என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
- கடந்த சில வாரங்களாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 110.19 அடியாக உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.
மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த தண்ணீர், அணையில் இருந்து தொடர்ந்து 137 நாட்களுக்கு திறந்து விடப்படும். இதன்படி, கடந்த ஜூலை 16-ந் தேதி கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
கால்வாய் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு மேலும் 15 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் நேற்று 15-ந் தேதி மாலை 6 மணியுடன் கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதனிடையே கடந்த சில வாரங்களாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 1018 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம் 110.19 அடியாக உள்ளது.






