என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனர் சாத்தான்குளம் சகாபுதீன் இல்ல திருமண விழாவில் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
    • மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த சிங்கப்பூர் தொழில் அதி பரும், ராமநாதபுரம் ஏஒன் திருமண மகால் நிறுவனருமான சகாபுதீன்-லைலத்து அரசியா பானு ஆகியோரது மகன் பட்டதாரி ஹபீப் ரகுமானுக்கும், புதுக்கோட்டையை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் முகமது ஹலீம்-ஜானம்மாள் ஆகியோரது மகள் பட்டதாரி இர்ஷாத் பர் ஹானாவுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப் பட்டது.

    இவர்களது திருமண நிக்கா ஏஒன் திருமண மகால் வளாகத்தில் சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் காபத்துல்லா, மலேசியா சாத்தான்குளம் ஜமாத் தலைவர் அயூப்கான், மற்றும் ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திருமண நிக்கா நிகழ்ச்சியை புதுக்கோட்டை தெற்கு 2-ம் வீதி ஜாமிஆ மஸ்ஜித் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் நடத்தி வைத்தனர். சாத்தான்குளம் பள்ளிவாசல் தலைமை இமாம் சுலைமான் சிறப்பு துவா ஓதி மணமக்களை வாழ்த்தினார்.

    முன்னதாக ஆலிம்கள் மணமக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றி மண மக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவில் கே.நவாஸ்கனி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, டாக்டர் மணிகண்டன் ஆகியோர் மணமக்களுக்கு நினைவு பரிசு கொடுத்து வாழ்த்தினர்.

    மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சியில் சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பிரமுகர்கள் தொழிலதி பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறை யினர், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வக்கீல்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்டிட பொறியாளர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஆலிம் பெருமக்கள் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா சிறப்பாக நடைபெற வேண்டி மணமக்களை வாழ்த்தி மணமகன் மாமா சித்தார்கோட்டை ரபி அகமது- பலிலா பேகம் குடும்பத்தினர். ராமநாதபுரம் என்.எஸ்.ஏ. குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் ஹசன் அலியார் மற்றும் குடும்பத்தினர், அல்பரிதா குரூப் ஆப் நிறுவனங்களின் தலைவர் அபுல்கலாம் குடும்பத்தினர், கீழக்கரை மெரினா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் சுல்தான் சம்சுல் கபீர் பாரதி நகர் அஜந்தா பேக்கரி எம். சுலைமான், திருச்செந்தூர் முருகன் டிரான்ஸ்போர்ட் நிறுவனர் என்.களஞ்சியம். என்.பத்மநாதன் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சாத்தான்குளத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் தொழில்அதிபர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    மணமக்கள் வீட்டார் சார் பில் சித்தார்கோட்டை ரபி அகமது, தீன் டிராவல்ஸ் உரி மையாளர் சாத்தான்குளம் உசைதீன் ஆகியோர்கள் வர வேற்றனர். ஏற்பாடுகளை மணமக்கள் வீட்டார் சார்பில் ஷஹ் பாஸ் முகம்மது, வஜிஹா பானு, நஜீப்முகம்மது, ஜஸ்ரா, முகம்மதுஹலீம், ஜானம்மாள், முகம்மது இர்பான், முகம்மது அலி ஜின்னா, ஜெய்த்துன்பீவி, முகம்மது கலிபுல் அமீன், அனீஸ் பாத்திமா உள்பட ஏஒன் மஹால் நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் செய் திருந்தனர். அனை வருக்கும் ஏஒன் மஹால் நிறுவனர் சகாபுதீன், குடும்பத்தினர் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

    • கீழக்கரையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு செய்தார். புகார் மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    • பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் பல்வேறு திட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து இன்று காலை நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா கீழக்கரையில் 2மணி நேரம் திடீர் ஆய்வு செய்தார், மாலாங்குண்டு, வடக்குத்தெரு மேல்நிலை குடிநீர் தொட்டி, கீழக்கரை பஸ் நிலையம், மீன் மார்க்கெட் ஆகியவற்றின் நிலை குறித்து பார்வை யிட்டார்.

    நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகளை ஆய்வு செய்து பணிகள் தரமான முறையில் மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இந்த பணிகள் தாமதம் இல்லாமல் குறித்த நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    மதுரை மண்டல நிர்வாக இயக்குநர் சரவணன், நகராட்சி பொறியாளர் மனோகரன், கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், நகராட்சி ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருள், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்பட பலர் உடன் சென்றனர்.

    நகராட்சி நிர்வாக இயக்குநரின் ஆய்வு குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு முன்னதாக தகவல் அளிக்கப்பட்டும், அவரது வருகை சம்பந்தமாக பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் கொடுக்காமல் ரகசியம் காத்தனர்.

