என் மலர்tooltip icon

    சேலம்

    • பலமுறை நான் அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி இருக்கின்றேன்.
    • தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி ஆலச்சம்பாளையம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் எடப்பாடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.72.85 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த புதிய வகுப்பறை கட்டிடங்களை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது:-

    நான் முதல் முதலாக 1989-ல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டபோது இந்த பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தது. இதனால் நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனால் அன்று முதல் இன்று வரை உங்களோடு, உங்கள் குடும்பத்தில் ஒருவராக நான் இருந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கூட சுமார் 1809 வாக்குகள் 4 பூத்களில் கூடுதலாக தந்து இருக்கிறீர்கள். ஆகவே இப்போதும் ஆலச்சம்பாளையம் என்றால் அ.தி.மு.க.வுடைய கோட்டை என்பதை பல தேர்தல்களில் நிருபித்து காட்டியிருக்கிறீர்கள்.

    ஆகவே தான் நீங்கள் எப்போதும் ஆலச்சம்பாளையம் அழைத்தால் ஓடோடி வந்து சந்திக்கிறேன். இந்த ஆலச்சம்பாளையத்தில் என்னுடைய பாதம் படாத இடமே கிடையாது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் எனக்கு தெரியும். என்னால் முடிந்த நன்மைகளை இந்த பகுதிக்கு செய்து கொடுத்துள்ளேன். நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதும் சரி, அமைச்சராக இருந்தபோதும் சரி, உங்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் சரி எடப்பாடி தொகுதியில் பல்வேறு நன்மைகள் செய்து கொடுத்துள்ளேன்.


    ஆனால் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்ததாலும் போதை பொருள் விற்பனை. இளைஞர்கள், மாணவர்கள் இந்த போதை பொருளுக்கு அடிமையாகி கஞ்சா பயன்படுத்துவது அதிகமாகி இன்றைக்கு கெட்டுபோகின்ற சூழ்நிலையில் அவர்களுடைய வாழக்கையை சீரழிந்து போகின்ற நிலையை இந்த ஆட்சியில் தான் பார்க்க முடிகிறது. பலமுறை நான் அரசாங்கத்திடம் எடுத்து சொல்லி இருக்கின்றேன். சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றேன். ஆனால் இந்த அரசால் இதை தடுக்க முடியாமல் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கிடைக்கின்றது.

    தமிழகத்தல் எவ்வளோ பிரச்சனை இருக்கிறது. அதையொல்லாம் சரி செய்ய இந்த அரசாங்கத்திற்கு மனமில்லை.

    நீங்கள் எத்தனை கார் பேர் வைத்து இருக்கிறீர்கள். கார் பந்தயம் தமிழ்நாடுக்கு தேவையா? பந்தயத்திற்காக ஏற்கனவே அம்மா இருக்கின்றபோது இருங்காட்டுகோட்டையில் பிரமாண்டமாக கார் பந்தயம் நடத்துவதற்கு ஒரு மைதானம் அமைத்து கொடுத்து இருக்கிறோம். அங்கு கார் பந்தயம் நடத்தலாம். அதைவிட்டு விட்டு ஏழை, எளிய மக்கள் வரி பணத்தில் சுமார் 42 கோடி ரூபாய் செலவில் இன்று மாநகரத்தில் மைய பகுதியில் மருத்துவமனை, ரெயில் நிலையம், தலைமை செயலகம் இருக்கின்ற இடத்தின் அருகில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் கார் பந்தயம் நடத்த வேண்டுமா?. இது அவசியமா? சிந்தித்து பாருங்கள். எப்படியெல்லாம் மக்களுடைய வரிபணம் வீணடிக்கப்படுகிறது. மக்களுக்கு அடிப்படை தேவைகள் நிறைய இருக்கிறது அதற்கு இந்த பணத்தை செலவிடலாம். அதை விடுத்து விட்டு கார் பந்தயம் நடத்துவதற்கு தி.மு.க. அரசின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதை விளையாட்டாக செய்து கொண்டிருக்கிறார். இது வேதனை அளிக்கின்றது.

    மக்களுடைய பணம் மக்களுக்கு சென்றடைய வேண்டும். அதுதான் ஒரு நிர்வாக திறமையுள்ள அரசாங்கத்திற்கு எடுத்துக்காட்டு.

    தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது. விசைத்தறிதொழில் நலிவடைந்து விட்டது. இந்த விசைத்தறி தொழிலுக்கு தேவையான நிதி ஒதுக்கி மீண்டும் அந்த தொழில் சீரடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் அரிசி விலையும் உயர்ந்து விட்டது. ஒரு கிலோ அரிசி ரூ.80-க்கு விற்கப்படுகிறது. இப்படி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. இதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இதில் கூடைப்பந்து போட்டியில் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.
    • அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

    இதனை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது.
    • கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து.

    சேலம்:

    கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. மேலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் உபரிநீர் அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரும் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.

    இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீரும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 5258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 6548 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை அது வினாடிக்கு 20 ஆயிரத்து 505 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியது. தற்போது அணையின் நீர்மட்டம் 119.65 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • நீர்வரத்து குறைந்ததால் 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
    • டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக உபரிநீர் வரத்து அதிகரித்து மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டியது. இதையடுத்த உபரி நீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் 16 கண் பாலம் வழியாக உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. தற்போது அணைக்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 5 ஆயிரத்து 258 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 6 ஆயிரத்து 548 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் வெளியேற்றப்பட்டுவருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.24 அடியாக குறைந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக கொண்டுவந்தபோ பெண்ணை மடக்கிப் பிடித்தனர்.

    சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை மாஸ்க் அணிந்த பெண் நேற்று கடத்திச் சென்றார்.

    குழந்தையை கடத்திச் சென்ற பெண், சேலம் வாழப்பாடி அருகே உள்ள காரிப்பட்டியை சேர்ந்த வினோதினி என தெரியவந்தது.

    இந்நிலையில், கடத்தப்பட்ட குழந்தை மீட்கப்பட்டுள்ளன. குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    பல வருடங்களாக குழந்தை இல்லாததால் மருத்துவமனையில் இருந்து குழந்தையை திருடி சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அரசு மருத்துவமனைக்கு குழந்தையை சிகிச்சைக்காக வினோதினி கொண்டு வந்தபோது, காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

    • தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.
    • சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் மேற்கு கிராமம் வேங்கிபாளையம் சென்னாயக்கன்காடு பகுதி சேர்ந்த நெசவு தொழிலாளி பழனிசாமி அவரது மனைவி அனிதா தம்பதியின் மகன் கவின் (வயது 21).

    இவர் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துவிட்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கவினுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவின் மூளைச்சாவு அடைந்தார்.

    அதனையடுத்து பெற்றோர் தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட கவின் உடலானது சென்னாயக்கன்காடு பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சங்ககிரி தாசில்தார் வாசுகி தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டு கவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    அப்போது மோரூர் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலாமோகன்ராஜ், வருவாய் ஆய்வாளர் மலர்விழி, கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    • வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.
    • கடவுள் போன்று வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம்.

    மேட்டூர்:

    சேலத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 22 நாட்கள் நடைபெறும் ஆடித்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கோட்டை மாரியம்மன் கோவிலை மையமாக வைத்து அதனை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடித்திருவிழா களைகட்டும்.

    ஆடி பண்டிகையின் போது பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்துவர். இதன் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் பக்தர்கள் கடவுள் போன்று வேடமிட்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவது வழக்கம்.

    அந்த வகையில் சேலம் குகை மாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று வண்டி வேடிக்கை கோலாகலமாக நடைபெற்றது.

    இதில் மேச்சேரி சந்தைப்பேட்டையில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று இரவு அக்னி கரகம், அலகு குத்துதல், பொய்க்கால் குதிரை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

    இதையடுத்து வண்டிவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இக்கோவிலில் பெண்கள் மட்டுமே அம்மன் வேடம் அணிந்து வலம் வரும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

    பிரமாண்ட வண்டியில் மின்னொளி ஜொலித்தபடி பெண்கள் கடவுள்களைப் போல் வேடம் அணிந்து வண்டிகளில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அகிலாண்டேஸ்வரி, உலகநாயகி, காமாட்சி, காலபைரவி, சத்திய சொரூபி, சரஸ்வதி தேவி, ஞானரூப தேவி, தாட்சாயணி தேவி, துர்க்கை, பகவதி, பார்வதி தேவி, மீனாட்சி, பத்ரகாளியம்மன், வேப்பிலைக்காரி, உமா தேவி, காயத்ரி தேவி, பெரிய நாயகி உள்ளிட்ட பல்வேறு அம்மன் சாமிகள் வேடம் அணிந்து அசத்தினர்.

