என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் தாதகாப்பட்டியில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை- 2 பேர் கைது
    X

    சேலம் தாதகாப்பட்டியில் வடமாநில வாலிபர் அடித்துக் கொலை- 2 பேர் கைது

    • வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்று அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் தாதகாப்பட்டி, சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (வயது 36). இவர் தாதகாப்பட்டி அடுத்த மூணாங்கரடு ரேஷன் கடை அருகில், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் சகானி என்பவரின் குருசரண் சகானி (32) என்பவர் கடந்த 1½ மாதங்களாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் குருசரண் சகானி மற்றும் நிறுவனத்தில் உடன் பணிபுரியும் அனில்(30), ராகேஷ்(32), அஜய்(29), ஆலோ (28) ஆகியோர் சேர்ந்து கொண்டு நேற்று மாலை சுமார் 3.30 மணியளவில் தாதகாப்பட்டி கேட் அம்மாள் ஏரி ரோடு மகா காளியம்மன் கோவில் அருகே உள்ள பகுதியில் மளிகைப் பொருட்கள் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூணாங்கரடு திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா(25), கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (28) ஆகிய இருவரும், மோட்டார் சைக்கிள் செல்வதற்கு ரோட்டில் ஒதுங்கி, ஓரமாக போக சொல்லி ஆரன் அடித்து சத்தம் எழுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் நகர்ந்து செல்லாமல் தொடர்ந்து நடந்து சென்றதாக தெரிகிறது.

    இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு, வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டர். அப்போது மோதல் முற்றி ஆத்திரமடைந்த ராஜா, சீனிவாசன் இருவரும், தங்களது கையால் குருசரண் கன்னத்தில் மாறிமாறி சரமாரியாக அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் தலையில் படுகாயமடைந்த அவர் அருகிலிருந்த பழைய சிமெண்ட் தண்ணீர் தொட்டியில் விழுந்து விட்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் குருசரணை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளர் முத்துகுமார் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் ராஜா, சீனிவாசன் ஆகிய இருவரையும் இன்று கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா? என்று அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாதகாப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×