என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் 263 கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.

    பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 38-வது மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பாரதியார் தின குழு ஹாக்கி விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த போதைப்பொருட்களை அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதாக மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனடிப்படையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர் கடந்த 5 நாட்களாக ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    சம்பவத்தன்று இரவு சத்திரக்குடி அருகே போகலூர் சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து ராமநாதபுரம் சென்ற காரை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தனர்.

    அப்போது காரில் இருந்த 2 பேர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்தபோது, சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் போதைப்பொருட்களான கஞ்சா ஆயில் 50 கிலோ மற்றும் கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் 38 கிலோ கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.160 கோடி ஆகும். அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த லியோ பாக்கியராஜ் (வயது39), தனசேகரன் (32) என தெரியவந்தது. இவர்கள் ராமநாதபுரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்த போதைப்பொருட்களை அனுப்பியது யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.
    • ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகளில் இல்லை.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள ஓரியூர் கீழக்குடியிருப்பில் கல்வெட்டு இருப்பதாக நாகணி ஆசிரியர் அர்ச்சுனன், ஓரியூர் கண்ணன் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அந்த கல்வெட்டை ஆய்வு செய்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-

    சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையில் திரிசூலம் பொறித்த சூலக்கற்கள் நடுவது வழக்கம். சேதுபதி மன்னர் கால சூலக்கற்களில் பெரும்பாலும் கல்வெட்டு இருக்கும். ஆனால் பாண்டியர் கால சூலக்கற்களில் கல்வெட்டு இருப்பதில்லை. சூலம் மட்டுமே இருக்கும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக பாண்டியர் கால கல்வெட்டுடன் கூடிய சூலக்கல் ஓரியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஓரியூர் கீழக்குடியிருப்பு கால்வாய் பகுதியில் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ள ஒரு கருங்கல்லில் ஒருபுறம் 10 வரிகள் உள்ள கல்வெட்டும், மறுபுறம் திரிசூலமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் சில எழுத்துகள் அழிந்துள்ளன. எனினும் முயன்று படித்து இதன் முழு தகவலும் அறியப்பட்டது.

    அதாவது புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் சிவன் கோவிலுக்கு ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் கீழைக்குறுச்சி தேவதானமாக கொடுக்கப்பட்டுள்ளது. தானமாக கொடுக்கப்பட்ட நிலத்தில் பயிரிடும் உரிமை உலகுய்யவந்த நல்லூரைச் சேர்ந்த நின்ற நிலையன்றாதானான் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இது நிலத்தில் பயிரிடும் உரிமை வழங்கும் காராண்கிழமை கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டில் ஓரியூர் எனப்படும் ஊர் ஓரூரான வானவன் மாதேவி நல்லூர் எனவும், அதன் ஒரு பகுதியான கீழக்குடியிருப்பு கீழைக்குறுச்சி எனவும் குறிப்பிடப்படுகிறது.

    ஓரியூர் தேவதானமாக வழங்கப்பட்ட தகவல் திருப்புனவாசல் கோவில் கல்வெட்டுகளில் இல்லை. இந்த கல்வெட்டின் எழுத்து வடிவத்தை கொண்டு கி.பி.13-ம் நூற்றாண்டின் பிற்பகுதியை சேர்ந்தது எனலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பரமக்குடியில் தேசிய கராத்தே போட்டி நடந்தது.
    • இதில் வெண்கலம் வென்ற சிறுமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த குருநாதன்-கவிதா தம்பதியின் 10 வயது மகள் அனுஸ்ரீ. இவர் கடந்த வாரம் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். அதேபோல் 10 வயது சிறுவன் வசந்த் மாநில அளவில் நடந்த கராத்தே போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கங்கள் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய இருவருக்கும் ஸ்பார்க் கராத்தே அமைப்பு சார்பில் மாலை, சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்கள் வென்ற சிறுவர்-சிறுமிக்கும், பயிற்சியாளர்களுக்கும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • திருக்குறள் முற்றோதலுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறி உள்ளார்.
    • தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் முற்றோதல் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    2022-23-ம் ஆண்டிற்கு ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் இருந்து திருக்குறள் முற்றோதலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டியில் பங்கேற்ப வர்கள் 1,330 திருக்குறளையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    இயல் எண், அதிகாரம் எண், பெயர், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தல், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், சிறப்புகள் ஆகிய வற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

    திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பெற்று பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரைக்கப்படுவார்கள்.

