என் மலர்
சேலம்
- தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 124,80 உயரம் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு வினாடிக்கு 8787 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 96.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 526 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 269 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 78.50 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1542 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளுக்கும் வினாடிக்கு 20ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 876 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர்மட்டம் 39.70 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் தற்போது 11.93 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
சேலம்:
கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
மாநிலம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர் அணை, கபினி அணை, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 369 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இதே போல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 77 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 560 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் விரைவில் அந்த அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று தமிழக எல்லையான பிலிக்குண்டுவுக்கு வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலையும் அதே அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நேற்று மதியம் முதல் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து காணப்பட்டது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 39.74 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1038 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 11.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிபடியாக சரிந்து வருகிறது.
- நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சேலம்:
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில் மோதல் இருந்து வருகிறது. கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிபடியாக சரிந்து வருகிறது.
இதனால் வழக்கமாக நடப்பாண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடகு மாவட்டத்தை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த அணை மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 12,867 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று 92.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 94.40 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது.
இந்த அணையில் இருந்து 507 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் கேரள மாநிலம் வயநாட்டை நீர்ப்பிடிப்பு பகுதியாக கொண்டுள்ள மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 9,179 கன அடியாக உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் 84 அடியாகும். இன்று காலை அணையில் இருந்து வினாடிக்கு 1,250 கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் மேகதாது வழியாக கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு வருகிறது. இன்று காலை பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 1500 கன அடியாக உள்ளது. இந்த நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
நேற்று 1000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1500 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் விடுமுறை நாளான இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 43 கன அடியில் இருந்து 227 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக உள்ளதால் 8 மணி அளவில் அணை நீர்மட்டம் 39.75 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 11.96 டி.எம்.சி.யாக உள்ளது.
- ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
- ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
- மது விற்பனை சரிவுக்கான காரணத்தை கடை மேற்பார்வையாளர்கள் விவரித்தனர்.
- தற்போதைய சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பல்க் சேல்ஸ் செய்ய வேண்டாம்.
சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் கஜல் நாயக்கம்பட்டியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா, டாஸ்மாக் கடைகளில் 20 சதவீதம் மது விற்பனை சரிந்துள்ளதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.
மது விற்பனை சரிவுக்கான காரணத்தை கடை மேற்பார்வையாளர்கள் விவரித்தனர்.
மேலும், கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிந்தும் தெரிவிக்காமல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பல்க் சேல்ஸ் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.
டாஸ்மாக் கடை திறக்கும் நேரம், மூடும் நேரம் குறித்து கடை மேற்பார்வையாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
- காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
- அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் தெரிவிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் சேலம் கெஜ்ஜல்நாயக்கன் பட்டியில் நடைபெற்றது.
முதுநிலை மண்டல மேலாளர் நர்மதாதேவி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் அதிகாரிகள், கடை மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா பேசுகையில், `ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் தற்போது 20 சதவீதம் அளவிற்கு விற்பனை சரிந்துள்ளது, இதற்கு கள்ளச்சாராய விற்பனை தான் காரணமா என்று கடை மேற்பார்வையாளர்களிடம் கேட்டார்.
அப்போது சில அதிகாரிகள் மழையின் காரணமாக விற்பனை குறைந்தாகவும், இன்னும் சிலர் இந்த பகுதிகளில் உள்ளவர்கள் மற்ற பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டார்கள் அதனால் மது விற்பனை குறைந்து விட்டதாகவும் கூறினர்.
தொடர்ந்து பேசிய நர்மதா தேவி , டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதிகள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா மற்றும் இதர போதை பொருட்கள் சப்ளை செய்யும் நபர்கள் குறித்தும் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மேலும் மதுபான சில்லறை விற்பனை கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் காலை 12 மணிமுதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
அனுமதியின்றி மதுக்கூடம் செயல்படுவது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அனைத்து மதுக்கூடங்களுக்கும் உணவு பாதுகாப்பு தரச்சான்றிதழ் கட்டாயம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட மேலாளர் தனஞ்செயன் மற்றும் கலால் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
- 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர்.
சேலம்:
சேலத்தை அடுத்த வலசையூரை சேர்ந்தவர் சபரி சங்கர் (35) . இவர் சேலம், தருமபுரி, நாமக்கல் , ஆத்தூர், திருச்சி உள்பட 11 இடங்களில் எஸ்.வி.எஸ். நகை கடை என்ற பெயரில் நகை கடைகளை நடத்தி வந்தார். இதில் கவர்ச்சி கரமான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் முதலீடு பெற்றார்.
பின்னர் சில மாதங்களுக்கு முன்பு கடையை பூட்டி விட்டு சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு தலைமறை வாகிவிட்டார் .
இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வந்த நிலையில் அவரை புதுச்சேரியில் வைத்து தருமபுரி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோவை சிறையில் வைத்து சபரிசங்கரை கைது செய்தனர். பின்னர் கடந்த 24-ந் தேதி சபரிசங்கரிடம் விசாரணை நடத்த 4 நாட்கள் காவலில் எடுத்தனர்.
தொடர்ந்து சேலம் அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, ஆத்தூர், தாரமங்கலம் உள்பட 5 இடங்களில் உள்ள எஸ்.வி.எஸ். நகைகடைகளை திறந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் நேற்று சோதனையிட்டனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வருவாய்துறையினருடன் இணைந்து கடைகளை திறந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சபரி சங்கரை அந்த கடைகளுக்கு அழைத்து வந்து கடையில் பொருட்களை கணக்கெடுத்தனர். அதில் தங்க நகைகள் பெரிய அளவில் இல்லை என்று கூறப்படுகிறது. 70 கிலோவிற்கு மேல் வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளிக்கட்டிகள் அங்கு இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்ததாகவும் போலீசார் கூறி உள்ளனர்.
தொடர்ந்து சபரி சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, நகை கடைகளில் வேலை செய்த மேலாளர்கள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அவர்களுக்கு கார்களை வாங்கி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் கடைகளில் இருந்த நகைகளை அள்ளி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளின் மேலாளர்களை பிடித்தால் மேலும் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
- ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசிப்பார்கள்.
- தொடர் மழை, பனிபொழிவு, குளிர்ந்த காற்றால் ஏற்காட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்கள் மற்றும் அரசு தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் இருக்கும்.
ஏற்காட்டிற்கு சுற்றுலா வரும் பயணிகள் இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து அண்ணாபூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்களை ரசித்து செல்வார்கள். மேலும் ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து இயற்கை அழகை ரசிப்பார்கள்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் இறுதியில் கோடை விழா மலர்கண்காட்சி நடந்தது. அப்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் இந்த மாதம் 4-ந் தேதிவரை மலர்க ண்காட்சி நீட்டிக்கப்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் பக்ரீத் தொடர் விடுமுறை நாளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. மேலும் தினமும் மாலை நேரங்களில் மழை பெய்வதால் இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு பகுதிகளில் மாலை நேரத்தில் மக்கள் நடமாட்ட மின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. காலை 9 மணிவரை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு அடர்த்தியான பனி மூட்டம் நிலவியது. இதனால் பகலில் நேரங்களிலேயே வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி வந்து சென்றனர். இதே போல் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளிலும் இன்று பனிமூட்டம் அதிகளவில் இருந்தது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. தொடர் மழை, பனிபொழிவு, குளிர்ந்த காற்றால் ஏற்காட்டில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து சென்று வருகிறார்கள்.
- அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டி முனியப்பன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (27). இவர் சேலம் கல்லாங்குத்து பகுதியில் நேற்று இரவு ஒரு சூப் கடைக்கு தகர சீட்டு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தகர சீட்டை எடுத்தபோது மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் தகர சீட்பட்டு மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அங்கு இருந்தவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான வாலிபர் தினேசுக்கு திருமணம் ஆகி சந்தியா (25) என்ற மனைவியும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
மனைவி சந்தியா கையெழுத்து போட்டால் தான் தினேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். இதற்காக தினேஷ் உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தனது கணவர் உடலை வாங்க மறுத்து சந்தியா மற்றும் அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு திரண்டு அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்து அரசு நர்சிங் கல்லூரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி பஸ் ஆகியவை வெளியே செல்வதற்காக புறப்பட்டு வந்தது. அப்போது நுழைவு வாயில் வரை வந்த பஸ்கள் நுழைவு வாயில் முன்பு மக்கள் அமர்ந்து போராட்டம் செய்ததால் பஸ்கள் செல்ல முடியவில்லை. இதனால் நுழைவு வாயில் முன்பு கல்லூரி பஸ்கள் நிறுத்தப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் சேலம் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா தலைமையிலான போலீசார் அங்கு வந்து சந்தியா மற்றும் அவரது உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அனைவரும் தர்ணா போராட்டத்தை கைவிடுமாறும், உங்களது கோரிக்கைகள் குறித்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அப்போது சந்தியா கண்ணீர் மல்க கூறுகையில், எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது கணவர் இறந்து விட்டதால் வருமானத்திற்கு வேறு வழியில்லை. எனவே இழப்பீடாக ரூ.30 லட்சம் சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர் வழங்க வேண்டும். அப்போது தான் எனது கணவர் உடலை வாங்குவேன் என்றார்.
இதனால் அவரிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
- சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சேலம்:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 48 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏற்கனவே 17 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கருணாபுரம் மதன் (46) என்பவர் இன்று அதிகாலை 3.30-மணிக்கு இறந்துவிட்டார்.
இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தொடர்ந்து 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), கருணாபுரம் ரவி (44), சங்கராபுரம் மனோஜ்குமார் (21), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), நாகலூர் சண்முகம், கள்ளக்குறிச்சி கோட்டைமேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), கோட்டைமேடு பார்த்திபன் (27), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணி வண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிவண்ணன், (60), கார்த்திக்கேயன் (36) , விளான்தாங்கல் ரோடு நசீர் (53), முடியலூர் சாமிதுரை, சங்கராபுரம் சாமுண்டி (70), மாரிமுத்து (55) ஆகிய 30 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
- ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும்.
ஏற்காடு:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் படி சேலம் மாவட்டத்திலும் போலீசார் பல்வேறு இடங்களில் சாராயம் விற்க்கப்படுகிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அமல அட்மின் தலைமையில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஏற்காடு மலை பகுதிகளில் உள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
ஏற்காடு வனப்பகுதிகளில் உள்ள 70 கிராமங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
ஏற்காடு போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து ஒவ்வொரு கிராமங்களிலும் சந்தேகப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் பழைய சாராய வியாபாரிகளின் வீடுகளில் தீவிர சோதனை நடத்தினர்.

மேலும் ஆத்துஓடைகள், வனப்பகுதிகளிலும் சாராயம் காய்ச்சப்படுகிறதா? என்று போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். விடிய, விடிய போலீசார் மலை கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் கூறும் போது, சட்டத்துக்கு புறம்பாக யாராவது சாராயம் காய்ச்சி விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மலை கிராமங்களில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை ஊர்தலைவர்கள் கண்டறிந்து ஏற்காடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
இது குறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் கூறும் போது. ஏற்காடு மலை கிராமங்களில் சாராய சோதனை தொடரும். சட்டத்துக்கு புறம்பாக யாராவது மது மற்றும் சாராயம் காய்ச்சினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து உள்ளார்.
- அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது.
சேலம்:
கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை 100-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். அதில் பலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல், வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்டோரை உறவினர்கள் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவர்களில் 47 பேர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டனர்.
இதில் நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சி மாதவசேரியை சேர்ந்த நாராயணசாமி (65), வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த ராமு (50), கருணாபுரத்தை சேர்ந்த சுப்ரமணி (60) ஆகியோர் இறந்தனர். நேற்று கோட்டமேட்டை சேர்ந்த ஆனந்தன் (50), துர்க்கம் ரோடு பகுதியை சேர்ந்த ரவி (60), கருணாபுரம் விஜயன் ( 59), பி. ராஜேந்திரன் (55), சேஷ சமுத்திரத்தை சேர்ந்த எஸ்.ராஜேந்திரன், மற்றொரு ஆனந்தன் (55), கோட்ட மேட்டை சேர்ந்த மனோஜ்குமார் (33), கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (65), கருணாபுரத்தை சேர்ந்த நாகபிள்ளை (39) ஆகிய 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மேலும் இன்று அதிகாலை கோட்டைமேடு பாலு (50), மற்றொரு ராஜேந்திரன் (60), மாதவன் சேரியை சேர்ந்த வீரமுத்து (33) ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் சாவு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
இதில் 10 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பபட்டது. அவர்களது உடல்கள் சொந்த ஊரில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. மற்றவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு முன்பும், பிணவறை முன்பும் உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
மேலும் கண்ணபுரம் சிவா (30), கருமாபுரம் அருண் (38), கிருஷ்ணமூர்த்தி (55), கருணாபுரம் பெரியசாமி (65), கள்ளக்குறிச்சி மாதவசேரி சந்திரசேகரன் (27), கள்ளக்குறிச்சி திருவாங்கூர் கலியன் (64), கள்ளக்குறிச்சி ஏமப்பேர் செல்வராஜ் (37), கள்ளக்குறிச்சி முத்து (55), கருணாபுரம் கணேசன் (59), கருணாபுரம் சுரேஷ் (47 ), கருணாபுரம் சரசு (52), சங்கராபுரம் நரசிம்மன் (21), சின்னசேலம் கருப்பன் (62), கள்ளக்குறிச்சி கோட்டை மேடு ஜான்பாஷா (52), கள்ளக்குறிச்சி அன்பு (50), பார்த்திபன் (27), கருணாபுரம் மதன் (46), கருணாபுரம் பாஸ்கர் (51), கள்ளக்குறிச்சி மணிவண்ணன் (48), கருணாபுரம் விஜயகுமார் (42), ரஞ்சித்குமார் (37 ), மணிகண்டன் (60), கார்த்திக்கேயன் (36) உள்பட 32 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 47 பேரில் 15 பேர் உயிரிழந்து விட்டனர். மீதமுள்ள 32 பேருக்கு டாக்டர்கள் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனால் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் பிணவறை முன்பும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.