    மேலும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தமாக புகார் மனு அளிக்கவும், புகார்களை தெரிவிக்கவும் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு வந்திருந்தனர். ஆனால் நிர்வாக இயக்குனர் ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பி விட்டதால் அவரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • ரேசன்கடை பொறுப்பாளர் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 9 கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராம ரேசன் கடையில் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் தலைமையில் நடந்தது. தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) தமிம்ராசா முன்னிலை வகித்தார். ரேசன் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 6 மனுக்களும், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் உட்பட 28 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார் ஆதி, ரேசன்கடை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • கீழக்கரையில் உலக மனித உரிமைகள் தின விழா நடந்தது.
    • பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து உலக மனித உரிமை தின விழாவை கீழக்கரையில் நடத்தியது.

    மக்கள் நல பாதுகாப்புக் கழக தலைவர் தமீமுதீன் தலைமை தாங்கினார். சட்ட விழிப்புணர்வு இயக்க செயலாளர் தாஜுல் அமீன் வரவேற்றார். ராமநாதபுரம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் ஷேக்இப்ராஹிம் சாதனையாளர்கள் மற்றும் தனியார் நிறுவனம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவரும், சென்னை ஐகோர்ட்டு வக்கீலுமான முஹம்மது சாலிஹ் ஹுசைன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி, தனியார் நிறு வனத்தின் இணை நிறுவனர் அப்துல் ரஹ்மான், ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் சுந்தரம் ஆகி யோர் பேசினர். சட்டம் சம்பந்தமான பொது மக்களின் கேள்விகளுக்கு வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர்.

    சட்ட விழிப்புணர்வு இயக்க பொருளாளர் ஜாபீர் சுலைமான் நன்றி கூறினார். மக்கள் நல பாதுகாப்புக் கழக செயலாளர் முகைதீன் இப்ராகீம் தொகுத்து வழங்கினார். இதில் 100-க்கும் அதிகமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடி யூனியன் கூட்டம் நடந்தது.
    • பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி யூனியன் கூட்டம் தலைவர் சிந்தாமணி முத்தையா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சரயு ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா முன்னிலை வகித்தனர். மேலாளர் லட்சுமி வரவேற்றார். கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசுகையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அறிவு சார் மையம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் கேட்கப்பட்டுள்ளது. யூனியன் அலுவலகத்தில் அதற்கான இடமில்லை.

    அறிவு சார் மையத்தை பரமக்குடி நகரின் மையப் பகுதியான பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், எமனேசுவரம் பகுதி, சந்தை கடை பகுதிகளில் அமைத்தால் பொதுமக்களுக்கு ஏதுவாக இருக்கும். அதேபோல் மையப் பகுதியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது. மாணவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் உம்முல் ஜாமியா, கலெக்டர் கேட்டுக் கொண்டதன் பேரில் அறிவு சார் மையம் அமைப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார். உடனே அனைத்து கவுன்சிலர்களும் அறிவுசார் மையத்திற்கு இடம் வழங்க முடியாது என்று ஏக மனதாக அந்த தீர்மானத்தை நீக்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி அந்த தீர்மானம் நிறைவேற்றப்படாமல் நீக்கப்பட்டது.

    துணைத் தலைவர் சரயு ராஜேந்திரன் பேசுகையில், பரமக்குடி யூனியனில் 39 பஞ்சாயத்துகள் உள்ளது. ஆனால் நிதி ஒவ்வொரு மாதமும் குறைவாகத்தான் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. யூனியனில் இருக்கும் நிதியையும் எங்கள் அனுமதி இல்லாமலேயே மாவட்ட நிர்வாகம் வங்கி கணக்கில் எடுத்து விடுகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், வளர்ச்சி திட்ட பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். தற்போது மழைக்காலமாக இருப்பதால் கூடுதலாக நிதி ஒதுக்கினால்தான் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆகவே கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.

    • உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு நிதி உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-2021 ம் ஆண்டு முதல் 2024-2025ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவ னங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில் நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

    மேலும் தனி நபர், உணவு பதப்படுத்தும் தொழிலில் புதிதாக ஈடுபடும் குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பொருள் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபட விருப்பம் உள்ள நபர்கள் குறைந்த பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு நபர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் பெற்று பயனடைய வழிவகை உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர், https://pmfme.mofpi.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

    மேலும் விபரங்கள் அறிய பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரியை அணுகவும். தகுதியுடைய பயனாளிகள் இத்திட்டத்தில் பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    • மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் நெல், மிளகாய், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு தற்போது களை எடுப்பு, பூச்சிமருந்து தெளிக்கும் பணி, உரமிடுதல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. சில நாட்களாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாண்டஸ் புயலால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும். பரவலாக மழை பெய்தது. அபிராமம் பகுதியிலும், ஒரளவுக்கு மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அபிராமம் விவசாயிகள் கூறுகையில், அபிராமம், அதை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த ஆண்டு பருவமழை இல்லாததால், மிகவும் சிரமப்பட்ட நிலையில் நெல், பருத்தி, மிளகாய், உளுந்து பயிர்கள் கருகும் நிலைக்கு வந்துவிட்டது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயலால் அபிராமம் பகுதி யில் ஒரளவுக்கு பெய்த மழையால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் மிளகாய், பருத்தி, உளுந்து பயிர்களுக்கு இந்த மழை போதுமானதாக உள்ளது. இந்த மழையால் பண்ணையில் உள்ள மிளகாய் நாற்றுகளை வயலில் நடுவதற்கும் மிளகாய் கன்றுகள் நன்றாக வளருவதற்கும் இந்த மழை போதுமானதாக உள்ளது என்றனர்.