    1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவ ர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்தப் பரிசை பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் பங்கேற்கக் கூடாது. போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் ராமநாதபுரம் மாவட்ட கருவூல அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் இயங்கும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithrurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04567-232130 என்ற எண்ணில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.12.2022. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    • ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெட்டிக்கடைக்காரர் பலியானார்.
    • இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பழங்கோட்டையை சேர்ந்தவர் பாலு (வயது 53).இவர் பெட்டிகடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது வீட்டின் மேல் பகுதியில் தேவி பட்டினத்தில் இருந்து திருப்பாலைக்குடி செல்லும் பிரதான மின்கம்பி செல்கிறது. மழையின் காரணமாக தொய்வடைந்து இருந்த இந்த மின்கம்பி குறித்து மின் வாரியத்திற்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் பாலு மாடிக்கு செல்லும் போது தலையில் மின் கம்பி உரசியதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட பாலு மனைவி மற்றும் அவரது தம்பி மனைவி ஆகியோர் அவரை காப்பாற்ற சென்றனர்.

    இதில் பாலுவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவர் திருப்பாலைக்குடி அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் முதலுதவி பெற்று ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்தபோது பாலு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார். காயமடைந்த பாலு தம்பி மனைவி காளிஸ்வரி (39) ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு காவலாளியின் மண்டை உடைந்தது.
    • ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கீழக்கரை

    நேபாள நாட்டை சேர்ந்தவர் நரேன் குமார் சஞ்சேல் (வயது 43). இவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத்தெரு பகுதியில் இரவு காவலாளியாக (கூர்க்கா) உள்ளார்.

    கண்ணாடி வாப்பா தர்கா செல்லும் சாலையில் ரோந்து சென்றார். அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் கூர்க்கா நரேன் குமாரை வழிமறித்து மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் நரேன்குமாரின் கட்டையால் தாக்கியதில் மண்டை உடைந்தது.

    அவர் கூச்சலிட்டதும் அக்கம், பக்கத்தினர் கூர்க்காவை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சதாம் உசேன் (31), முகம்மது கான் (28), பைசல் கான் (32), முகம்மது ஆதம் (30), ஜாவித் (22), அபுபக்கர் சித்திக் (24) ஆகியோர் மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை நகர் பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொள்ளாததால் அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். கீழக்கரை நகரில் இரவு நேர ரோந்து பணி மேற்கொள்ள ேபாலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மரகத நடராஜரின் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 5-ந்தேதி நடக்கிறது.
    • ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். இங்கு சிவபெருமான் மங்கள நாதராகவும், உமையம்மை மங்கள நாயகியாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.

    பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • அலுவலக கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
    • ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ரெயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்து பணிமனை அருகே யூனியன் அலுவலகம் அமைந்துள்ளது.

    இந்த அலுவலகம் 1963-ம் ஆண்டு கட்டப்பட்டு பழுதடைந்து நிலையில் இருந்து வந்தது. அடிக்கடி கட்டிட கூரைகள் இடிந்து விழுந்தன. பழைய கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு ரூ.3.67 கோடி செலவில் 2 மாடிகளுடன் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை யூனியன் தலைவர் கே.டி.பிரபாகரன் தலைமையில் நடந்தது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், சேவுகப் பெருமாள் முன்னிலை வகித்தனர். பொறியாளர்கள் அர்ஜுனன், கணபதி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • ஆண்டு முழுவதும் மரகத நடராஜர் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    ராமநாதபுரம் 

    ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான திருஉத்தரகோசமங்கை கோவில். பூலோகத்தில் தோன்றிய முதல் கோவிலான இங்கு மங்களநாதர், மங்களநாயகி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    மேலும், இங்கு எழுந்தருளி உள்ள ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை ஒலி, மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் மரகத சிலை அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும்.

    வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இதன்படி வருகிற 28-ந் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி காலை மரகத நடராஜர் மீது பூசப்பட்டு இருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதைதொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பால், பன்னீர், திரவியம், தேன், மஞ்சள் பொடி உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனம் களையப்பட்ட அபூர்வ மரகத நடராஜர் வைக்கப்பட்டிருக்கும்.

    பின்னர் அன்றைய தினம் இரவு 11 மணிக்குமேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் 6-ந் தேதி அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரத்தில் இளம்பெண் திடீர் மாயமானார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் யசோதா (வயது 43). இவர் ராமநாதபுரம் கோர்ட்டில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் அபிநயா (வயது21).

    தினந்தோறும் வேலைக்குச் சென்று விடுவதால் மகள் அபிநயா வீட்டில் தனியாக இருப்பதை யசோதா விரும்பவில்லை. இதனால் பாரதிநகரில் இருக்கும் தனது தாய் வீட்டில் மகளை விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    நேற்று காலையிலும் வழக்கம் போல் தனது தாய் வீட்டில் மகளை விட்டுவிட்டு யசோதா வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்த அபிநயாவை காணவில்லை என்று யாசோதாவுக்கு அவரது தாய் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வீட்டுக்கு வந்து அக்கம் பக்கத்தில் பல இடங்களில் மகளை தேடிப்பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் தனது மகள் மாயமானது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான அபிநயாவை தேடி வருகின்றனர்.

    ×