என் மலர்
சேலம்
- ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.
- மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
சேலம்:
சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 2,61,610 நோயாளிகள், குறித்த நேரத்தில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு பயன் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளர் குமரன் கூறுகையில், கடந்த ஆண்டு மட்டும் தர்மபுரி 38,413, ஈரோடு 57472, சேலம் 81,090, நாமக்கல் 36,203, கிருஷ்ணகிரி 48430 என மொத்தம் 2,61,610 நோயாளிகள் ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்து உள்ளனர். மேலும் சாலை விபத்துகளில் 48,371 பேரும், பிரசவத்திற்காக 88,121 பேரும் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
இதில் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்களை அழைத்து வரும்போது, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே 365 கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்பவர்களுக்கு, குறைந்தபட்சம் 13 நிமிடங் களில் சம்பவ இடத்திற்கு சென்று விடுவதாகவும் தெரிவித்தார்.
- பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்கின்றனர்.
- விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை பகுதி கிராமங்களில் மாட்டுப் பொங்கலன்று, விவசாயிகள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டுக் காளைகள், எருதுகள் மட்டுமின்றி, கறவை பசுக்கள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் குளிப்பாட்டி, வண்ணப் பொடித் துாவியும், வண்ண அச்சுகளை வைத்தும் விவசாயிகள் அழகுபடுத்துவதும், கொம்புகளை சீவி வண்ணம் தீட்டுவதோடு, கால்நடைகளுக்கு புதிய மூக்கணாங்கயிறு, கழுத்துமணி , கொம்பு கொப்புச் சலங்கை, கால் சலங்கை, தலைக்கயிறு, கழுத்துச் சங்கிலி, நெற்றிப்பட்டை ஆகிய அணிகலன்கள் மற்றும் பலுான், ரிப்பன் ஆகியவற்றை வாங்கி அணிவித்து அலங்கரிப்பதை ஊர்வலமாக அழைத்து செல்வதை பெருமையாக கருதுகின்றனர்.
இதனால், வாழப்பாடி அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், பேளூர், கருமந்துறை, தும்பல் வாரச்சந்தை களிலும், கிராமங்கள் வைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளிலும் கால்நடை அணிகலன்கள் விற்பனை அமோகமாக நடந்தது. பொங்கல் பண்டிகையின் போது விவசாயிகள், தங்களது குடும்பத்தினருக்கு புத்தாடை மற்றும் அணிகலன்கள் வாங்கித்தந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி அழகு பார்த்து அன்பை பகிர்ந்து மகிழ்வதோடு மட்டுமின்றி, விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் மாட்டு பொங்கலையொட்டி அணிகலன்களை பூட்டி அலங்கரித்து கொண்டாடினர்.
- வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
- முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு இளங்கலை வேளாண் பட்டம் படித்து வரும் மாணவர்கள், ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் தை திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இவ்விழாவில் வேளாண் உதவி இயக்குனர் சம்பத்குமார், வேளாண் அலுவலர்கள் ஜானகி, கௌதமன் மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் பொங்கல் வைத்தனர்.
சமத்துவ பொங்கல் விழாவில் ஆத்தூர் வட்டா
ரத்தில் கிராம தங்கள் பணி திட்டத்தில் பயிலும்
வாணவராயர் வேளாண்மை கல்லூரி, தனலட்சுமி ஸ்ரீனிவாசன், தந்தை ரோவர் மற்றும் முசிறி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய வேளாண் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
சேலம்:
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் 2-ம் நாளாக இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக ஏற்காட்டில் சேலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வந்திருந்தனர். அங்கு கடும் குளிர் நிலவிய நிலையிலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது.
ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மான் பூங்கா, ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, மீன் பண்ணை, படகு குழாம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ்சீட், லேடிஸ் சீட் உட்பட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
குருவம்பட்டி
குருவம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். பின்னர் அங்குள்ள குரங்குகள், கிளிகள், பாம்பு, மான்கள், மயில்கள் உட்பட அனைத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல்கள், சருக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர்.
மேட்டூர் அணை
இதே போல மேட்டூர் அணை பூங்காவுக்கும் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள பகுதிகளை பார்வையிட்ட பின் வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவுகளை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் காவேரி ஆற்றிலும் உற்சாகத்துடன் குளித்தனர். மேட்டூர் அணையின் அழகை அங்குள்ள கோபுரத்தின் மேல் நின்றும் பார்வை யிட்டனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த தால், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது.
- தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.
சேலம்:
அனைத்து கலெக்டர்களுக்கும் தனி பாதுகாப்பு அதிகாரி தலைமையில் போலீசார் நியமிக்க அரசுக்கும், டி.ஜி.பிக்கும் உளவுத்துறை பரிந்துரைத்தது. தமிழக முழுவதும் நடந்த கணக் கெடுப்பில் 17 கலெக்டர் களின் பாதுகாப்பு பணிக்கு பி.எஸ்.ஓ நியமிக்கப்படாதது தெரியவந்தது.
இதை அடுத்து காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விழுப்புரம் கலெக்டர்களுக்கு நேற்று முதல் எஸ்.ஐ தலைமையில் 5 முதல் 7 போலீசார் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் பல கலெக்டர்கள் ஆய்வு பணிக்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் சென்றனர். அதில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம் மாவட்ட பெண் கலெக்டர்களுக்கு கொலை மிரட்டல் இருந்தது.
இதேபோல் சேலம் கலெக்டர் கார்மேகம் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்ட வர்களால் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளதாக உளவு அமைப்புகள் அரசுக்கு அறிக்கை அளித்தனர். இதனால் கலெக்டரின் பாதுகாப்புக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
- கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
சேலம்:
சேலம் அரிசி பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மகன் விஜயராகவன் (வயது 29). டிரைவரான இவர், நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
கந்தம்பட்டி அருகே பட்டர்பிளை மேம்பாலத்தில் சென்றபோது விஜயராகவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த விஜயராகவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கொண்டலாம்பட்டி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஏற்காடு போலீஸ் நிலையத்தில், பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
- நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி மகேஸ்வரி, டி.எஸ்.பி தையல்நாயகி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காடு போலீஸ் நிலையத்தில், பொதுமக்களுடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ் மோகன் தலைமையில் போலீஸ் நிலையம் முன்பு வாழை தோரணம் கட்டி, பொங்கல் பானை வைத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி மகேஸ்வரி, டி.எஸ்.பி தையல்நாயகி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினர். இதில் ஏற்காடு, காவல் துணை ஆய்வாளர்கள் சபாபதி, பிரபு சந்திரன் மற்றும் போலீசார், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொலை சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்று அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 36). இவர் தாதகாப்பட்டி அடுத்த மூணாங்கரடு ரேஷன் கடை அருகில், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் சகானி என்பவரின் குருசரண் சகானி (32) என்பவர் கடந்த 1½ மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் குருசரண் சகானி மற்றும் நிறுவனத்தில் உடன் பணிபுரியும் அனில்(30), ராகேஷ்(32), அஜய்(29), ஆலோ (28) ஆகியோர் சேர்ந்து கொண்டு நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு மகா காளியம்மன் கோவில் அருகே உள்ள பகுதியில் மளிகைப் பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூணாங்கரடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா(25), கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (28) ஆகிய இருவரும், மோட்டார் சைக்கிள் செல்வதற்கு ரோட்டில் ஒதுங்கி, ஓரமாக போக சொல்லி ஆரன் அடித்து சத்தம் எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் நகர்ந்து செல்லாமல் தொடர்ந்து நடந்து சென்றதாக தெரிகிறது.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு, வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டர். அப்போது மோதல் முற்றி ஆத்திரமடைந்த ராஜா, சீனிவாசன் இருவரும், தங்களது கையால் குருசரண் கன்னத்தில் மாறிமாறி சரமாரியாக அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் தலையில் படுகாயமடைந்த அவர் அருகிலிருந்த பழைய சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டார்.
இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் குருசரணை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் முத்துகுமார் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் ராஜா, சீனிவாசன் ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்று அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள்.
- அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.
சேலம்:
சேலம் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று மாட்டு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
அமைப்பு செயலாளர் பொன்னையன், மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, சித்ரா பாலசுப்பிரமணியன், ஜெயசங்கர், நல்லத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நானும் ஒரு விவசாயி. விவசாயி பெருமக்களோடு இந்த மாட்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இன்றைக்கு வேளாண் பெருமக்கள் தான் நாட்டுக்கு உணவளிக்கின்றனர். விவசாய பணி என்பது கடுமையான பணி. நாட்டு மக்கள் வளம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்து வருகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் எங்ககெல்லம் குளம், குட்டைகள் உள்ளதோ அங்கெல்லாம் தூர்வாரி குடிமாரமத்து பணி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினோம்.
விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்தது அம்மாவுடைய அரசு தான். 2 முறை தள்ளுபடி செய்தோம். பல தடுப்பணைகள், பல பாலங்கள் கட்டி கொடுத்தோம். விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியமாக வழங்கப்பட்டது.
சேலம், கள்ளக்குறிச்சி, அரியலூர், விழுப்புரம், தருமபுரி மாவட்டங்களில் மக்கா சோளம் பயிரில் அமெரிக்கன் படை பழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயிகள் கேட்காமலே ரூ.150 கோடி நிவாரணம் நான் வழங்கினேன். மேலும் ரூ.48 கோடி வழங்கி எங்கெல்லாம் மக்காச்சோளம் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதோ அங்கு அரசாங்கமே பூச்சிக்கொல்லி மருந்து அடித்து விவசாயிகளை காப்பாற்றிய அரசாங்கம் அம்மா அரசாங்கம்.
ஆனால் தி.மு.க. அரசு, மரவள்ளி கிழங்கு பயிரில் மாவு பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உதவவில்லை. விவசாயிகளை பாதுகாக்க தி.மு.க. அரசு தவறி விட்டது.
ஏழை, எளிய மக்கள் அதிகம் பேர் தான் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள். கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு எப்படி கொடுத்தார்கள் என உங்களுக்கு தெரியும். ஒழுகிற வெல்லம் என அப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பை தான் தி.மு.க. ஆட்சியில் கொடுத்தார்கள்.
அம்மா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக இருந்தபோது, நான் ஒரு விவசாயி என்ற காரணத்தினாலே தை பொங்கல் பண்டிகையை கிராமபுறங்கள் மகிழ்ச்சியோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2500 ரூபாய் பொங்கல் தொகுப்போடு வாரி வழங்கினேன். பச்சரிசி, ஏலக்காய், முந்திரி, முழுகரும்பு என பொங்கல் தொகுப்போடு கொடுத்தேன்.
ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொடுக்க மறுத்தார்கள். ஆங்காங்கே விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். நானு அறிக்கை விட்டேன். தி.மு.க.வுடைய கவனத்துக் கொண்டு சென்ற பிறகு தான் இந்த ஆண்டு உங்களுக்கு முழு செங்கரும்பு கிடைக்க பெற்றது. இல்லையென்றால் பொங்கலுக்கு உங்களுக்கு செங்கரும்பு கிடைத்திருக்காது. ஆகவே விவசாயிகளை புறக்கணிக்கின்ற அரசு தி.மு.க.,
ஆகவே போராடி, போராடி தான் மக்களுக்கு நன்மை பெற வேண்டும். அப்படிபட்ட ஆட்சி தான் மு.க. ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற திராவிட மாடல் ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் என்ன? நன்மை பெற்றார்கள். சிந்தித்து பாருங்கள். எந்த நன்மையும் கிடையாது. திராவிட மாடல் ஆட்சி விளம்பரத்துக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து கொண்டிருக்கிறார்கள்.
வீட்டுக்கு பயன்படுத்துகின்ற மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். 18 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தி விட்டார்கள். கடை, வீடுகளுக்கு வரி, குடிநீர் வரி ஆகியவற்றையும் உயர்த்தி விட்டார்கள். உயர்த்தாத வரி கிடையாது. இவ்வளவு வரியை உயர்த்தியும், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அம்மா அரசு இருந்தபோது கிராமத்தில் கால்நடை வளர்ப்பு முகாம் நடத்தினோம். கோமாரி நோய் பாதிக்கப்படுகின்ற இடங்களுக்கு நேரில் சென்று தடுப்பு மருந்து வழங்கி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும். ஆனால் இந்த அரசு செய்ய தவறிவிட்டது.
கிராமபுற மாணவர்கள் பயன் பெறும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுககு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி அ.தி.மு.க. அரசு சாதனை படைத்தது, மு.க.ஸ்டாலினும், அவரது மகனும் தமிழகத்தை கூறு போட்டு ஆட்சி நடத்தி வருகிறார்கள். பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இந்த அரசை வீட்டிற்கு அனுப்ப எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் சபதம் ஏற்போம்.
