search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adi Thiruvizha"

    • நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள்
    • கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.

    அதன்படி நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம்25-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து நாள் தோறும் இரவு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் நேற்று தொடங்கியது. இதயைடுத்து நேற்று காலை முதலே கோவிலுக்கு வந்த பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்றிரவு முதல் விடிய விடிய ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டு வருகிறார்கள். இன்று காலையும் கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி கோவில் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அதன் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் குடும்பத்துடன் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்ததால் கோட்டை மாரியம்மன் கோவிலில் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் நீண்ட தூரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் கூழ் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் டவுன் போலீஸ் கமிஷனர் வெங்கடேஷ் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகி றார்கள். மேலும் கோவில் வளாகத்தை சுற்றி சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதன்படி சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், சேலம் சின்ன மாரியம்மன், தாதாகப்பட்டி மாரியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், பலபட்டரை மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், தாதம்பட்டி மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன் உள்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களிலும் நேற்று முதல் பக்தர்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், அக்னி மற்றும் பூக்கரகம் எடுத்தல், போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் முதுகில் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். சிலர் விமான அலகு குத்தி கோவிலுக்கு வந்தனர். இதனை பார்த்தபக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    ஆடிப்பண்டி கையையொட்டி சேலம் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப்பண்டிகையொட்டி சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அதிக அளவில் கூட்டம் அலை மோதியது. இதை யொட்டி கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    • நேற்று காலை குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
    • கோவிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகளுடன், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள அருணாபேரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவிலான மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவிலில் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டது.

    ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 3-வது புதன்கிழமை தொடங்கி 2 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 9 மணி அளவில் குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத்தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மாலையில் கீழப்பாவூரில் இருந்து குதிரை வாகனத்தில் சாஸ்தா அதாவது மண்ணால் செய்யப்பட்ட குதிரை மற்றும் சாஸ்தா வாகனம் பக்தர்களால் தோழில் சுமந்து ஊர்வலமாக அருணாபேரி கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூஜை நடை பெற்ற பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சாஸ்தா கோவிலை நோக்கி கொண்டு வரப்பட்டது.

    வழி நெடுகிலும் நின்று பக்தர்கள் சாஸ்தாவிற்கு மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் கோவிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் சிறப்பு பூஜைகளுடன் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழாவில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பொதுமக்களின் பாதுகாப்பு கருதி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வடக்கு வா செல்வி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கியது.
    • நேற்று காலை பொங்கல் இடுதலும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், கிராமிய கலை நிகழ்ச்சியும் நடந்தது.

    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர் திரிபுரசுந்தரி அம்மன், வடக்கு வா செல்வி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு திருவிளக்கு பூஜையும், மாகாப்பு பூஜையும் நடந்தது. 1-ந் தேதி காலை பால்குடம் எடுத்தலும், பின்னர் 12 மணிக்கு உச்சிகாலபூஜையும், 4 மணிக்கு தீர்த்தம் எடுத்து சாமி நகர்வலம் வந்தது. இரவு மோகன லட்சுமி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு மாவிளக்கு எடுத்தலும் ,சாம கொடை பூஜையும் நடந்தது. இரவு சப்ரபவனி வந்தது. நேற்று காலை பொங்கல் இடுதலும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. தொடகந்து அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றமும், 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மெலோடிஸ் இசை கச்சேரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆடி திருவிழா 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 12-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருந்திருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடக்கும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.

    இந்த ஆண்டு ஆடித்திருவிழா இன்று (4-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், பூ மாலைகள் இணைக்கபட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 8.45 மணிக்கு கருடன் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு விசேஷ பூஜைகளும் தீபாரதனைகளும் நடந்தன.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீதேவி-பூமிதேவி சமேத கள்ளழகர் என்கிற சுந்தரராச பெருமாளுக்கு பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் இன்று இரவு அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். நாளை மறுநாள் (6-தேதி) வழக்கம் போல் காலை நிகழ்ச்சியும் இரவு அனுமார் வாகனத்தில் புறப்பாடும், 7-ந் தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 8-ந்தேதி காலையில் 6.45 மணிக்கு மேல 7.15 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று தங்க பல்லக்கில் எழுந்தருளிகிறார். அன்று இரவு சேஷ வாகனத்திலும், 9-ந்தேதி இரவு யானை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    10-ந் தேதி இரவு புஷ்ப சப்பரமும், 11-ந் தேதி இரவு தங்ககுதிரை வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 4.35 மணிக்குள் தேரில் சுவாமி எழுந்தருளிகிறார். தொடர்ந்து 6 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    அன்று இரவு பூப்பல்லாக்கும், 13ம் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ராமேசுவரம் கோவிலில் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி திருக்கல்யாணம் இன்று மாலை நடக்கிறது.
    • கடந்த மாதம் 23-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் கடந்த மாதம் 23-ந் தேதி ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    17 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது காலை, மாலையில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை மாற்றுதல் நடைபெற்றது.

    ராமதீர்த்தம் பகுதியில் அமைந்துள்ள கோவிலுக்கு சொந்தமான மண்டகப்படியில் ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளி மாலை மாற்றி கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று (3-ந் தேதி) இரவு நடைபெறுகிறது.

    கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சுவாமி-அம்பாளுக்கு இரவு 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×