    இப்பெண்கள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதுபோல் காட்சி தந்தனர். இது கடவுள் விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்து ஆசி வழங்குவது போல் இருந்தது. இதிகாசங்களை நினைவுபடுத்தும் வகையில் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

    வண்டியின் முன்பு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொய்க்கால் குதிரை நாட்டியம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். பொய்க்கால் குதிரை நாட்டியம் காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.

    இவ்விழாவில் ஓமலூரான் தெரு, கோல்காரனூர், அழகா கவுண்டனூர் உள்ளிட்ட 12 பட்டி கிராம மக்கள் பங்கேற்றனர். 

    • மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மழை காரணமாக ஏற்காட்டில் கடும் குளிரும் நிலவியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் இந்த மழை கனமழையாக கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் ஏற்காட்டில் பெய்த திடீர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் நேற்றிரவு முதல் தண்ணீர் கொட்டுகிறது. இதில் ஏற்காடு செல்லும் பயணிகள் அந்த அருவிகளில் குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மழையை தொடர்ந்து ஏற்காட்டில் இன்று காலையும் கடும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான சூழலை ஆனந்தமாக அனுபவித்து ரசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே ஏற்காட்டில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல்வேறு கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் தூங்க முடியாமல் விடிய, விடிய கொசுக்கடியால் தவித்தனர். தொடர் மழை காரணமாக ஏற்காட்டில் இன்று காலை குளிர்ந்த காற்றும், கடும் குளிரும் நிலவியது.

    இதே போல சேலம் புறநகர் பகுதிகளான ஆனைமடுவு, நத்தக்கரை, ஓமலூர், எடப்பாடி உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாநகரில் நேற்றிரவு 9 மணி முதல் லேசான சாரல் மழை பெய்தது. அதனை தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் தூங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 76.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 9.6, ஆனைமடுவு 12, ஆத்தூர் 5, கரியகோவில் 4, வீரகனூர் 5, நத்தக்கரை 19, சங்ககிரி 2.4, எடப்பாடி 2.6, மேட்டூர் 2.4, ஓமலூர் 5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 143.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    • பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 6 ஆயிரத்து 367 கனஅடியாக குறைந்து காணப்படுகிறது.

    சேலம்:

    கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக கிருஷ்ண ராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதையடுத்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் அதிகபட்சமாக 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையும் கடந்த 30-ந் தேதி 120 அடியை எட்டியது. இதையடுத்து உபரிநீர் அப்படியே 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 124.48 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 806 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 7752 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் கபினி அணையின் நீர்மட்டம் 83.46 கனஅடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 346 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 12 ஆயிரத்து 752 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்தது. நேற்று முன்தினம் 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று அது 6 ஆயிரத்து 367 கனஅடியாக குறைந்துக் காணப்படுகிறது. மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த 28-ந் தேதி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் 21 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக் கப்பட்டு அது 10 ஆயிரம் கனஅடியாக மீண்டும் குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 8 நாட்களாக 120 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119.54 அடியாக குறைந்தது.

    • ஆடிப்பண்டிகையை யொட்டி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
    • கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா 22 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.



    அதன்படி இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 24-ந் தேதி கொடியேற்றுதல், 30-ந் தேதி கம்பம் நடுதல் மற்றும் திருக்கல்யாணம் சக்தி அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    திருவிழாவையொட்டி கோவில் வளாகம், கோவில் கோபுரங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவம், உருளுதண்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கியது. இதையொட்டி சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று காலை முதலே கோவிலில் திரண்டனர்.


