஒன்று மக்களால் முருகனாக வணங்கப்படுகிறது. சிவன் கோவில் ஒன்று இருந்து அழிந்து இருக்கலாம். இக்கல்வெட்டு அருகிலுள்ள கோவானூரில் பழமையான சிவன் கோவிலில் இருந்து இப்பகுதிக்கு வந்திருக்கலாம்.
இதுதவிர முத்தலூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் 2000 ஆண்டுகள் பழமையான 15-க்கும் மேற்பட்ட தாழிகள் காணக்கிடைக்கின்றன. முத்தலூரில் முதுமக்கள் தாழிகள், கல்வட்ட எச்சங்கள் உள்ள இடம் இன்றும் இறந்தவர்களை புதைக்கும் இடுகாட்டுப் பகுதியாகவே மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முத்தலூரை ஒட்டிய நாடகமேடை பகுதியில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்தூண் காணப்படுகிறது.
இதில் கல், மோட்சம் போன்ற சொற்கள் இடம் பெற்றிருப்பதால் இது நினைவுக்கல் என்பதும், மோட்சம் கருதி தர்மம் செய்த செய்தி எழுதப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது.
மேலும் இவ்விடத்திற்கு அருகில் வேம்பத்தூர் காரருக்கு பழமையான கட்டுமான நினைவிடம் ஒன்று இருப்பதாக இவ்வூரை சேர்ந்த ஆசிரியர் ரவிச்சந்திரன் கள ஆய்வில் தெரிவித்தார். இதன் அருகிலேயே எல்லைக்கல் ஒன்றும் காணப்படுகிறது. இதில் வட்டவடிவிலான சக்கரம் போன்ற அமைப்பும், அதில் 4 ஆரங்களும் உள்ளன.