    • குறை தீர்க்கும் மையத்தில் புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகி குறைகளை தெரிவிக்கலாம். (தொலைபேசி எண்: 044-25340518).

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2021-22-ம் ஆண்டின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதைத்தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலை வாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்களின் குறைகளை தெரிவிக்க எதுவாகவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் தங்களது குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    துணை இயக்குநர் (அமலாக்கம்), குறை தீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை -104 என முகவரியிட்டு கடிதம் மூலமாக நெசவாளர்கள் புகார்களை தெரிவிக்கலாம். நெசவாளர் குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகி குறைகளை தெரிவிக்கலாம். (தொலைபேசி எண்: 044-25340518).

    நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் இணைதளம் முகவரி:https://gdp.tn.gov.in/dhi நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் wgrcchennai@gmail.com மேற்கண்ட வழிகள் மூலமும் நெசவாளர்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் ரூ.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக்கணக்குக்குழுவினர் வழங்கினர்.
    • ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர் தொகுதி), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), பொது கணக்குக்குழு செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ராமேசுவரம் வட்டம் தனுஷ்கோடி பகுதியில் கடல் ஆமை குஞ்சு பொரிப்பகம், மண்டபம் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து பனைக்குளம் ஊராட்சி, பொன்குளம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள், சக்கரக்கோட்டை பகுதியில் உள்ள சிட்கோ அலுவலகம், தெற்குதரவை ஊராட்சியில் முன்னோடி விவசாயி இயற்கை வேளாண் முறையில் செய்யப்படும் பயிர் சாகுபடி ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

    பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 88 ஆயிரம் லட்சம் மதிப்பீட்டிலான நிவாரணத்தொகைக்கான ஆணைகள், சி சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.53,407 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.39 ஆயிரம் மதிப்பிலான உதவிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.38.04 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொதுக் கணக்குக்குழுவின் தலைவர் செல்வபெருந்தகை வழங்கி னார்.

    இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், மாவட்ட வருவாய் அலு வலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய கராத்தே போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டிகள் நடந்தன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோகாய் கராத்தே தோ பள்ளியை சேர்ந்த ராமநாதபுரம் மாணவர்கள் கட்டா மற்றும் ஷாய் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

    சென்சாய் விமல சண்முகவேல் மேற்பார்வையில் பயிலும் ராமநாதபுரம் ஷ்ரமல் அகாடமி மாணவர்கள் மற்றும் உச்சிப்புளியை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்றனர். குமிதே பிரிவில் பிரசன்னா, கருனேஷ் கார்த்திகேயன், மிர்திக்கா, ஜெயஜீத், அக்ஷிதா, கட்டா பிரிவில் பிரசன்னா, மிர்திக்கா தங்க பதக்கமும், ஷ்ரவன், பிரிதம், யோகேஷ் மகிபாலன், ஸ்ரீஹரன், நுதர்ஷன், முவிஸ் குமார், ஹரி பிரனவ், பிரஜீத், கருனேஸ் கார்த்திகேயன் ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.

    • அபிராமம் பகுதியில் கண்மாய்-ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன.
    • இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பருவமழை பொய்த்ததாலும், வைகை ஆற்று தண்ணீர் இந்த பகுதிக்கு வராததாலும் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், வல்லக்குளம், பொட்டகுளம், பாப்பனம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவமழையை நம்பி நெல், மிளகாய், பருத்தி, உளுந்து உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்கின்றனர்.

    இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் வறண்டு காணப்படுகிறது. வைகையாறு, கிருதுமால் நதி, பரளையாறு கால்வாய்களும் மண் மேடாகவும், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படுகிறது.

    இதனால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தற்போது அபிராமம் பகுதியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும் பருவமழை நேரத்தில் கண்மாய், ஊரணிகளில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதுடன், குடிநீர் பற்றாக்குறையையும் போக்கும்.

    தற்போது தண்ணீர் நிரம்பாததால் கண்மாய், ஊரணிகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக கோடை காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மழை காரணமாக இன்று ராமநாதபுரம், சிவகங்கையில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
    • பாம்பன் துறைமுகத்தில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    வங்கக்கடலில் உருவாகியுள்ள மான்டஸ் புயல் இன்று இரவு சென்னையில் கரை கடக்கிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்க ளில் ேலசான சாரல் மழை பெய்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இன்று காலையும் கருமேகங்கள் சூழ்ந்தன.

    ஆனால் மழை இல்லை. இருப்பினும் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

    ராமேசுவரம், ஏர்வாடி, தங்கச்சிமடம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. புயல் காரணமாக இன்றும் கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் 4-வது நாளாக இன்று கடலுக்கு செல்லவில்லை. ராமேசுவரம், பாம்பன் துறைமுகத்தில் 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

    சிவகங்கை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. வானிலை முன்னெச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவிட்டார். காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை, காளை யார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    மதுரையில் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையில் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. உசிலம்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், சோழவந்தான், சமயநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்தது. 

    ×