எம்.ஜி.ஆர் பிறந்த நாள் நாம் அனைவருக்கும் பொன்னாள், எம்.ஜி.ஆர். பிறந்ததும் வரலாறு, அவர் மறைந்ததும் வரலாறு, அத்தகைய வரலாற்றை யாரும் படைக்கவில்லை. அண்ணாவின் புகழை பரப்பியவர் எம்.ஜி.ஆர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அதே போல அ.தி.மு.க.வுக்கு வழி பிறந்து விட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
- கடந்த சில வாரங்களாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 110.19 அடியாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த தண்ணீர், அணையில் இருந்து தொடர்ந்து 137 நாட்களுக்கு திறந்து விடப்படும். இதன்படி, கடந்த ஜூலை 16-ந் தேதி கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
கால்வாய் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு மேலும் 15 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நேற்று 15-ந் தேதி மாலை 6 மணியுடன் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனிடையே கடந்த சில வாரங்களாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1018 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 110.19 அடியாக உள்ளது.
- அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை.
- சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.
சேலம் :
சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநகராட்சியில் குப்பை உற்பத்தியாகும் இடத்திலேயே மக்கும் குப்பை மக்காத குப்பையாக தரம் பிரித்து தரப்படுகிறது. மக்காத குப்பைகள் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தின் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்கும் வகையில் மாற்றப்படும். சேலம் மாநகராட்சிக்கு தேவையான குப்பை எடுக்கும் வாகனங்கள் மற்றும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சேலம் மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தூர், சத்தீஸ்கார் ஆகிய இடங்களுக்கு மேயர், நகராட்சி தலைவர்களை அழைத்து சென்று அங்கு பின்பற்றப்படும் தூய்மை நடவடிக்கைகளை இங்கு செயல்படுத்த உள்ளோம். இதன்மூலம் அடுத்த ஓராண்டில் சேலம் மாநகரில் எங்கும் குப்பை இல்லாத நிலை ஏற்படுத்தப்படும்.
சேலத்தில் அம்மா உணவகத்தை மூடும் திட்டம் அரசுக்கு எதுவும் இல்லை. அங்கு கூடுதல் பணியாளர்களை பணியில் அமர்த்தியதால் சம்பளம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. அம்மா உணவகத்தில் போதிய வருவாய் இல்லை. இதனால் சுழற்சி முறையில் அம்மா உணவகங்களில் பெண்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துவிட்டார். சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி உள்ளது. தேவையான நிதியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார்.
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
- அழகான இளம்பெண் போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, நைட்டி அணிந்து கொண்டு வந்த ஒரு வாலிபர், அலமேலு வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.
- திடீரென அந்த நபர் அலமேலு கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, அகத்தியர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 70). இவரது குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று விட்டனர். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த அலமேலு, தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது மாலை 3.15 மணியளவில், முழுக்க அலங்காரம் செய்து கொண்டு, அழகான இளம்பெண் போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொண்டு, நைட்டி அணிந்து கொண்டு வந்த ஒரு வாலிபர், அலமேலு வீட்டுக்கதவை தட்டியுள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்து வந்த மூதாட்டியிடம் அந்த நபர், "பாட்டி, இந்த பகுதியில் உள்ள எனது உறவினர் வீட்டிற்கு வந்தேன். முகவரி தேடி அலைந்து கொண்டிருக்கிறேன். கண்டு பிடிக்க முடியவில்லை. அலைந்து திரிந்து, களைப்பாக மயக்கம் வருகிறது. கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அந்த நபர் மூதாட்டியிடம் ஏதேதோ நைசாக பேசியபடி, அவரது கவனத்தை திசை திருப்ப முயற்சித்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர் அலமேலு கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க செயினை பறிக்க முயன்றார்.
இதனை சற்றும் எதிர்பாராத அலமேலு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மின்னல் வேகத்தில் சுதாரித்துக்கொண்ட மூதாட்டி, பெண் வேடமணிந்து வந்த அந்த வாலிபரை கெட்டியாக இறுக பிடித்துக்கொண்டு திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அலமேலு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் சுமார் 30 வயதுள்ள நபர் நைட்டி அணிந்து, பெண் வேடத்தில் அப்பகுதியில் நடந்து செல்வது தெரிந்தது. பெண் வேடம் அணிந்து வந்த வாலிபர், கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