    பின்னர் நேற்று முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய கோவில் சுற்றுப்பிரகாரத்தில் பொங்கல் வைத்தும், நேர்த்திக்கடனாக உருளு தண்டம் செலுத்தியும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    பொங்கல் நிகழ்ச்சி நாளை வரை நடைபெறுகிறது. இதையொட்டி இன்றும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரண்டு பொங்கலிட்டு வருகிறார்கள. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற உருளு தண்டம் செய்தும், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தும் , அலகு குத்தியும் தங்களது நேர்ச்சை கடன்களை செலுத்தி வருகிறார்கள்.


    8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு ஆடித்திருவிழாவில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற்றதால் குடும்பத்துடன் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு உருளுதண்டம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகிறார்கள்.

    மேலும் நேற்றும், இன்று காலையும் தங்ககவசத்தில் அருள் பாலித்த அம்மனை ஏராளமான பக்ததர்கள் திரண்டு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலை சுற்றி எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. பக்தர்கள் சார்பில் பல்வேறு இடங்களில் கூழ், பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 10-ந் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11-ந் இரவு 11.30 மணிக்கு சப்தாபரணம், 12-ந் தேதி மதியம் 1 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    ஆடித்திருவிழாவையொட்டி கோவிலில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவின்குமார் அபினபு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.


    இதேபோல சேலம் மாநகரம் முழுவதும் அம்மன் கோவில்களில் திருவிழா நடைபெறுவதால் சேலம் மாநகரமே மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும் ஆட்டம் பாட்டத்துடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ஆடிப்பண்டிகையை யொட்டி இன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதால் குடும்பத்துடன் பெரும்பாலனோர் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். 

    • தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது.

    சேலம்:

    கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியது. இதனால் உபரிநீர் வெளியேற்றப்பட்டு மேட்டூர் அணையும் கடந்த மாதம் 30-ந் தேதி 120 அடியை எட்டியது.

    கர்நாடக அணைகள் நிரம்பியதால் அதிகபட்சமாக உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் 2 லட்சம் கனஅடி வரை திறக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து அந்த தண்ணீர் உபரி நீராக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டது. கடந்த 30-ந் தேதி இரவு முதல் இன்று காலை 6 மணி வரை 16 கண் பாலம் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் அங்குள்ள அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்தது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 13 ஆயிரத்து 734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6665 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 124.18 அடியாக உள்ளது.

    இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 359 ஆகனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2729 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 83.46 அடியாக இருந்தது. இந்த 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 9394 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறப்பு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.

    மேட்டூர் அணைக்கு இன்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதன் காரணமாக 16 கண் பாலம் வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் இன்று காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. ஆனால் பவர் ஹவுஸ் வழியாக வினாடிக்கு தொடர்நது 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தீயணைப்பு வீரர்கள் கயிறு, தற்காப்பு சாதனம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றனர்.
    • தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நாய்கள் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை கடந்த 30-ந் தேதி அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மழை கால நீர் போக்கி வழியாக தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே 16 கண் மதகு அருகே காவிரி ஆற்றில் நடுவில் உள்ள மலை குன்றுகளில் 7 நாய்கள் சிக்கிக் கொண்டது. இந்த நாய்களை மீட்க அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவின் பேரில் ராட்சத டிரோன் மூலம் நாய்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று தாசில்தார் ரமேஷ் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நாய்களை மீட்க புதுப்பாலத்தில் இருந்து கயிறு கட்டி 3 தீயணைப்பு வீரர்கள் கயிறு, தற்காப்பு சாதனம் உள்ளிட்டவைகளை எடுத்து சென்றனர். இருப்பினும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயணைப்பு வீரர்கள் நாய்கள் இருக்கும் இடத்தை நெருங்க முடியவில்லை.

    இதனால் இன்று 2-ம் நாள் முயற்சி பலனளிக்காத நிலையில் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் திரும்ப வந்தனர். தொடர்ந்து 7 நாய்களையும் மீட்பதற்கு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் தண்ணீரின் வேகமாக அதிகமாக இருப்பதால் நாய்களை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டது.

    16 கண் நீர் போக்கியில் தண்ணீர் நிறுத்தினால் மட்டுமே நாய்களை மீட்க முடியும் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர். தண்ணீர் திறப்பு நிறுத்தும் வரை நாய்களுக்கு தேவையான உணவுகளை வழங்க வருவாய்த்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×